தேடுதல்

ஐவரி கோஸ்ட்டில் வேளாண்மை ஐவரி கோஸ்ட்டில் வேளாண்மை 

உலக உணவு அமைப்புமுறைகளில் நீதி அவசியம்

உலகளாவிய உணவு அமைப்புமுறைகள், சிறுதொழில் முனைவோர், குறுநில விவசாயிகள், பெரிய பண்ணைகளில் வேலைசெய்வோர் போன்றோரையே அதிகம் பாதித்துள்ளன - சுவிட்சர்லாந்து காரித்தாஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தற்போது உலக அளவில் நிலவும் உணவு பாதுகாப்பு, மற்றும் விநியோக அமைப்புமுறையில், நீதி அதிகம் தேவைப்படுகின்றது என்று, சுவிட்சர்லாந்து நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது,.

இம்மாதம் 14ம் தேதி முதல் 27ம் தேதி வரை, நியு யார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 76வது பொதுப் பேரவையில், செப்டம்பர் 23, இவ்வியாழனன்று, ஐ.நா.வின் உணவு அமைப்புகள் உச்சி மாநாடு இடம்பெறவிருப்பதை முன்னிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுவிட்சர்லாந்து காரித்தாஸ் நிறுவனம், தற்போதைய உலகளாவிய அமைப்புமுறைகளில் நிவர்த்திசெய்யப்படவேண்டிய அம்சங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்காலத்தில், பல நாடுகளில் இடம்பெறும் உணவு தொடர்புடைய பிரச்சனைகளுக்கு, காலநிலை மாற்றம், முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள காரித்தாஸ் நிறுவனம், கோவிட்-19 உருவாக்கியுள்ள நலவாழ்வு, மற்றும், பொருளாதார நெருக்கடிகளும், உலகளவில் உணவு பிரச்சனைகளை கூடுதலாக மோசமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

2021ம் ஆண்டின் இறுதியில், உலகளவில், 15 கோடிக்கு மேற்பட்ட மக்கள், தாங்கள் உயிர்வாழத் தேவையான உணவுக்கு விண்ணப்பிப்பர் என்று உலக வங்கி கணித்துள்ளவேளை, இவ்வெண்ணிக்கை நாற்பது கோடியாக அதிகரிக்கும் என்று, ஐ.நா. எதிர்பார்க்கிறது என்பதையும், காரித்தாஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய உணவு அமைப்புமுறை, சமுதாய அளவிலோ, சுற்றுச்சூழல் அளவிலோ இடம்பெறும் பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்தவிதத்திலும் உதவுவதாக இல்லை என உரைத்துள்ள காரித்தாஸ் நிறுவனம், பல நாடுகளில் விவசாயிகள், தங்கள் உற்பத்திகளை, பன்னாட்டு வர்த்தகர்களுக்கு விற்கும் நோக்கத்தில் உள்ளனர் என்றும், இந்த வர்த்தகத்தின் 90 விழுக்காடு, பத்து நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளது.

மொத்தத்தில், உலகளாவிய உணவு அமைப்புமுறைகள், சிறுதொழில் முனைவோர், குறுநில விவசாயிகள், பெரிய பண்ணைகளில் வேலைசெய்வோர் போன்றோரையே அதிகம் பாதித்துள்ளன என்றுரைத்துள்ள சுவிட்சர்லாந்து காரித்தாஸ் நிறுவனம்,  உலகளாவிய உணவு அமைப்புமுறைகளில் நீதி நிலவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2021, 16:07