தேடுதல்

புனித நீர் கொண்டு ஆசீர்வதிக்கும் எருசலேம் இலத்தின் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை புனித நீர் கொண்டு ஆசீர்வதிக்கும் எருசலேம் இலத்தின் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை   (AFP or licensors)

இனியது இயற்கை - திருஅவையில் தண்ணீரின் இடம்

தூய்மையின், புனிதத்தத்துவத்தின், காத்தலின் அடையாளமாக மதச்சடங்குகளில் காட்டப்படும் நீர், நம் திருமுழுக்கையும் நினைவூட்டி நிற்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையில் தண்ணீர் தனக்கென ஓர் இடத்தைக் கொண்டுள்ளது. விவிலியத்தின் பல பகுதிகளில் தூய்மையின் அடையாளமாக இருக்கிறது தண்ணீர்.

தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. (எபிரே 10:22,) என்ற புனித பவுலின் இந்த வார்த்தைகளை நோக்கும்போது, கோவிலின் உள்ளே புகுந்தவுடன் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டியின் காரணம் விளங்குகிறது. அந்த நீரை விரலால் தொட்டு உடலில் சிலுவை அடையாளமிட்டு தூய்மையாகிறோம். ஆன்மிகத் தூய்மைக்கு அடையாளமாக இருக்கும் இத்தண்ணீர், திருமுழுக்கையும் நினைவூட்டி நிற்கிறது. திருப்பலிகளிலும், துவக்கத்தில் மக்களை அருள்பணியாளர் புனித நீரைத் தெளித்து ஆசீர்வதிப்பதையும், தூய்மைப்படுத்தலின் அடையாளமாக, தன் கைகளை அவர் கழுவுவதையும் காண்கிறோம். இன்றைய நிலையில் நீர், திருஅவையில் மூன்று நிகழ்வுகளின் அடையாளமாக உள்ளது.

என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன் (தி.பா. 51:2,3), என்று திருப்பாடல் உரைப்பதுபோல், நம் பாவங்களுக்காக மனம் வருந்துவதைக் குறித்து நிற்கிறது.

இரண்டாவதாக, தீயவைகளிலிருந்து நம்மை காப்பதாக உள்ளது. வீடுகளில், புனித தலங்களின் நீரை வைப்பதன் நோக்கம் அதுவே.

புனித அவிலா திரேசா கூறுவார், 'தீயோனை எதிர்த்துப் போரிடவும், அவன் திரும்பிவராமல் இருக்கவும், புனித நீரைப்போல் உதவுவது எதுவும் இல்லை என என் அனுபவத்திலிருந்து உணர்ந்துள்ளேன்' என்று.

மேலும், பல சடங்குகளில் நாம் நீரைப் பயன்படுத்தி புனிதத்தின் அடையாளமாகக் காட்டுகிறோம். திருமணங்களில் மோதிரத்தை அல்லது தாலியை, புனித நீர் கொண்டு ஆசிர்வதிக்கின்றோம். புதியக் கட்டிடங்களை, வீடுகளை, வாகனங்களை புனித நீரால் ஆசிர்வதிக்கிறோம். மரணச்சடங்கிலும் உடலை புனித நீர் கொண்டு ஆசிர்வதிக்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஆன்மிக விடயங்களிலும் இன்றியமையாத ஒரு கூறாக நீர் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2022, 14:44