தேடுதல்

பாலியல் முறைகேடுகள் பாலியல் முறைகேடுகள்  (©soupstock - stock.adobe.com)

பாலியல் முறைகேடுகளை ஆராய புதிய தன்னாட்சி ஆணையம்

பாலியல் முறைகேடு சம்மந்தமான தன்னாட்சி ஆணையம் ஒன்றை நிறுவியுள்ளனர் போர்ச்சுக்கல் ஆயர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போர்ச்சுக்கல் நாட்டின் கத்தோலிக்க ஆயர் பேரவையானது, தலத்திருஅவையில் பாலியல் முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் விதமாகப் புதிய தன்னாட்சி ஆணையம் ஒன்றை நிறுவியுள்ளதாகவும், இது, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகக் குரல் கொடுக்கும் வகையில் விசாரணையைத் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

'மௌனத்திற்குக் குரல் கொடுப்பது' என்ற முழக்கத்தின் கீழ் செயல்படவிருக்கும் இப்புதிய ஆணையத்தின் உருவாக்கம், கடந்த நவம்பரில் நடைபெற்ற ஆயர்களின் ஆண்டுக் கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது என்றும், பிரான்சில் உள்ள தலத்திருஅவையில் பாலியல் முறைகேடு தொடர்பான அண்மை அறிக்கையின் காரணமாகவே இப்புதிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆயர் பேரவையின் அறிக்கைக் கூறுகிறது.

இந்த அமைப்புக்கு போர்த்துக்கல் ஆயர் பேரவையால் நிதியளிக்கப்படும் என்றும்,  குடிமைச் சமுதாயத்தில் உள்ள மற்ற தோழமையுணர்வுக் கொண்டோரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகின்றன என்றும் கூறும் ஆயர் பேரவை, இவ்வமைப்பு பல்வேறு பின்புலம் கொண்ட நிபுணர்களை உள்ளடக்கியிருப்பதுடன், குழந்தை மனநல மருத்துவர் Pedro Strecht அவர்களால் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது. 

இந்த வாரத்தின் தொடக்கத்தில் லிஸ்பனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாணையத்தின் உறுப்பினர்கள், அதன் நோக்கம் மற்றும் பணித் திட்டம் ஆகியவைக் குறித்த அனைத்து விடயங்களும்  வழங்கப்பட்டன.

தலைத்திருஅவையில்  இதுவரை எத்தனை பேர் பாலியல் முறைகேடுகளுக்கு  ஆளாகியுள்ளனர், அதற்குக் காரணமானவர்கள் யார் யார் என்பது பற்றிய தெளிவான மற்றும் உண்மையுள்ள ஒட்டுமொத்தத் தரவுகளையும் போர்த்துகீசிய ஆயர்கள் பெற விரும்புவதாகவும் ஆயர் பேரவைத் தெரிவிக்கிறது.

இந்த பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தைரியமாக முன்வந்து தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும், அவைகள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், இவ்வாணையம் வலுவாக ஊக்குவிக்கும் அதேவேளை, 1950 முதல் 2022 வரையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை உள்ளடக்கிய சாட்சியங்கள் இணையத்தில் சேகரிக்கப்படும் என்றும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தன்னாட்சி ஆணையத்துடன் நேருக்குநேர் சந்திக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2022, 15:28