தேடுதல்

"இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்." மாற்கு 9,37 "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்." மாற்கு 9,37 

பொதுக்காலம் 25ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இன்றைய நற்செய்தியில், ஒரு குழந்தையின் வழியாக இயேசு சொல்லித்தரும் பாடங்களை நாம் ஓரளவாகிலும் கற்றுக்கொள்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 25ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

நியூ யார்க் நகரின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்த பல அடையாளங்களில் ஒன்றான, உலக வர்த்தக இரட்டைக் கோபுரங்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, தீவிரவாதிகளின் தாக்குதலால் தரைமட்டமாயின. அந்தத் தாக்குதலின் 20ம் ஆண்டு நினைவு, சென்ற சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களின் நினைவை ஆக்கிரமிக்கும் இந்தத் தாக்குதல் நிகழ்ந்த அதே செப்டம்பர் மாதத்தில், அண்மைய ஆண்டுகளில், அமெரிக்க மக்களின் உள்ளங்களில், நூல் வடிவில் மூன்று தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாண்டு, செப்டம்பர் 21, வருகிற செவ்வாயன்று, 'Peril', அதாவது, 'பேராபத்து' என்ற தலைப்பில், நூல் ஒன்று வெளியாகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், அரசுத்தலைவர் தேர்தலில் தோற்றுப்போனதை ஏற்றுக்கொள்ளமுடியாமல், தன் அதிகாரத்தை நிலைநாட்ட, அவர் மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றி, அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய சிலர் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், இந்நூலில் பதிவாகியுள்ளன.

அக்கருத்துக்களில் ஒன்றாக, அமெரிக்க இராணுவத்தின் உயர்நிலை அதிகாரியான தளபதி Mark Milley அவர்கள் கூறியுள்ள தகவல்கள், அந்நாடு, எத்தகைய 'பேராபத்தில்' இருந்தது என்பதைக் கூறுகின்றன. அதிகாரத்தை இழக்க மனமில்லாத டிரம்ப் அவர்கள், தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, ஒரு போரை, அதுவும், அணு ஆயுதப் போரை ஆரம்பிக்கக்கூடும் என்று தான் கருதியதாக Milley அவர்கள் கூறியுள்ளார். அணு ஆயுதக்கணைகளை ஏவும் அதிகாரம் அமெரிக்க அரசுத்தலைவருக்கு உண்டு என்பதை அறிந்த இராணுவத் தலைவர்கள், டிரம்ப் அவர்கள், தனித்து அந்த முடிவை எடுக்க முடியாதவண்ணம், எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்திருந்ததாக, தளபதி Milley அவர்கள் கூறியது, இந்நூலில் பதிவாகியுள்ளது. பதவி வெறி, ஒருவரை, எவ்வளவு தூரத்திற்கு ஆட்டிப்படைக்கும் என்பதற்கு, தேர்தலில் தோற்றுப்போன டிரம்ப் ஓர் எடுத்துக்காட்டு.

செப்டம்பர் 21ம் தேதி வெளிவரவிருக்கும் 'Peril' என்ற இந்நூலை எழுதிய Bob Woodward அவர்கள், இதற்கு முன்னதாக, டிரம்ப் அவர்கள் அரசுத்தலைவராக இருந்த வேளையில், வேறு இரு நூல்களை, இரு வேறு ஆண்டுகளில், செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டிருந்தார். 'Fear', அதாவது, 'அச்சம்', என்ற நூலும், 'Rage' அதாவது, 'கட்டுக்கடங்காத ஆத்திரம்' என்ற அவ்விரு நூல்களும், டிரம்ப் அவர்கள் அரசுத்தலைவராக இருந்தபோது கொண்டிருந்த அதிகார வெறியின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர்ந்தன.

டிரம்ப் அவர்கள் மட்டும் அதிகார வெறியால் பாதிக்கப்பட்டவர் அல்ல, இதே வெறி, இன்றைய உலகத்தலைவர்கள் பலரிடம் உள்ளது. ஏனைய தலைவர்கள், தங்கள் பதவி வெறியின் அவலங்கள் வெளிவராதவண்ணம், ஊடகங்களை ஊமையாக்கி வைத்துள்ளனர்.

உலகத்தலைவர்களிடையே அதிகார ஆணவம் எவ்வளவுதூரம் கட்டுக்கடங்காமல் வளர்ந்துள்ளது என்பதை, 2019ம் ஆண்டு, David Miliband அவர்கள் வழங்கிய ஓர் உரையில் கூறியுள்ளார். உலக அளவில், துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஓர் அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் Miliband அவர்கள், "அதிகாரத்தின் புதிய ஆணவம்: தண்டனையற்றுப்போன காலத்தில் உலக அரசியல்" என்ற தலைப்பில், இந்த உரையை வழங்கினார். தன் உரையின் துவக்கத்தில் அவர் பதிவுசெய்துள்ள ஒரு கூற்று, இன்றைய உலகத்தலைவர்களைப் பற்றிய ஓர் எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது:

"இன்று உலகெங்கும் பரவியுள்ள ஓர் ஆபத்தான போக்கு, என் உரையின் மையக்கவலையாக உள்ளது. அதாவது, நாம் தற்போது தண்டனையற்றுப்போன ஒரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்". இவ்வாறு தன் உரையைத் துவக்கிய Miliband அவர்கள், 'தண்டனையற்றுப்போன காலம்' என்ற சொற்றொடரின் விளக்கத்தை வழங்குகிறார். பதவியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள், தங்களை எந்தச் சட்டமும், தண்டனையும் நெருங்கமுடியாது, தாங்கள், அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற மமதையில் செய்யும் அக்கிரமங்களை, அவர் தன் உரையில் பட்டியலிட்டுள்ளார்.

ஆயுதக்குவிப்பு, ஆயுத பயன்பாடு, தீவிரவாதத் தூண்டுதல், மோதல்களை உருவாக்குதல், மோதல்கள் நிகழும் இடங்களில், மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் தடுத்தல், என்ற பல்வேறு குற்றங்களை, அதிகாரத்தில் இருப்போர், எவ்வித தயக்கமும் இன்றி செய்கின்றனர், ஏனெனில், அவர்களை யாரும், எதுவும் நெருங்கமுடியாது என்பதை நன்கு உறுதிசெய்துள்ளனர் என்று Miliband அவர்கள் கூறியுள்ளார். அதிகாரத்தில் இருப்போரின் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொணர்வோரையும், மனிதாபிமானப் பணிகள் புரிவோரையும் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை என்பதையும், Miliband அவர்கள், எடுத்துக்காட்டுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களை யாரும், எதுவும் செய்துவிடமுடியாது என்ற அதிகார ஆணவத்தில் செயல்பட்டவர்களின் குற்றங்களை வெளிச்சமிட்டு காட்டிய அருள்பணி ஸ்டான் சுவாமி போன்றோர் கொல்லப்பட்டது, இன்னும் நம் நினைவுகளில் ஆழப்பதிந்துள்ளது.

அநீதிகளைத் தட்டிக்கேட்போரும், அந்த அநீதிகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்வோரும் எளிதில் கொல்லப்படுகின்றனர் என்று Miliband அவர்கள் கூறியுள்ளதன் எதிரொலியை, இன்றைய வழிபாட்டின் முதல் வாசகத்தில் நாம் இவ்வாறு கேட்கிறோம்:

சாலமோனின் ஞானம் 2: 12,20

பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்வதாவது: "‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்: ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.'

இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு, அதிகார வெறிபிடித்தோருக்கு சவால்களை விடுத்துள்ளார்:

யாக்கோபு திருமுகம் 3: 16, 4: 1-2

பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும்... உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; போராசை கொள்கிறீர்கள்; அதைப் பெறமுடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள்.

தன் சீடர்கள் நடுவே, பதவி மோகம் தலைதூக்கியதை, இயேசு, அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவரும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியில் பதிவாகியுள்ளது. தன் சீடர்களின் பதவி மோகத்திற்கு சவால் விடுத்த இயேசு, அத்துடன் நின்றுவிடாமல், அந்த நோய்க்கு ஒரு மாற்று மருந்தையும் இன்றைய நற்செய்தியில் தருகின்றார்:

மாற்கு நற்செய்தி 9: 35-37

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர், அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்' என்றார். பிறகு, அவர், ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக்கொண்டு, 'இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்' என்றார்.

குழந்தைகளை ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களைப்போல் மாறுவதற்கும் இயேசு தன் சீடர்களுக்கு அன்று விடுத்த சவால், இந்த ஞாயிறு நமக்கும் விடுக்கப்படுகின்றது. குழந்தைகள் உலகம் அழகானது. அங்கு உண்மைகள் எளிதாகப் பேசப்படும். அந்த உலகை நாம் கடந்துவிட்டோம் என்பதால், அதை மறந்துவிடவேண்டும் என்ற அவசியமில்லை. பார்க்கப்போனால், அவ்வப்போது அந்தப் பள்ளிக்குள் மீண்டும் சென்று, பாடங்கள் பயில்வது, நம் வாழ்வை மேன்மையாக்கும், மென்மையாக்கும்.

ஞாயிற்றுக்கிழமையன்று, பங்குக்கோவில் ஒன்றில், மறைக்கல்வி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. மறைக்கல்வி ஆசிரியர், குழந்தைகளிடம், "கோவிலில், திருப்பலி நடக்குபோது, நாம் சப்தம் போடக்கூடாது. ஏன்? சொல்லுங்கள்" என்று கேட்டார். ஒரு சிறுவன் எழுந்து, "ஏன்னா, கோவில்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அதனாலதான்" என்று தயக்கமில்லாமல் பதில் சொன்னான்.

தயக்கமின்றி உண்மைகள் பேசும் குழந்தைகளுக்குமுன், நாம் எதைப் பேசுகிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பது முக்கியம். நமது கண்ணாடி பிரதிபலிப்புகள், குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள்.

வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார், ஒரு வீட்டுத்தலைவி. நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகள், அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த வீட்டுத்தலைவி, சமையலறைக்குள் போனதும், குட்டிமகள் கூட இருக்கிறாளே என்ற எண்ணம் சிறிதுமின்றி, வந்திருந்தவர்களை, வாய் நிறைய வசைப்பாடிக் கொண்டிருந்தார்.

விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால், செபம் சொல்லும்மா" என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே" என்றாள் மகள். "அம்மா என்ன சொல்வாங்களோ, அப்படி சொல்லும்மா" என்றார், அப்பா. உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து, என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே" என்று வேண்டினாள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது, செய்வது, எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.

முதிர்ச்சி அடைந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும் நாம், நம்மைப்போல் குழந்தைகளை மாற்றமுயல்கிறோம். நம்மிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மாறாக, 'குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்' என்று இயேசு வலியுறுத்துகிறார்.

குழந்தைகளைப் பற்றி பேசும்போது,  குழந்தைப்பருவம் திருடப்பட்ட குழந்தைகளை, வளர்ந்துவிட்டவர்கள் உலகில், வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் குழந்தைகளை, நினைத்துப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. வறுமைப்பட்ட பல நாடுகளில், உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களை, இவ்வேளையில் நினைத்துப் பார்க்கவேண்டும். நமது உழைப்பால், குழந்தைகளை வளர்க்கவேண்டியது நமது கடமை. இதற்கு மாறாக, அவர்களது உழைப்பில் நாம் சுகம்காண்பது பெரும் குற்றம்.

துப்பாக்கிக் கலாச்சாரத்தை பீடமேற்றி, தூபம் காட்டிவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டில், வயதில் வளர்ந்தவர்களுக்கு, 6 வயது சிறுமி, 2018ம் ஆண்டு விடுத்த ஒரு வேண்டுகோள், சமூக வலைத்தளங்களில் இன்றும், ஆயிரக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. பால்டிமோர் நகரைச் சேர்ந்த, கெல்சி ஹைன்ஸ் (Kelsey Hines) என்ற சிறுமி, கெஞ்சிக் கேட்பது இதுதான்: "தயவுசெய்து, எங்களை, வீட்டுக்கு வெளியே, பயமின்றி, விளையாடவிடுங்கள். நாங்கள் வாழவிரும்புகிறோம். நாங்கள் இப்போதே விண்ணகம் செல்ல விரும்பவில்லை. எங்களுக்கு ஆண்டவர்மீது அன்பு உண்டு. ஆனால், அவர் எப்போது எங்களை அவரிடம் வரச்சொல்கிறாரோ, அப்போது நாங்கள் அவரைச் சந்திக்க தயாராக இருப்போம். அதற்குமுன் நீங்கள் எங்களை அங்கு அவசரப்பட்டு அனுப்பிவிடாதீர்கள். தயவுசெய்து எங்களைக் கொல்லாதீர்கள்."

துப்பாக்கிக் கலாச்சாரம் எப்படி இளம் உயிர்களை, தேவையில்லாமல் பறிக்கின்றது என்ற கொடுமையை, இதைவிட தெளிவாக யாராவது வெளிச்சமிட்டு காட்டமுடியுமா என்று தெரியவில்லை.

அதேபோல், பாலின வன்கொடுமைகளுக்கு பலியாகும் இந்தியச் சிறுமிகளும், "வீட்டுக்கு வெளியிலும், பள்ளியிலும், எங்களை பயமின்றி விளையாடவிடுங்கள். கடைக்குப் போய் பொருள்கள் வாங்கிவரவிடுங்கள்" என்ற வேண்டுகோளை, வயதில் வளர்ந்துவிட்ட இந்திய ஆண்களிடம் கேட்பதாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இன்றைய நற்செய்தியில், ஒரு குழந்தையின் வழியாக இயேசு சொல்லித்தரும் பாடங்களை நாம் ஓரளவாகிலும் கற்றுக்கொள்வோம். குழந்தைகளைக் குழந்தைகளாகவே வாழவிடுவோம். அவர்களை, நம்மைப்போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளின் மனப்பக்குவத்துடன் வாழ முயல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2021, 13:37