தேடுதல்

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். (திருப்பாடல் 17:8) உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். (திருப்பாடல் 17:8) 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 5

7, 8 ஆகிய இரு இறைவாக்கியங்களில், இறைவன் வழங்கும் பாதுகாப்பை, மூன்று உருவகங்கள் வழியே உணர்த்துகிறார், தாவீது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 5

அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள், இரு வாரங்களுக்குமுன், செப்டம்பர் 3ம் தேதி வெளியிட்ட ஓர் அரசாணையின் அறிமுக வரிகள் இவை:

  • "2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி (9/11) நடைபெற்ற அரக்கத்தனமான தாக்குதல்களின் முழு விவரங்களை அறிவதற்கு, இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இந்த தாக்குதல்களில் தப்பிப் பிழைத்தவர்கள் ஆகியோர் உட்பட, பல அமெரிக்கர்கள் விழைகின்றனர். இந்தத் தாக்குதல்களின் 20ம் ஆண்டு நெருங்கிவரும் வேளையில், இந்த தாக்குதல்களைப் பற்றி அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுக்குத் தெரிந்த தகவல்களைப் பெறுவதற்கு, அமெரிக்க மக்களுக்கு உரிமை உள்ளது"

நியூ யார்க் நகரில் கட்ட்ப்பட்டிருந்த இரட்டை வர்த்தகக் கோபுரங்கள், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைமையகமான, 'பென்டகன்' என்ற கட்டடம் ஆகியவற்றில், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களைப்பற்றிய முழு உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதை வலியுறுத்தி, அரசுத்தலைவர் பைடன் அவர்கள், இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். இதற்குப் பிறகாவது, முழு உண்மைகள் வெளிவருமா என்பதை, காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேபோல், உலகின் பல நாடுகளில், மக்களின் கண்முன்னே, பட்டப்பகலில், பொது இடங்களில் நடைபெற்ற பல வன்முறைகள், இன்னும் தீர்க்கப்படாத வழக்குகளாக நீதிமன்றங்களில் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் நடைபெற்ற மும்பை கலவரம், கந்தமால் கலவரம், குஜராத் கலவரம், தூத்துக்குடி 'ஸ்டெர்லைட்' துப்பாக்கிச்சூடு, இன்னும், ஒவ்வோர் ஆண்டும், தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் அனைத்தும், பல்வேறு வழக்குகளாக நீதிமன்றங்களில் குவிந்துள்ளன. இந்த வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் எனில், அந்த வழக்கின் தீர்ப்புகள் முடக்கப்படலாம், அல்லது, திரித்துச் சொல்லப்படலாம்.

அத்தகைய ஒரு சூழலை, தாவீது சந்தித்தார். தன் உயிரைக் கொல்ல வெறிகொண்டு அலைவது, மன்னர் சவுல் என்பதால், அவரைப்பற்றிய வழக்கை, தாவீது, வேறு யாரிடமும் கொண்டுசெல்ல வழியின்றி, கடவுளின் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றார் என்பதை, 17ம் திருப்பாடல் உணர்த்துகிறது.

இறைவனின் நீதிமன்றத்தில், "ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்று தன் வழக்கைத் துவங்கிய தாவீது, இந்த வழக்கின் தீர்ப்பு, அதாவது, தனக்குரிய நீதி, 'இறைவன் முன்னிலையிலிருந்து கிடைக்கவேண்டும்' (காண்க. திபா 17:2) என்பதையும், இவ்வழக்கின் துவக்கத்திலேயே தெளிவாகக் கூறியுள்ளார்.

15 இறைவாக்கியங்களைக் கொண்ட 17ம் திருப்பாடலில், 1 முதல் 9 முடிய உள்ள முதல் பகுதியில், தாவீது, தான் குற்றமற்றவர் என்பதை, முதல் 5 இறைவாக்கியங்களில், பல வழிகளில், ஆண்டவரிடம் கூறுகிறார். இதைத்தொடர்ந்து, 6 முதல் 9 முடிய உள்ள 4 இறைவாக்கியங்களில், தன்னை இறைவன் காத்தருளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைக்கிறார். இந்த விண்ணப்பத்தில், 7, 8 ஆகிய இரு இறைவாக்கியங்களில், இறைவன் வழங்கும் பாதுகாப்பை, மூன்று உருவகங்கள் வழியே உணர்த்துகிறார், தாவீது.

  • திருப்பாடல் 17:7
  • உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்: உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

என்ற வரிகளில், இறைவனின் 'வலக்கரம்' என்று, தாவீது பயன்படுத்தியுள்ள முதல் உருவகம், விவிலியத்தில் வேறு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விவிலியத்தில், 'ஆண்டவரின் வலக்கரம்' என்ற உருவகமும், ‘ஆண்டவரின் வலப்புறம்’ என்ற உருவகமும், இரு பொருள்களை உணர்த்துகின்றன. ஆண்டவரின் ஆற்றலையும், அவர் வழங்கும் பாதுகாப்பையும் உணர்த்த, 'வலக்கரம்' என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • வன்மைமிக்கது உமது புயம்; வலிமைகொண்டது உமது கை; உயர்ந்து நிற்பது உம் வலக்கை (திருப்பாடல் 89:13) என்று, 89ம் திருப்பாடலிலும்,
  • நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. (திருப்பாடல் 63:8) என்று, 63ம் திருப்பாடலிலும், தாவீது உறுதியுடன் கூறுகிறார்.

அதேவண்ணம், இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் வழங்கும் உறுதிமொழியில், “அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்” (எசாயா 41:10) என்று கூறியுள்ளதை, இறைவாக்கினர் எசாயா பதிவுசெய்துள்ளார்.

இவ்வாறு, 'ஆண்டவரின் வலக்கரம்' என்ற உருவகம், ஆற்றலையும், பாதுகாப்பையும் உணர்த்த பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ‘ஆண்டவரின் வலப்புறம்’ என்ற உருவகம், ஒருவருக்கு உரிய மாண்பை வழங்கும் அடையாளமாக விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவரின் வலப்புறத்தில் அமரும் மகிமை, இயேசுவுக்கு வழங்கப்பட்டது என்பதை, தாவீது ஏற்கனவே, 110ம் திருப்பாடலில் முன்மொழிந்துள்ளார்:

  • ஆண்டவர் என் தலைவரிடம் ‘நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். (திருப்பாடல் 110:1)

இந்த வரிகளை, தாவீது, தன்னைப்பற்றி அல்ல, மாறாக, இயேசுவைப்பற்றிக் கூறினார் என்று, நாம் புதிய ஏற்பாட்டில் இருமுறை வாசிக்கிறோம். (காண்க. மத்தேயு 22:44; திருத்தூதர் பணிகள் 2:34)

தன் பாடுகளின்போது, தலைமைச் சங்கத்திற்குமுன் இழுத்துச் செல்லப்பட்ட இயேசுவிடம், "நீ மேசியா தானா? எங்களிடம் சொல்" (லூக்கா 22:67) என்று மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கேட்டபோது, இயேசு பதில் மொழியாக, "இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்" (லூக்கா 22:69) என்று சொல்கிறார். அவர் தன்னை கடவுளுக்கு இணையாக உயர்த்தினார் என்று அனைவரும் ஆத்திரம் அடைகின்றனர்.

தன் நற்செய்தியின் இறுதி வரிகளில், மாற்கு, இயேசுவின் விண்ணேற்றத்தை சித்திரிக்கும்போது, கடவுளின் வலப்புறம் என்ற சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார்: இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு, விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். (மாற்கு 16:!9).

திருத்தொண்டரான ஸ்தேவான், தன் மரணத்திற்குமுன் கூறும் சொற்களில், இயேசு கடவுளின் வலப்பக்கம் இருக்கிறார் என்று பறைசாற்றியது திருத்தூதர் பணிகள் நூலில் பதிவாகியுள்ளது. அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார். (தி. பணிகள் 7:55-56)

வலிமையும், மாண்பும் கொண்ட வலக்கரத்தால், ஆண்டவர் தன்னை விடுவிக்கவேண்டும் என்ற உருவகத்தைப் பயன்படுத்தும் தாவீது, அடுத்த இறைவாக்கியத்தில், இறைவனின் பாதுகாப்பை உணர்த்த, 'கண்ணின் மணி', ‘சிறகுகளின் நிழல்’ என்ற இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். (திருப்பாடல் 17:8)

நம் உடலின் மிக மென்மையான, அதேவேளையில், மிக முக்கியமான பகுதியாக விளங்குவன, நம் கண்கள். கண்களின் முக்கியத்துவத்தை, இயேசு, மலைப்பொழிவில் தெளிவாக உணர்த்தியுள்ளார்

"கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்." (மத்தேயு 6:22-23)

எனவே, கண்களைப் பாதுகாக்க, பல கவசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உறுதியான எலும்பு அமைப்பைக் கொண்ட மண்டையோட்டில், ஒரு குழியான பகுதியில் கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்களில் எந்தத் தூசியும் விழாமல் தடுக்கும் இமைகளும், நெற்றியிலிருந்து வழியும் வியர்வையைத் தடுக்க கண்ணுக்கு மேலே புருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை பாதுகாப்பையும் தாண்டி, ஒருவேளை, நம் விழிகளில் தூசி விழுந்தால் அதை, உடனடியாகக் கழுவி, சுத்தம் செய்ய, கண்ணீர் சுரப்பிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்தனை பாதுகாப்புடன் காக்கப்படும் கண்ணில், கருவிழிக்கு நடுவே அமைந்துள்ள கருமையான துளையே, 'கண்ணின் மணி' என அழைக்கப்படுகிறது. இந்தக் கருந்துளையானது, சுருங்கி, விரிந்து, தேவையான அளவு ஒளியை உள்ளே அனுமதிப்பதால், நம் விழித்திரையின் மீது, நாம் காணும் பொருள்களின் பிம்பங்கள் பதிகின்றன.

கண்ணின் மணி, இத்தனை பாதுகாப்புகளுடன் அமைந்துள்ளதை மனதில் கொண்டு, அத்தகைய பாதுகாப்பை இறைவன் தனக்கு வழங்கவேண்டும் என்று தாவீது வேண்டுகிறார். இதைத் தொடர்ந்து, தாவீது பயன்படுத்தியுள்ள 'சிறகுகளின் நிழல்' என்ற உருவகத்தின் பொருளையும், இன்னும் 17ம் திருப்பாடலில் பதிவாகியுள்ள ஏனைய எண்ணங்களையும் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2021, 13:32