தேடுதல்

கஜகஸ்தானில் போராட்டம் கஜகஸ்தானில் போராட்டம்   (AFP or licensors)

கஜகஸ்தானில் அமைதி நிலவ கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள்

பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், கஜகஸ்தானின் அமைதிக்காகவும் இறைவேண்டல் செய்யுங்கள் : பேராயர் Tomasz Peta .

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 10, கடந்த திங்களன்று கஜகஸ்தானில் அனுசரிக்கப்பட்ட தேசிய துக்க தினத்தையொட்டி,  பேராயர் Tomasz Peta அவர்கள்,  நாட்டின் தற்போதைய நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க,  தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு தொலைக்காட்சிக்கு அளித்த செய்தி  ஒன்றில் நாட்டின் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.  

கஜகஸ்தானின் வடக்குப் பிரதேசத்தை உள்ளடக்கிய கத்தோலிக்கத் திருஅவையின் பேராயர் Tomasz Peta அவர்கள்,  தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவுதல் என்ற பாப்பிறையின் பிறரன்பு அமைப்புக்கு, இரஷ்ய மொழியில் அனுப்பிய தனது செய்தியில்,  அண்மை வாரங்களில் கஜகஸ்தானில் நடந்த சம்பவங்களில், ஏறத்தாழ 200 பேர் உயிரிழந்ததுக் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.   

ஜனவரி 13, வியாழனன்று, பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், கஜகஸ்தானின் அமைதிக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு, தனது உயர் மறைமாவட்ட அருள்பணியாளர்களையும் இருபால் துறவியரையும் விண்ணப்பித்திருந்தார் பேராயர் Peta.

ஜனவரி 9,  கடந்த ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்பு, Oziornojeன் பாதுகாவலியான அன்னை மரியாவிடம் கஜகஸ்தானை அர்ப்பணித்து இறைவேண்டல் செய்தார் என்று கூறிய பேராயர் Peta அவர்கள், திருத்தந்தையைத் தொடர்ந்து நாட்டின் அமைதிக்காக தாங்களும் அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி மன்றாடுகிறோம் என்றும் கூறினார்.  

மேலும், தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவுதல் என்ற பாப்பிறை அமைப்புடன் ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில், Nur-Sultanல் நிலைமை தற்போது மிகவும் அமைதியாக உள்ளது என்றும்,  அதே நேரத்தில் நாட்டின் தெற்கில்,  மோதல்கள் மிகவும் தீவிரமாக இருந்த Almaty பகுதிகளில், இணையதளம் மற்றும் அலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் வழியாகப் பல்வேறு காரியங்களைக் குறித்துத்  தொடர்புகொள்வதில் அதிகமான சிரமங்கள் இருக்கின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2022, 15:59