தேடுதல்

மக்களோடு திருமுழுக்கு யோவான் மக்களோடு திருமுழுக்கு யோவான் 

திருவருகைக் காலம் - மூன்றாம் ஞாயிறு : மறையுரைச் சிந்தனை

பகிர்வின் அடையாளமே பாலன் இயேசுவின் பிறப்பு. இதுவே உலக மாந்தெருக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் சிறப்பு
ஞாயிறு சிந்தனை - 121221

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. செப் 3: 14-17;  II. பிலி 4: 4–7; III. லூக்கா 3: 10-18)

அன்பர்களே, இச்சம்பவம் 2018ம் ஆண்டு ஜூலை மதம் 11ம் தேதி நிகழ்ந்தது. தக்கோத்தா நெல்சன் என்ற நபருக்கு 7 குழந்தைகள். கடைசி குழந்தை பிறந்த சில மாதங்களில் தக்கோத்தாவின் மனைவி மோட்டார் வண்டிகளைப் பழுதுபார்க்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இரண்டு மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்துபோனார். ஏழு குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாளாய்த் தவித்த அவர், தனது குழந்தைகளைக் காப்பாற்ற குறைந்தது மூன்று வேலைகளையாவது செய்யவேண்டியிருந்தது.  

இத்தருணத்தில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்பு சிலர் ஒன்றுகூடி வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அதாவது, ஏழு குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாளாக அவதியுற்றுவந்த அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசளித்தனர். அவரின் குழந்தைகளைப் பேணிக் காக்கும்பொருட்டு, வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு 1000 டாலர் பணமும், அக்குழந்தைகளுக்குக் குளிர் உடைகள் வாங்குவதற்கு 1000 டாலர் பணமும், அத்துடன் அவருக்கு உதவும் வகையில் காசோலை ஒன்றும் கொடுக்கப்பட்டது. மேலும், தக்கோத்தா நெல்சனுக்கு உதவி புரிந்தவர்கள் சார்பாகப் பேசியவர், “மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார். இம்மாபெரும் உதவியை சற்றும் எதிர்பார்த்திராத தக்கோத்தா நெல்சன், உள்ளம் மகிழ்ந்தவராய் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்தப் பரிசுப் பொருள்களைப் பார்த்த அக்குழந்தைகளும் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தனர்.  

அன்புக்குரியவர்களே, திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியின் ஞாயிறாகக் கொண்டாடுகிறோம். கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி பிறக்கிறது. உண்மையாகக் கொடுப்பவர்களும் உவகைப் பொங்க கொடுப்பவர்களும் தாங்களும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கிறார்கள். கடவுள் தன்னை முழுவதுமாக இம்மனுக்குலத்திற்குக் கொடுத்தார். இந்தக் கொடுத்தலில்தான் அவர் மகிழ்ச்சி அடைந்தார். கடவுளின் கனிந்த அன்பைப் புறக்கணித்து பாவச் சேற்றில் மூழ்கியதால், இஸ்ரேல் மக்கள் அந்நிய நாடுகளுக்கு கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர் அங்கே அவர்கள் தங்களின் உரிமை வாழ்வை இழந்து அகதிகளாக நடத்தப்பட்டனர். அப்போது தங்களின் பாவநிலையை உணர்த்த இஸ்ரயேல் மக்கள், தங்களின் மீட்புக்காகக் கடவுளை நோக்கிக் கண்ணீர்க் குரல் எழுப்பினர். அவர்களின் அழுகுரலைக் கேட்ட இறைவன், அவர்களை மீட்பதற்காகத் தன் ஒரே மகனை அனுப்புவதாக அவர்களுக்கு வாக்களிக்கிறார்.    

இதுவே இன்றைய முதல்வாசகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது. இப்போது அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

“மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;

இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு

அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்;

உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்

உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்”    

அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்;

தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து

மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.”

இன்றைய இரண்டாம் வாசகத்தில் “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்” என்கிறார் புனித பவுலடியார். கொடுப்பதில்தான் நிறைவான மகிழ்ச்சி இருக்கின்றது என்று தொடக்கத்தில் கண்டோம். இறைவன் இம்மனுக்குலத்திற்காகத் தன்னைக் கொடுப்பதில் மகிழ்ந்தார். அன்னை மரியா இம்மனுக்குலத்திற்காக அந்த மனுமகனைத் தன் கருவில் சுமப்பதிலே மகிழ்ந்தார். புனித வளனார் இறைத்திட்டத்திற்காக மரியாவையும் அந்த மனுமகனையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதிலே மகிழ்ந்தார். திருமுழுக்கு யோவான், “நான் மெசியா அல்ல, அவரது வழிகளை ஆயத்தப்படுத்த வந்தவன்” என்று தன்னைத் தாழ்த்திக்கொள்வதிலே மகிழ்ந்தார். இவ்வாறு நிறைமகிழ்ச்சி என்பது, பிறருக்காகத் தன்னையே முழுமையாகக் கொடுப்பதிலும், தன் நிலையிலிருந்து விட்டுக்கொடுப்பதிலும், தாழ்ச்சிநிறை உள்ளத்தோடு தன்னை ஏற்றுக்கொவதிலும்தான் அடங்கியிருக்கின்றது.     

இன்றைய நற்செய்தியில் பொதுமக்கள், வரிதண்டுவோர், படைவீரரர் என மூன்று குழுவினர் திருமுழுக்கு யோவானைச் சந்திக்க வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகளை இப்போது வாசிக்கக் கேட்போம். அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார். வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார். படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.

அன்பர்களே, இங்கே நான் ஒரு கற்பனை செய்து பார்க்கிறேன். நமது தமிழகச் சூழலில் ஒருவேளை திருமுழுக்கு யோவான் நம் மத்தியிலே தோன்றுகிறார் என வைத்துக்கொள்வோம். நாம் அவரிடத்திலே போய், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டால் அவருடைய பதில் என்னவாக இருக்கும்? “நீங்கள் ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், இலஞ்சம் கொடுக்காதீர்கள், உங்கள் அண்டை வீட்டாரின் தேவைகளைக் கவனியுங்கள்” என்று தொடங்கி இன்னும் என்னவெல்லாமோ சொல்லியிருப்பார். அவ்வாறே வரி தண்டுவோரைப் பார்த்து,  “40 கிலோ மீட்டருக்கு ஒன்று என்று தொடங்கி எண்ணிலடங்கா சுங்கச்சாவடிகளை அமைத்து நாடு முழுவதும் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதை முதலில் நிறுத்துங்கள். வரி என்பதன் பெயரில் மக்கள்மேல் அநியாயமாகச் சுமைகளை சுமத்தாதீர்கள்” என்று கூறியிருப்பார். இறுதியாக, படைவீரர்கள் அவரிடம் கேட்டிருந்தால் அந்தப் படை வீரர்களுக்குக் கூறிய பதிலையே நமக்கும் சொல்லி இருப்பார். காரணம், ‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’ காவலர்களே நூதன வேடமிட்டு மக்களின் பணத்தைப் பறித்ததையெல்லாம் எத்தனையோ முறை செய்தித்தாள்களில் வாசித்திருக்கிறோம்.

குறிப்பாக நம்மை ஆளும் தலைவர்கள் தற்போதையச் சூழலில் மக்களைப் பார்த்து “நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டால் “முதலில் உங்கள் பதவியிலிருந்து இறங்குங்கள்” என்பதுதான் மக்களின் உடனடிப் பதிலாக இருக்கும். அந்தளவுக்கு, ஆட்சியாளர்களின் அகோர நிலையைப் பார்த்து மக்கள் நொந்து போயிருக்கிறார்கள்.  

ஒருபுறம் உலகமெங்கும் கொரோனா தொற்று மக்களை வேதனையில் ஆழ்த்திக்கொண்டிருக்க, மறுபுறம் உலக கார்ப்பரேட் கம்பெனிகள் கொரோனா என்பதன் பெயரிலே மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வேதனையான நிலையில் சில தனியார் மருத்துவமனைகளின் பணம் பறிக்கும் செயல்பாடுகள் அப்பாவி மக்களின் உயிரையும் பணத்தையும் விழுங்கிக்கொண்டு இருக்கின்றன என்பதையும் நாம் மறத்தலாகாது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள போதிலும் விலைவாசி ஏற்றம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, விவசாய வீழ்ச்சி என மக்களின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.     

இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. விமானப் பயணங்களுக்கான பயணச்சீட்டின் விலையேற்றம் பலமடங்கு அதிகரித்துள்ளது. விமான நிலையத்திற்குள் நுழைவதற்குமுன் ஒரு உடல்நல சோதனை செய்யவேண்டும். அதற்கொரு தொகை செலவாகிறது. விமானத்திலிருந்து இறங்கிய பிறகும் விமான நிலையத்திற்குள்ளேயே இன்னொரு உடல்நல சோதனை செய்யவேண்டும். அதுவும் அரை மணி நேரத்திற்குள்ளாக முடிவு வேண்டுமென்றால் 5000 ரூபாயாம், 6 மணி நேரம் காத்திருந்து உடல்நல சோதனை செய்தால் 500 ரூபாயாம். என்ன கொடுமை இது! மேலும், தற்போது பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டதால் படிக்கின்ற அத்தனை பேரின் கரங்களிலும் செல்போன் கருவிகள் வந்துவிட்டன. எனவே, எல்லா செல்போன் கம்பெனிகளும் மீள்நிரப்புதல்  தொகையை இரண்டு மடங்காக உயர்த்திவிட்டன. இந்தக் கொரோனா தொற்றினால் ஆன்லைன் வர்த்தகம் மட்டும் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.  

அன்பர்களே, பணத்தின்மீதான பேராசையே மனிதனின் எல்லா தீமைகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது. “மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை” என்று வத்திக்கான் சங்கஏடுகளும் எடுத்துரைக்கின்றன. ஆனால், இப்பூவுலகிலுள்ள பலரின் சொத்துக்கள் சிலரின் கரங்களில் மட்டுமே அடங்கியிருக்கின்றன. அதனால் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக்கொண்டே போகிறார்கள். பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிக்கொண்டே போகிறார்கள். ‘survival of the fittest’ என்று சொல்லுவார்கள். அதாவது, இங்கே இருப்பவர்கள் மட்டுமே பிழைத்துக்கொள்ள முடியும்.  

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்.
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

என்று பாடலாசிரியர் வாலி எழுதுகிறார். பணம் என்ற சொல்லின் பின்னால் அணிவகுத்து நின்று மனிதர் பாவம் என்ற முடியைச் சூட்டிக்கொள்கின்றனர் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது பாருங்கள்!

நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று இயேசுவிடம் கேட்கிறார் இளைஞர் ஒருவர். அதற்கு கட்டளைகள் அனைத்தையும் கடைபிடிக்கச் சொல்கிறார் இயேசு. அவ்விளைஞரோ, இளமையிலிருந்தே அவற்றைக் கடைபிடிப்பதாகக் கூறுகிறார். “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. “நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” (மாற்கு 10:17-23) என்று இயேசு கூறும்போது அவர் முகம்வாடி வருத்தத்தோடு செல்வதைப் பார்க்கிறோம். காரணம், அவரிடம் ஏராளமான சொத்து இருந்தது.. அதனால்தான் ‘செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்’ என்கிறார் இயேசு.  

பிரியமானவர்களே, நான் கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் என்று சொல்லிக்கொள்வதிலேயே நமது கிறிஸ்தவ வாழ்வு முழுவதும் கடந்துபோய் விடுகிறது. நமது சொற்களுக்கு ஏற்ப, செயல்கள் நிறைந்த வாழ்வு அமைவதில்லை. அதாவது கெளரவ கிறிஸ்தவர்களாகவும் திருவிழா கிறிஸ்தவர்களாகவும் வாழ்வதற்கே நாம் ஆசைப்படுகின்றோம். இப்படிப்பட்ட நமது போலித்தனமான செயல்பாடுகளைக் கண்டிக்கும் புனித யாக்கோபு, எது உண்மையான சமய வாழ்வு என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.  “தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக்கொண்டிருப்போர் தம் நாவை அடக்காமலிப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப்பற்று பயனற்றது. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அநாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்” என்கிறார். (யாக்கோபு 1:26-27)

அன்புள்ளங்களே, இவ்வாண்டு எப்படிப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழாவைக் நான் கொண்டாடப்போகிறேன் என்ற, ஒவ்வொருவரின் உண்மையான உள்மனத் தேடல்தான், மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட வழிகாட்டும். ‘பகிர்வின் அடையாளமே பாலன் இயேசுவின் பிறப்பு.  இதுவே உலக மாந்தெருக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் சிறப்பு’ என்பதை நம் நினைவில் நிறுத்துவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2021, 14:59