தேடுதல்

கானாவூர் திருமணத்தில் இயேசுவும் அன்னை மரியாவும் கானாவூர் திருமணத்தில் இயேசுவும் அன்னை மரியாவும் 

பொதுக் காலம் - 2ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இருள் சூழ்ந்த நமது வாழ்வை மகிழ்ச்சி என்னும் ஒளிநிறைந்த வாழ்வாக மாற்றும் வல்லமை கடவுளிடம் மட்டுமே உள்ளது.
ஞாயிறு சிந்தனை -160122

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் ( I. எசா 62: 1-5 ;  II. 1கொரி 12: 4–11;  III. யோவா 2: 1-12)

அன்பு உள்ளங்களே, இன்றைய முதல் வாசகத்தின் இறைவார்த்தைகளைக் கேட்டு நம் ஞாயிறு சிந்தனையைத் தொடங்குவோம்

“சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். ‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘எப்சிபா’ என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு ‘பெயுலா’ என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள்  உன்னில்  மகிழ்வார் (எசா 62: 1-5)

எசாயா புத்தகத்தில் வரும் இப்பகுதி குறித்து, இறையியல் சிந்தனையாளர்கள் இருவேறுபட்ட கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். முதல் வகையினர், இறைவாக்கினர் எசாயா இங்குக் கடவுளின் குரலாகவே பேசுகிறார், அதாவது, கடவுளின் இதயமாக விளங்கும் சீயோன் நகரை மீட்கும் வரை, அல்லது மீட்பு என்னும் ஒளி அதன்மீது சுடர்விடும் நாள் வரை எசாயா, தான் ஓய்ந்திருக்கப்போவதில்லை என்று சபதம் எடுப்பதை முன்வைக்கின்றனர். அதாவது, இந்த 5 இறைவசனங்களிலும் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் மீட்பு ஆகிய மூன்றும் சீயோனுக்கு நிச்சயமாகக் கொடுக்கப்படும் என்று கடவுள் இறைவாக்கினர் வழியாக செய்வதாகத் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு வகையினர், கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாகப் பேசவில்லை, மாறாக, கடவுளுக்கும் அவர்தம் மக்களுக்கும் இடையில் ஓர் இடைநிலையாளராக நின்று செயல்படப்போவதாக வாக்குறுதி எடுக்கிறார் என்று கூறுகின்றனர். கடவுள் தனது அன்பு நகரான எருசலேமை, தன் மணிமுடியால் அலங்கரிக்கும் நாள் வரை, நான் ஓய்ந்திருக்கப்போவதில்லை. மாறாக, அது நிறைவேறும் வரை நான் தொடர்ந்து பேசிக்கொண்டும், போதித்துக்கொண்டும், அறிவித்துக்கொண்டும் இருப்பேன் என்று செயல்படும் இறைவாக்கினர் எசாயாவின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டுகின்றனர். 

திருப்பாடல் 36ல் 1 முதல் 4 வரை உள்ள இறைவார்த்தையை நாம் வாசிக்கின்றபோது, இத்திருப்பாடலின் ஆசிரியர், எதிரிகளால் வரும் வேதனை, வருத்தம், விரக்தி. தோல்வி, ஏமாற்றம், நம்பிக்கையற்ற நிலை ஆகிய தனது இருள் நிறைத்த பக்கங்களை வெளிப்படுத்துவத்தைப் பார்க்கின்றோம்.  

“பொல்லாரின் உள்ளத்தில்* தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது; அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை. ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர். அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை; நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர். படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர், தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்; தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை” (வச.1-4).

முதற்பகுதியில் வேதனைக் குரல்களில் விம்மி வெடித்தாலும், இரண்டாம் பகுதியில் கடவுளின் பேரன்பையும் அவரது மீட்பையும் குறித்துப் பாடிப் புகழ்கிறார். துயர்களும் வலிகளும் நிறைந்த வாழ்வை, கடவுள் மட்டுமே தனது செழுமையாலும் வளமையாலும் நிரப்பமுடியும் என்றும்,. கடவுளின் பேரன்பு தன்  வாழ்வு முழுவதையும் மகிழ்ச்சியால் நிறைக்கக் கூடியது என்பதையும் விவரிக்கிறார்.

"கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது;  உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்" (வச. 7-8).  இந்தப் திருப்பாடலின் உச்சம் 10வது இறைவசனத்தில் வெளிப்படுகிறது. "உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்!" (வச 10).  கடவுளின் பேரின்ப நீரோடையில்தான் தனது தாகத்தைத் தணித்துக்கொள்ள முடியும் என்று திருப்பாடல் ஆசிரியர் நம்புவதையும் காண்கிறோம்.

‘மூங்கில் இலைமீது தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’ என்று தமிழ் இலக்கியத்தில் நான் படித்த இரண்டு வரிகள் கொண்ட பாடல் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. இதன் பின்னணி வேறு அர்த்தத்தில் கூறப்பட்டிருந்தாலும், இவ்விடத்தில் அதை அப்படியே பொருத்திப் பார்க்கிறேன். அதாவது, கடவுள் தன் மக்கள்மீது கோபம் கொள்ளும்போதெல்லாம், அது சிறிதளவே நீடிக்கிறது, நொடிப்பொழுதில் அவரின் கோபம் மாறிவிடுகிறது. "நொடிப்பொழுதே  நான் உன்னைக் கைவிட்டேன்;  ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்" (எசா 54:7) என்றும்,  "மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்" (எசா 54:10) என்றும் வாசிக்கின்றோம். ஆகவே, இருள் சூழ்ந்த நமது வாழ்வை மகிழ்ச்சி என்னும் ஒளிநிறைந்த வாழ்வாக மாற்றும் வல்லமை கடவுளிடம் மட்டுமே உள்ளது.   

துயரத்தின் பிடியில் சிக்கித்தவித்த இஸ்ரேல் மக்களை, யாவே கடவுள் நிறைவான மகிழ்ச்சிதரும் வாழ்விற்கு அழைப்பதையும், அவருடைய ஒரே மகனான இயேசு இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில், நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்" (லூக் 6:21) என்ற தனது இரக்கம் சுரக்கும் வார்த்தைகள் வழியே, இருள்நிறை வாழ்வுக்குள் தள்ளப்பட்ட வரிதண்டுவோரான மத்தேயு, சக்கேயு, மற்றும் மகதல மரியா போன்ற பலரின் வாழ்வில் நிறைமகிழ்ச்சியை அளிப்பதையும் பார்க்கின்றோம்.     

இறைத்தந்தைக்கும் மக்களுக்குமான உறவில், ஓர் இடைநிலையாளராக இருந்து இயேசு ஆண்டவர், ‘மகிழ்ச்சி’ என்னும் வாழ்வை மாந்தருக்கு அளித்தார். அந்த உயரியப் பண்பைப் பெற்ற கடவுளின் தாயும் புதிய இஸ்ரயேல் மக்களின் துயர்துடைத்து மகிழ்ச்சி தரும் நீரூற்றாய் விளங்குகிறார். இன்றைய வாசகங்களின் தலைமைக் கருத்தாக அமைவது கானாவூர் திருமண நிகழ்வு. அந்நிகழ்வில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட குறையைப் போக்கி, அக்குடும்பத்தாரின் கண்ணீரைத் துடைக்கின்றார் கன்னி மரியா. தனது தியாக வாழ்வால், ஏழை எளிய மக்களின் வாழ்வில் உண்மை மகிழ்ச்சிக்கு வித்தாக அமையப்போகும் தன் மகன் இயேசுவின் பணிவாழ்வை முதலாவதாகத்  தொடக்கி வைக்கிறார் மரியா.

வாழ்விழந்த இஸ்ரயேல் மக்களின் குரலாக ஒலித்து, கடவுளிடம் பரிந்துபேசி, மகிழ்ச்சிநிறை புதுவாழ்வை இஸ்ரயேல் மக்களுக்குப் பெற்றுத்தந்த இறைவாக்கினர் எசாயாவைப் போன்று, அன்னை மரியாவின் செயல் அமைகிறது. திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” (யோவான் 2: 3) என்றார். இந்த ஒற்றைவரி வார்த்தையால் உளம்நிறை மகிழ்ச்சியை அக்குடும்பத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார் அன்னை மரியா.

அன்பர்களே, இத்தருணத்தில் ஓர் உண்மை நிகழ்வை உங்களுக்குக் கூற விழைகிறேன். அமெரிக்காவிலிருந்து நற்செய்திப் பணிக்காகவும், மருத்துவப் பணிக்காகவும் வந்தவர் ஜான் ஸ்கடர் என்பவர். இவர் 1860 முதல் 1900 வரை 40 ஆண்டுகள் தமிழகத்தின் ஆற்காடு பகுதியில் தங்கி மருத்துவப் பணிகள் செய்து வந்தார்.  இவரும் இவருடைய மனைவியும் வேலூர் அருகே இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவப்பணி  செய்துகொண்டிருந்தனர். இவருக்கு மூன்று பிள்ளைகள். மூன்றாவதாகப் பிறந்த  இவருடைய மகள்  ஐடா ஸ்கடர், அமெரிக்காவில் தங்கி தனது மறைபோதகப் பணிக்காக இறையியல் படித்துக்கொண்டிருந்தார். நன்றாகப் படித்துவிட்டு, ஒரு நல்ல ஆண்மகனை திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவிலேயே வாழ்ந்து மறைபோதகப் பணியாற்றவேண்டும் என்ற கனவுகளோடு இருந்தார். அப்போது, தனது தாய் உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு இந்தியா  வந்திருந்தார். 

அப்போது ஒருநாள், நடு இரவில் யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்கிறது. தந்தை தூங்கிக்கொண்டு இருந்ததால், ஐடா எழுந்து வந்து கதவைத் திறந்துப் பார்க்கிறார். ஒரு இளைஞர், தனது மனைவி பிரசவ வலியால் துடிப்பதாகவும் உடனே வந்து உதவுமாறும்  அழைக்கிறார். "எனக்கு மருத்தவம் தெரியாது, சற்றுப் பொறுங்கள் என் தந்தையை அழைத்து வருகிறேன்" என்கிறார் ஐடா. அதற்கு அந்த இளைஞர், “அய்யய்யோ வேண்டாம்…. ஒரு பெண்ணுக்கு ஒரு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டும், ஓர் ஆண் பிரசவம் பார்க்கும் வழக்கமெல்லாம் எங்கள் சமுதாயத்தில் கிடையாது” என்று கூறிவிட்டுப் போய்விடுகிறார். அதற்கடுத்த நாள், அவ்வூரில் அழுகை சப்தம் கேட்கிறது. அந்த இளைஞரின் மனைவிக்குப் பிரசவம் பார்க்க யாரும் இல்லாததால், அப்பெண் இறந்துவிட்டாள் என்பதை அறிந்து ஐடா ஸ்கடர் வேதனையடைகிறார். அவரது  வாழ்வில் இச்சம்பவம் ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைகிறது.

எப்படியெல்லாமோ வாழவேண்டும் என்று கனவு கண்ட அவர், இந்தியாவில்தான்  பணியாற்றவேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் அமெரிக்கா சென்று மருத்துவப் படிப்பை தேர்வு செய்து படிக்கிறார். மூன்று ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், சிறப்பு அனுமதிபெற்று நான்காம் ஆண்டு மருத்துவ செயல்முறைப் படிப்பை  இராணிப்பேட்டையில் தொடர்கிறார். தனது பெற்றோரின் மறைவிற்குப் பின்பு, அதேபகுதியில் மருத்துவப் பணியாற்றி, அம்மக்களின் மனங்களில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறார். குறிப்பாக,  ஏழை எளியோர் வாழ்வில் அவர் ஆற்றிய பணிகள் குன்றிலிட்ட தீபமாய் இன்றும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. அவர் கட்டி எழுப்பியதுதான் ஆசியாவிலேயே பெரியதும் மிகச்சிறந்ததுமான வேலூர் CMC (Christian Medical College) மருத்துவமனை.  

1700க்கும்   மேற்பட்ட மருத்துவர்கள், 2000க்கும்   அதிகமான ஆசிரியர்கள், 2600க்கும்   அதிகாகமான செவிலியர்கள், 900க்கும் மேற்பட்ட நிர்வாக ஊழியர்கள் என ஆசிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் உயர்ந்து நிற்கிறது வேலூர் CMC மருத்துவமனை. அண்மையில்தான் இந்த மருத்துவமனை தனது 100வது ஆண்டைக் கொண்டாடியது. இம்மருத்துவமனைக்கு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, மற்றும் அரசுத் தலைவர்கள் அனைவரும் வந்து சென்றுள்ளதாக இதன் வரலாறு கூறுகிறது.  ஐடா ஸ்கடர் 1960ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி, தனது 89வது வயதில் இறைவனடிச் சேர்ந்து, இந்த மருத்தவமனையின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு துயில்கொண்டு வருகிறார். பொருளாதார நெருக்கடிகளாலும், நோய்நொடிகளாலும், பஞ்சம், வறுமை போன்றவைகளாலும் அவதியுற்று வந்த அனைவரின் வாழ்விலும், தனது தியாக வாழ்வால் நிறைவான மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறார் ஐடா ஸ்கடர். அன்னை மரியாவைப்போல் பலரின் துன்ப துயரங்களை போக்கி நிறைவான மகிழ்ச்சியை அளித்திருக்கிறார் என்பது அவரது வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம்.

கானாவூர் திருமண நிகழ்வு நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. முதலாவதாக, இன்றைய நமது சமுதாய வாழ்வில், தன் பெற்றோருக்குப் பின்னால், கணவருக்குப் பின்னால், பிள்ளைகளுக்குப் பின்னால், குடும்பத்திற்குப் பின்னால் என எல்லாவற்றிலும் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு எல்லாரையும் மகிழ்ச்சிநிறை வாழ்விற்குள் முன்னுக்குத் தள்ளும், பெண்மையையும் தாய்மையையும் நாம் எப்படி மதித்துப் போற்றுகிறோம் என்பதை இன்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களை ஏற்பதும், போற்றுவதும், பாராட்டுவதும், நமது அன்றாட வாழ்வில் நிகழ்கிறதா? என்ற நமது உள்மனத் தேடலைத் தொடங்குவோம். இரண்டாவதாக, அன்னை மரியா நமக்கு சொல்லித்தருவது, நான் சொன்னதை என் மகன் இயேசு கேட்டார், துயர்நிறைந்த அந்தக் குடும்பத்திற்கு மகிழ்ச்சி கிடைத்தது. அதுபோலவே என் மகன் சொல்வதை நீங்கள் கேட்டால், துயர்நிறைந்த உங்கள் வாழ்வும் மகிழ்ச்சியானதாக மாறும் என்பதுதான். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) என்றார்.

ஆகவே, பிறரின் துயர்துடைக்கும் பணியில், அன்னை மரியாவின் வழி நமதாகட்டும். அதற்காக, ஆண்டவர் இயேசுவிடம் பரிந்துரைக்க அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2022, 15:28