தேடுதல்

"நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." லூக்கா 21:28 "நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." லூக்கா 21:28 

திருவருகைக் காலம் - முதல் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்த நிகழ்வுகளை, குறிப்பாக, இந்த பெருந்தொற்றின் வேதனைச் செய்திகளை வெல்லும்வண்ணம் நிகழ்ந்த அன்புச் செயல்களை, இத்திருவருகைக் காலம் முழுவதும் பகிர்ந்துகொள்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருவருகைக்காலம் – முதல் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இளம்தாய் ஒருவர், தன் 5 வயது மகனுடன் கடைவீதிக்குச் சென்றார். கிறிஸ்மஸ் கூட்டம் அலைமோதியது. கிறிஸ்மசுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் ஒரு கையில், மற்றொரு கையில் மகன் என்று, அந்த இளம்தாய், கடை, கடையாக ஏறி இறங்கினார். இறுதியில், எல்லாப் பொருட்களையும் சுமந்துகொண்டு, கடைவீதியில் நடந்துகொண்டிருந்தவர், திடுக்கிட்டு நின்றார். தன்னுடன் வந்துகொண்டிருந்த மகனைக் காணவில்லை. பதைபதைப்புடன், அவர் மீண்டும் கடைக்குள் சென்றார். அங்கு, கடையில், அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவரது மகன். அவனைக் கண்டதும், தாய் கோபத்தில் கத்தினார். சிறுவனோ, அவரது கோபத்தை சற்றும் உணராமல், "அம்மா, இங்க பாருங்க. குழந்தை இயேசு எவ்வளவு அழகா..." என்று ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லவந்ததைச் சற்றும் கேளாமல், "அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல" என்று சொல்லியபடி, அவனைத் 'தரதர'வென இழுத்துக்கொண்டு நடந்தார்.

இந்தக் கதையை ஓர் உவமையாக நாம் எண்ணிப்பார்க்கலாம். 'அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல' என்று அந்த இளம்தாய் சொன்னது, நம்மையெல்லாம் விழித்தெழச் செய்யும் ஓர் அழைப்பு... இதை ஓர் எச்சரிக்கை என்றுகூடச் சொல்லலாம். இந்த உவமையை, தொடர்ந்து கற்பனைசெய்து பார்ப்போமே! தன் தாயின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், கூடவே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு ஒரே குழப்பம். கடந்த சில நாட்களாக, மூச்சுக்கு மூச்சு, 'கிறிஸ்மஸ் வருது, கிறிஸ்மஸ் வருது' என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறான் அச்சிறுவன். அந்தக் கிறிஸ்மசுக்குக் காரணம், குழந்தை இயேசு என்பதையும், அம்மா கதை, கதையாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறான் அவன். இன்றோ, குழந்தை இயேசுவைப் பார்க்கக்கூட நேரமில்லாமல், அம்மாவுக்கு ஏன் இந்த அவசரம் என்பதே அச்சிறுவனின் குழப்பம்.

குழம்பிப் போயிருக்கும் அச்சிறுவனைப் போலத்தான் நாமும். வண்ண விளக்குகளாலும், பொருட்களாலும் குவிந்துகிடக்கும் கடைவீதிதான் இவ்வுலகம். கிறிஸ்மஸ் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நேரமே இல்லாமல், கடைவீதிகளில் நாமும், அவசரமாக இழுத்துச் செல்லப்படுகிறோம். இந்த அவசரத்தில், ஆரவாரத்தில் நாம் தொலைந்து போகாமல் இருக்கவே, திருஅவை நமக்கு ஓர் அழகிய நேரத்தை, காலத்தை ஒதுக்கியுள்ளது. இன்று துவங்கி, டிசம்பர் 24ம் தேதி இரவு வரை, நமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அழகிய காலம்தான்... திருவருகைக் காலம்.

ஆர்வத்தை, எதிர்பார்ப்பை, ஆனந்தமான எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கும் காலம், திருவருகைக் காலம். ஆனால், இன்றைய நற்செய்திப் பகுதி, ஆனந்தத்திற்குப் பதிலாக, அச்சத்தை உருவாக்குகிறது. இரு வாரங்களுக்கு முன், உலக முடிவைப்பற்றி மாற்கு நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியை (மாற்கு 13: 24-32) சிந்தித்தோம். இன்று லூக்கா நற்செய்தியிலிருந்து, உலக முடிவைப்பற்றி மீண்டும் ஒரு வாசகம்.

  • லூக்கா நற்செய்தி 21: 25-26
  • அக்காலத்தில் மானிட மகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர்.”

ஓர் எச்சரிக்கை மணிபோல் ஒலிக்கும் இந்த நற்செய்தி பகுதி, இந்த ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ளதை, அருள்மிகு ஒரு தருணமாக கருதலாம். காரணம், இந்த நற்செய்திப்பகுதியை ஒத்த எச்சரிக்கை ஒன்றை, ஐ.நா. நிறுவனம், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. நவம்பர் மாதத் துவக்கத்தில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாடு COP26க்கு ஒரு தயாரிப்பாக உருவாக்கப்பட்ட IPCC அறிக்கை, மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 'Code Red' அதாவது, 'சிவப்பு குறியீடு' என்ற மிகத் தீவிரமான எச்சரிக்கை என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

66 நாடுகளை சேர்ந்த 234 அறிவியல் அறிஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்த அறிக்கையில், மனிதர்களின் நடவடிக்கைகளால், உலக வெப்பநிலை, கடந்த 2000 ஆண்டுகளுக்கு உயராத அளவு தற்போது உயர்ந்துவருகிறது என்று எச்சரித்துள்ளனர். கதிரவன், நிலவு, விண்மீன் ஆகியவற்றில் தோன்றும் மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு, உலகிற்கு என்ன நேருமோ என்ற அச்சம்... என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வரிகளைப்போல், ஐ.நா.வின் IPCC அறிக்கையிலும், அச்சமூட்டும் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தற்போது நிலவும் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்ந்தால், இதுவரை, 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவான கடல்நீர்மட்ட உயர்வு, 21ம் நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வோர் ஆண்டும் நிகழக்கூடும் என்றும், பல கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளதென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் கேள்விப்பட்ட பின்னரும், கிளாஸ்கோ நகரில் கூடிய தலைவர்கள், நிலத்தடி எரிசக்திகளின் பயன்பாட்டை, குறிப்பாக, நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்யும் முடிவுகளை எடுக்காமல் COP26 மாநாட்டை நிறைவு செய்துவிட்டனர்.

நிலத்தடி எரிசக்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் வளர்த்துக்கொண்ட அளவுக்கு மீறிய பேராசையால், நமது சுற்றுச்சூழல் சீரழிந்து வருவதையும், காலநிலை மாற்றங்களால், மக்கள், குறிப்பாக, வறியோர், பெரும் அழிவுகளுக்கு உள்ளாவதையும் அறிவோம். இந்த அழிவுகளைத் தடுக்க, வலிமை பெற்றுள்ள அரசுகள், மக்கள் நலனை முன்னிறுத்தி, நல்ல முடிவுகளை எடுக்காமல், பேராசை கொண்ட நிறுவனங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுத்தது, இளையோர் நடுவே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில், இளையோரையும் வருங்காலச் சந்ததியினரையும் அழிவிலிருந்து காப்பதற்குத் தேவையான நல்ல முடிவுகளை, இன்றையத் தலைவர்கள் எடுக்கவேண்டும் என்று இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம்.

சுற்றுச்சூழலைக் காப்பது, அரசுகளின் பணி மட்டுமல்ல; அது நம் ஒவ்வொருவரின் கடமை. நம் தனிப்பட்ட வாழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல முயற்சிகளை மேற்கொள்ளலாம். நம் இல்லங்களில், தண்ணீர் மற்றும் மின்சக்தியை கவனமாகப் பயன்படுத்துவதில், அலுவலகங்களில் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதில், நம் முயற்சிகள் துவங்கவேண்டும். சொந்த வாகனங்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதிலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பதிலும், கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

உலக முடிவைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும்போது, அந்த முடிவைச் சந்திக்கும் மனநிலையைப்பற்றி சிந்திக்கவேண்டும். கடல் கொந்தளிப்பு, கலகம், குழப்பம், அச்சம் என்று பயம்தரும் ஒரு பட்டியலைத் தரும் இயேசு, அந்நேரத்தில் என்ன செய்யச் சொல்கிறார்? பதுங்கி ஒளியச் சொல்லவில்லை, தப்பித்து, தலைதெறிக்க ஓடச் சொல்லவில்லை, மாறாக, தலை நிமிர்ந்து நில்லுங்கள் என்று கூறுகிறார். நாம் சந்திக்கப்போவது அழிவல்ல, மீட்பு என்பதால், நம்மை தலைநிமிர்ந்து நிற்கச் சொல்கிறார்.

அழிவு என்று பார்த்தால், அலறி அடித்து ஓடத்தான் வேண்டும். மீட்பு என்று பார்த்தால், தலைநிமிர்ந்து நிற்போம், நம் கடவுளைச் சந்திக்க. நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டம், நம் செயல்பாடுகளை மாற்றும்.

அழிவையும், அவநம்பிக்கையையும் வளர்க்கும் செய்திகள், அண்மைய ஆண்டுகளில், நம் உள்ளங்களை நிறைத்துவந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுற்றுச்சூழல் சீரழிவு, இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார வீழ்ச்சி, பயங்கரவாதம், என்ற பல்வேறு செய்திகளைக் கேட்டு வந்த நாம், கடந்த இரு ஆண்டுகளாக, கோவிட் பெருந்தொற்று என்ற தொடர்கதையை மீண்டும், மீண்டும் கேட்டு, மனம் தளர்ந்துபோயிருக்கிறோம்.

நம்பிக்கையிழந்திருக்கும் நம் உள்ளங்களை, மரங்களுக்கு ஒப்புமைப்படுத்தி சிந்திக்கலாம். இலையுதிர் காலத்தில், தன்னில் வளர்ந்திருக்கும் இலைகளை இழந்து, குளிர்காலத்தில், உயிரற்றதுபோல் நிற்கும் மரங்கள், வசந்தகாலம் வந்ததும், தங்கள் கிளைகளில் இலைகளைத் தோற்றுவித்து, வாழ்வை, மீண்டும் பறைசாற்றுகின்றன. அதேபோல், நம் உள்ளங்களும், நம்பிக்கையில் வேரூன்றி, நன்மைகளை தோற்றுவிக்கவேண்டும்.

வாழ்வைக் குறித்த நம்பிக்கையை வளர்க்க உருவாக்கப்பட்டுள்ளது, திருவருகைக் காலம். வழிபாட்டு ஆண்டைத் துவக்கிவைக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, நம்பிக்கையை வளர்க்கும் ஒரு கதையுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். குறிப்பாக, மரத்திலிருந்து இலைகள் உதிர்வதை மையப்படுத்தி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிறுகதை எழுத்தாளர், O.Henry அவர்கள் எழுதிய, '"The Last Leaf", அதாவது, "கடைசி இலை" என்ற கதை, நமக்குள் நம்பிக்கை உணர்வுகளை உருவாக்கட்டும்:

'நிமோனியா' என்றழைக்கப்படும் குளிர்காய்ச்சல் நோயினால் துன்புற்ற ஜான்சி (Johnsy) என்ற இளம்பெண், தான் விரைவில் இறந்துவிடுவோம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிவந்தார். அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர், ஜான்சியின் தோழி சூ (Sue) அவர்களிடம், "ஜான்சி உயிர்வாழ நினைத்தால், அவர் குணமாக வாய்ப்பு உண்டு. என்னால், மருந்துகள் தரமுடியும். ஆனால், குணமாகமுடியும் என்ற நம்பிக்கை, அவரிடம் உருவாக, நீங்கள் உதவி செய்யவேண்டும்" என்று கூறிச் சென்றார்.

இளம்பெண் ஜான்சி, ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், அவரது தோழி சூ, ஜான்சி உருவாக்க விழைந்த ஓவியங்களைப்பற்றி பேசி, உற்சாகமூட்டலாம் என்ற நோக்கத்துடன், அவர் படுத்திருந்த அறைக்குச் சென்றார். அவ்வறையில், சன்னலருகே படுத்திருந்த ஜான்சி, அறைக்குள் சூ வந்ததையும் கவனிக்காமல், சன்னல்வழியே வெளியே பார்த்தபடி, "பதினொன்று, பத்து, ஒன்பது, எட்டு..." என்று எண்ணிக்கொண்டிருந்தார். சூ அவரிடம், “என்ன செய்கிறாய்?” என்று கேட்டபோது, ஜான்சி, சன்னலுக்கு வெளியே இருந்த மரத்தைக் காட்டி, தன் தோழியிடம், "எனக்கு வியாதி வந்த அன்று, அந்த மரத்தில் நூற்றுக்கும் அதிகமான இலைகள் இருந்தன. கடந்த மூன்று நாள்களில், அவை அனைத்தும் ஒவ்வொன்றாக விழுந்து, இப்போது, அங்கே ஏழு இலைகளே உள்ளன. அந்த மரத்திலிருந்து, கடைசி இலை விழும்போது, நானும் இறந்துவிடுவேன்" என்று கூறினார்.

அதைக்கேட்டு வேதனையடைந்த சூ, "ஜான்சி, தயவுசெய்து, கண்களை மூடி தூங்கு, சன்னல் வழியே பார்க்காதே" என்று கூறிவிட்டுச் சென்றார். தன் தோழிக்கு எவ்விதம் உதவி செய்வதென்று புரியாமல் தவித்த சூ, அவர்கள் வாழ்ந்துவந்த குடியிருப்பின் கீழ்ப்பகுதியில் இருந்த வயது முதிர்ந்த ஓவியர், பெர்மன் (Bherman) அவர்களைத் தேடிச்சென்றார். அவரிடம், தன் தோழி ஜான்சி, மரத்திலிருந்து விழும் இலைகளைப்பற்றி சொன்னதைக் கூறினார். அதைக்கேட்டு கோபம் கொண்ட பெர்மன் அவர்கள், ஜான்சியைப் பார்த்து புத்திமதி சொல்ல மேலேச் சென்றார். ஜான்சி உறங்கிக்கொண்டிருந்ததால், சன்னலின் திரையை மூடிவிட்டு, திரும்பிச்சென்றார்.

அன்றிரவு, பனிப்புயல் ஒன்று வீசியது. அந்தப் புயலில், மரத்தில் மீதம் இருந்த அத்தனை இலைகளும் விழுந்திருக்கும் என்று எண்ணியபடி படுத்திருந்த ஜான்சி, அடுத்தநாள் காலையில், சன்னல் திரையை விலக்கிப்பார்த்தார். அந்த மரத்தில் ஒரே ஓர் இலை மட்டும் தொங்கிக்கொண்டிருந்தது. அதைக்கண்ட ஜான்சியின் உள்ளத்தில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இலேசாகத் துளிர்விட்டன. மீண்டும் அடுத்த இரவு, காற்று பலமாய் வீசியது. ஆனால், அடுத்தநாள், மீண்டும் அந்த இலை விழாமல் இருந்தது. பனியிலும், காற்றிலும் கீழே விழாமல் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஓர் இலை, ஜான்சிக்கு அளித்த நம்பிக்கையால், அவர் குளிர்க்காய்ச்சலிலிருந்து குணமானார்.

இளம்பெண் ஜான்சி நல்ல குணம் பெற்றபின், அவரது தோழி சூ, கீழே விழாமல் தொங்கிக்கொண்டிருந்த அந்த இலையைப்பற்றிய உண்மையை அவரிடம் கூறினார். வீட்டின் கீழ்ப்பகுதியில் வாழ்ந்த ஓவியர் பெர்மன் அவர்கள், பனிப்புயல் அடித்த அன்றிரவு, ஏணிமீதேறி, அந்த சன்னலுக்கு வெளியே, மரத்தையொட்டி இருந்த சுவரில், கடைசி இலையை ஓவியமாக வரைந்தார் என்றும், அந்த ஓவியத்தை முடித்துவிட்டு இறங்கிச்சென்றவர், குளிர்க்காய்ச்சலால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில், அடுத்தநாள் இறந்தார் என்றும் சூ அவர்கள் கூறினார். "ஓவியர் பெர்மன் அவர்கள் தன் வாழ்நாளில் தீட்டிய அனைத்து ஓவியங்களிலும், 'கடைசி இலை' என்ற அந்த சிறு ஓவியமே, தலைச்சிறந்த ஓவியம்" என்று இளம்பெண் சூ, தன் தோழி ஜான்சியிடம் கூறி முடித்தார்.

உங்களைச் சுற்றி அனைத்தும் அழிந்தாலும், நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள், ஏனெனில் உங்கள் மீட்பு அருகில் உள்ளது என்று இயேசு உறுதியளித்திருந்தாலும், அந்த உறுதியால் நிறைவடையாமல், ஏனைய எண்ணங்களால் மனதை நிறைக்கிறோமா? உலகம் என்ற கடைவீதியில் விற்கப்படும் நம்பிக்கையற்றச் செய்திகளை மட்டுமே, காதிலும் கருத்திலும் வாங்கி, நம் உள்ளங்களைத் தொலைத்துவிட்டு அலைகிறோமா?

நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்த நல்ல பல நிகழ்வுகளை, குறிப்பாக, இந்த பெருந்தொற்றின் வேதனைச் செய்திகளை வெல்லும்வண்ணம் நிகழ்ந்த அன்புச் செயல்களை, இத்திருவருகைக் காலம் முழுவதும் பகிர்ந்துகொள்வோம். நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை இன்னும் அதிகமாகப்  பரப்ப முயல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2021, 14:13