தேடுதல்

இஸ்பெயின் பாப்பிறை மறைப்பணி கழகத்தின் மறைப்பரப்பு நாள் இணையதளம் Domund - கோப்புப் படம் இஸ்பெயின் பாப்பிறை மறைப்பணி கழகத்தின் மறைப்பரப்பு நாள் இணையதளம் Domund - கோப்புப் படம் 

இஸ்பெயின் இளையோரின் மறைப்பணி சான்று வாழ்வு

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி ஞாயிறன்று, 95வது உலக மறைபரப்பு நாள், சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருகிற அக்டோபர் மாதம் மூன்றாவது ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மறைப்பரப்பு நாள் தயாரிப்புக்களின் ஒரு பகுதியாக, இஸ்பெயின் நாட்டின் பாப்பிறை மறைப்பணி கழகம் (PMS), இளையோரின் மறைப்பணி அனுபவங்களைக் கொண்ட காணொளிகளை வெளியிட்டுள்ளது.

"நீங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரையுங்கள்" (தி.ப.4:20) என்ற தலைப்பில் இவ்வாண்டில் உலக மறைப்பரப்பு நாள் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, இஸ்பெயின் நாட்டின் பல்வேறு இளையோர், தங்களின் மறைப்பணிகளில், பார்த்தவை, கேட்டவை போன்றவற்றைப் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை, அக்கழகம் காணொளிகளாக வெளியிட்டுள்ளது.

“Domund” என்ற பெயரில், தன் இணையதள பக்கத்தில் (www.domund.es) மறைப்பணிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுவரும், இஸ்பெயின் நாட்டின் பாப்பிறை மறைப்பணி கழகம், Javier López-Frías, Toni Miró, Patricia Ruiz, Ana Zornoza, Luisa Moreno ஆகிய ஐந்து இளையோர், இஸ்பெயினின் பல்வேறு பகுதிகள், தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் மறைப்பணியாற்றியபோது அவர்கள், பார்த்தவற்றையும், கேட்டவற்றையும் காணொளிகளாக வெளியிட்டுள்ளது.

இந்த காணொளிகள் பற்றி பீதேஸ் செய்தியிடம் பேசியுள்ள இஸ்பெயின் நாட்டின் பாப்பிறை மறைப்பணி கழகத்தின் இயக்குனர் José María Calderón அவர்கள், நாம்  கண்டதையும் கேட்டதையும் பகிர்ந்துகொள்வதற்கு, இளையோரைவிட சிறந்தவர்கள் இருக்க இயலாது என்று கூறியுள்ளார். (Fides)

95வது மறைபரப்பு உலக நாள், இவ்வாண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.

1922ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், விசுவாசப் பரப்பு கழகத்தை உருவாக்கினார். பின்னர், இக்கழகம் கேட்டுக்கொண்டதன் பேரில், 1926ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியன்று, அதே திருத்தந்தை, உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் ஒரே நாளில், மறைப்பணித்தளங்களுக்காகச் செபிக்கும் நாளுக்கு அனுமதியளித்தார். இவ்வாறு மறைபரப்புக்காகச் செபிக்கும் உலக நாள் உருவானது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2021, 14:27