தேடுதல்

உணவருந்தும் வேளையில் செல்லிடப் பேசியில் ஈடுபடும் இளையோர் உணவருந்தும் வேளையில் செல்லிடப் பேசியில் ஈடுபடும் இளையோர் 

மகிழ்வின் மந்திரம் : தொடர்புக்கருவியும், குடும்ப உறவும்

உணவருந்தும் வேளைகளில், ஒவ்வொருவரும் தங்கள் தொடர்புக்கருவிகளில் கவனம் செலுத்தும் பழக்கம், நம் குடும்பங்களில் நிகழ்கின்றது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

வாழ்வுப்பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் முதல் கல்விக்கூடம் குடும்பமே என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில் விளக்கிக்கூறியுள்ளார். இப்பிரிவில், 'கல்விபுகட்டும் சூழலாக விளங்கும் குடும்ப வாழ்வு' என்ற பகுதியின் இறுதி எண்ணங்களாக, குடும்பத்தில் தொடர்புக்கருவிகள் உருவாக்கும் தாக்கத்தைக் குறித்து, 278, 279 ஆகிய இரு பத்திகளில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களின் தொகுப்பு:

  • பெற்றோரும், குழந்தைகளும் ஒருவருக்கொருவர் கல்விபுகட்டுவதற்கு, தொடர்புக்கருவிகளும், ஊடகங்களும், உதவியாகவோ, தடையாகவோ அமையக்கூடும். வெவ்வேறு இடங்களில் வாழும் குடும்ப உறவுகளை இணைப்பதற்கும், குடும்பங்களில் உருவாகும் சிரமங்களைத் தீர்ப்பதற்கும், தகுந்த முறையில் பயன்படுத்தப்படும் தொடர்புக்கருவிகள், பெரும் உதவியாக இருக்கும்.
  • இருப்பினும், ஒருவரையொருவர் நேரில் சந்தித்துப் பேசுதல் என்ற அனுபவத்தை, இக்கருவிகள் வழங்க இயலாது. தொடர்புக்கருவிகள், நம்மை, ஒருவர் ஒருவரிடமிருந்து, எவ்வளவு தூரப்படுத்துகின்றன என்பதை அறிவோம். உணவருந்தும் வேளைகளில், ஒவ்வொருவரும் தங்கள் தொடர்புக்கருவிகளில் கவனம் செலுத்துதல், உறங்கச்செல்லும்போது, தம்பதியரில் ஒருவர், தொடர்புக்கருவிகளில் மூழ்கிவிடுவதால், அடுத்தவர், சலிப்புடன் உறங்கிவிடுதல் ஆகியவை, நம் குடும்பங்களில் நிகழ்கின்றன. இல்லத்தில் தொடர்புக்கருவிகளை எவ்வளவு தூரம் பயன்படுத்துவது என்பது பற்றிய முடிவுகளை, அனைவரும் கலந்துபேசி தீர்மானிக்கவேண்டும்.

குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் தொடர்புக்கருவிகள் வழியே வரும் ஆபத்துக்களை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது. இக்கருவிகள், நிகழ்கால, எதார்த்த உலகிலிருந்து, இளையோரை பிரித்து, தனிப்பட்ட உலகில் வாழ வைக்கின்றன. இவ்வாறு தனிமைபடுத்தப்பட்டவர்களை, சுயநலம் மிக்க பலர், தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். (278)

 

  • அதேவேளையில், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அளவுக்கதிகமாகக் கட்டுப்படுத்துவதும் ஆபத்தானது. தங்கள் பெற்றோர் மட்டுமே நம்பத்தகுந்தவர்கள் என்ற கருத்து ஆழமாக ஊட்டப்பட்டக் குழந்தைகளுக்கு, சமுதாயத்தில், ஏனையோருடன் உறவுகளை வளர்ப்பது பிரச்சனையாக மாறும்.
  • எனவே, குடும்பத்தில் நிகழும் கல்வி வழிமுறையில், கிறிஸ்தவ குழுமங்கள் உதவி செய்யவேண்டும். பெற்றோரின் கல்விக்கடமைகளில் உதவிசெய்ய, கத்தோலிக்கப் பள்ளிகள் ஆற்றவேண்டிய பங்கைக்குறித்து, ஆயர் மாமன்றம் வலியுறுத்தியுள்ளது. இளையோர் தகுந்த வளர்ச்சி பெறுவதில், பெற்றோருக்கும், கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களுக்கும் பொறுப்பு உள்ளது. (279) - (அன்பின் மகிழ்வு - 278,279)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2021, 13:24