தேடுதல்

"கடவுளின் குழந்தைகளைப் பாதுகாக்க" கருத்தரங்கில் Grzegorz Strzelczykjpg அவர்கள் உரை வழங்குதல் "கடவுளின் குழந்தைகளைப் பாதுகாக்க" கருத்தரங்கில் Grzegorz Strzelczykjpg அவர்கள் உரை வழங்குதல் 

பாலியல் முறைகேடுகளின் இறையியல் தாக்கங்கள்

அருள்பணித்துவ அருளடையாளத்தைக் குறித்த ஒரு சில குறுகிய இறையியல் கண்ணோட்டங்கள், பாலியல் முறை தவறுகளுக்கு மறைமுகமாக வழிவகுத்துள்ளன - அருள்பணி Grzegorz Strzelczyk

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறார் பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு, திருஅவை அளித்து வரும் பதிலிறுப்புகள், சட்டரீதியாகவும், மனநல ரீதியாகவும் இதுவரை அமைந்துள்ளன, இந்த குற்றச்சாட்டைப் பொருத்தவரை சரியான இறையியல் விவாதங்கள் இதுவரை நடத்தப்படவில்லை என்று, இறையியல் வல்லுநர் ஒருவர், ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

"கடவுளின் குழந்தைகளைப் பாதுகாக்க" என்ற தலைப்புடன், செப்டம்பர் 19ம் தேதி முதல், 22ம் தேதி முடிய போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், போலந்து நாட்டின் இறையியல் பேராசிரியர், அருள்பணி Grzegorz Strzelczyk அவர்கள், செப்டம்பர் 21 இச்செவ்வாயன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

திருஅவையின் இறையியல் எண்ணங்களில் நுழைந்துவிட்ட ஒரு சில அம்சங்கள், குறிப்பாக, அருள்பணித்துவ அருளடையாளத்தைக் குறித்த ஒரு சில குறுகிய கண்ணோட்டங்கள், இத்தகைய தவறுகளுக்கு மறைமுகமாக வழிவகுத்துள்ளன என்று அருள்பணி Strzelczyk அவர்கள், தன் உரையில் கூறினார்.

இத்தகைய குறுகிய கண்ணோட்டத்தின் விளைவாக, ஆயர்கள், தங்கள் அருள்பணியாளர்கள் சிலரின் தவறுகளை மூடிமறைக்க முயன்று, அதனால், கொடுமை இழைக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் காயங்களை உருவாக்கியதோடு, திருஅவையின் நம்பகத்தன்மைக்கும் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளனர் என்று அருள்பணி Strzelczyk அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அருள்பணித்துவ வாழ்வு என்பது, சாட்சிய வாழ்வாக இருப்பதே அதன் முதல் அம்சம் என்பதை மறந்து, அதனை, அதிகார கட்டமைப்புகளைக் காப்பாற்றும் ஒரு பணியாக மாற்றியதால், இத்தகையப் பிரச்சனைகள் பெரிதும் வளர்ந்தன என்று கூறிய அருள்பணி Strzelczyk அவர்கள், இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் தேவையான ஒரு வழி, அருள்பணித்துவ வாழ்வு, மீண்டும் சாட்சிய வாழ்வாக மாறுவதே என்பதை வலியுறுத்திக் கூறினார்.

சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் உதவியுடன், செப்டம்பர் 19, ஞாயிறு முதல் 22 புதன் முடிய வார்சாவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் 20 நாடுகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2021, 14:07