தேடுதல்

இயேசுவின் தோற்ற மாற்றம் இயேசுவின் தோற்ற மாற்றம்  

தவக்காலம் - இரண்டாம் ஞாயிறு : உயிர்கொடுக்க உருமாறுவோம்

இயேசுவின் சிலுவை வழியில் பயணிக்கவேண்டுமாயின் எப்போதும் உடைபடத் தயாராய் இருப்போம்.
ஞாயிறு சிந்தனை - 130322

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் I. தொநூ 15: 5-12, 17-18, 21b   II. பிலி  3: 17-4:1;   III. லூக்  9: 28b-36)

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைக்குள் நுழைகின்றோம். இன்றைய இறைவார்த்தைகள் பிறருக்காக நம்மை உருமாற அழைக்கின்றன. ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் இந்த உருமாற்றம் கண்டிப்பாக நிகழத்தான் செய்கிறது. அந்த உருமாற்றம் பிறருக்காகவும் இந்தச் சமுதாய நலன்களுக்காகவும் அமைகின்றபோது அது இன்னும் மேன்மை பெறுகிறது. அதாவது, கிறிஸ்தவர்களாகிய நாம் சிலுவைகளைச் சுமக்காமல் உயிர்ப்பு விழாக்களைக் கொண்டாட முடியாது என்பதைச் சுருங்கச் சொல்கின்றது இந்த உருமாற்ற நிகழ்வு. உடைபட மனமில்லாதவர் உருவாகவும் முடியாது பிறரை உருவாக்கவும் முடியாது என்பது திண்ணம்.

சிற்பி ஒருவர் கோவிலின் கருவறையில் வைப்பதற்குச் சிலை ஒன்றைச் செதுக்க விரும்பினார். அவர் தனது தேடலில் இரண்டு பெரிய பாறைத் துண்டுகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் ஒன்றைச் சிலையாகவும், மற்றொன்றை அச்சிலையை வணங்க வரும் பக்தர்கள் ஏறிச்செல்லும் படிகளாகவும் செதுக்க விரும்பினார். அவர் முதல் பாறையை உடைத்து செதுக்க விருப்பியபோது, “நான் கோவிலின் சிலையாக இருக்க விரும்பவில்லை, ஏனென்றால், சிலையாகச் செதுக்கப்பட்ட நான் அதிகமாக உடைபடவேண்டியிருக்கும். என்னால் அவ்வளவு வலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, பக்தர்கள் ஏறிவரும் படிக்கட்டாகவே நான் இருக்க விரும்புகிறேன், அதுதான் எனக்கும் சரியெனப்படுகிறது. ஆகவே, தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்”   என்று கூறியது. அப்போது பக்கத்தில் இருந்த பாறை, “ஐயா, என்னைச் சிலையாகச் செதுக்குங்கள், நான் எல்லா வலிகளையும் தாங்கிகொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியது. உடனே அச்சிற்பி இரண்டாவது பாறையைச் சிலையாகவும், முதல் பாறையைப் படிக்கட்டுகளாகவும் செதுக்கினார். இரண்டும் கோவிலில் வைக்கப்பட்டன. பக்தர்களுக்கு ஆசீர் வழங்கி, அவர்களிடமிருந்து மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் பெற்ற சிலையாகச் செதுக்கப்பட்ட இரண்டாவது பாறை மகிழ்ச்சியில் திளைத்தது. அது, தான் உடைபடத் தயாராய் இருந்ததற்கான வெகுமதியைப் பெற்றுக்கொண்டது. ஆனால், உடைபட மறுத்த முதல்பாறை பக்தர்களின் காலடிகளால் மிதி வாங்கி அழுது கதறியது. அப்போது அங்கு வந்த சிற்பி, ‘உடைபட மறுப்பவர் உவகையடைய முடியாது’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

இத்தகையச் சிந்தனைகளின் அடிப்படையில் இப்போது நற்செய்தி வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள். (லூக் 9:28b -36)

இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வு ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் சொல்லப்பட்டுள்ளது. இதனை வைத்தே இயேசுவின் உருமாற்றம் குறித்த இதன் முக்கியத்துவத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இயேசு, மோசே, எலியா ஆகிய மூவரின் சந்திப்பில் எருசலேமில் நிகழப்போகும் இயேசுவின் தியாக மரணம் குறித்து கலந்துரையாடல் நடப்பதாக லூக்கா எடுத்துரைக்கின்றார். இங்கே, மோசே திருச்சட்டங்களின் அடையாளமாகவும், எலியா இறைவாக்கினர்களின் அடையாளமாகவும், இயேசு திருச்சட்டங்கள் மற்றும் இறைவாக்கினர்களின் ஒட்டுமொத்த அடையாளமாகவும் எடுத்துக்காட்டப்படுகின்றனர். இந்நிகழ்விற்குப் பிறகு இயேசு நாசரேத்துக்கு மீண்டும் வருவதாகக் காட்டப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதுதான் கல்வாரியை நோக்கிய இயேசுவின் இறுதிப்பயணம். இரண்டாவதாக, திருமுழுக்கின்போது வெளிப்பட்ட தந்தையின் குரல் இங்கு மீண்டும் ஒலிக்கிறது. இயேசுவின் மீட்புத்திட்டத்தில் தந்தையின் உடனிருப்பையும், அவரின் மகனான இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவேண்டிய மக்களின் பொறுப்புணர்வையும் இது எடுத்துக்காட்டுகிறது. இவைகள் அனைத்தும் நமக்கு இறையியல் சிந்தனைகளாக அமைகின்றன. அதேவேளையில், நாம் ஒவ்வொருவரும் தியாக வாழ்விற்கு நம்மை முற்றிலுமாகக் கையளிக்க வேண்டுமென்றால், இந்த உருமாற்ற நிகழ்வு நம் வாழ்விலும் நிகழவேண்டும் என்ற உயரிய பாடத்தையும் நமக்கு கற்பிக்கிறது.

இன்றைய நற்செய்தியில் புனித பேதுருவின் அணுகுமுறையை நாம் சற்று ஆழமாகச் சிந்திப்போம். இந்த மறையுரையின் தொடக்கத்தில் நாம் கேட்டதுபோல, உடைபட அதாவது, சிலுவையைச் சுமக்க மனமில்லாத நிலையில் இருந்த பேதுருவின் மனநிலையை இந்நிகழ்வில் நம்மால் பார்க்க முடிகிறது. பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார் (வசனம் 33) என்ற பேதுரு பற்றிய இறைவார்த்தைகள் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றன. மேலும், பேதுரு இப்படிக் கூறியதால் அவரை நாம் தவறாகத் தீர்ப்பிடவும் முடியாது. காரணம் மனிதர் என்ற முறையில் பேதுருவும் மிகவும் பலவீனமாகவே இருந்தார் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த உருமாற்ற நிகழ்வு நடப்பதற்கு முன்பு ‘இயேசுவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை’,  ‘இயேசு தம் சாவை முதன் முறை முன்னறிவித்தல்’ ஆகிய இரண்டு விடயங்கள் நடைபெறுகின்றன. இயேசுவைப்பற்றிய பேதுருவின் அறிக்கையில், "நீர் கடவுளின் மெசியா" என்று உரைகின்றார். பேதுருவின் இந்த வார்த்தைகளால் பெருமிதமும் பெருமகிழ்வும் கொண்ட இயேசு, இதனை யாருக்கும் சொல்ல வேண்டாமென்றும் கட்டளையிடுகின்றார். பேதுருவும் கூட யூதர்களைப் போன்று ஓர் அரசியல் மெசியாவை எதிர்பார்த்திருக்கவேண்டும். அதனால்தான், இயேசு தன் சாவைப் பற்றி அறிவித்ததும், "நீர் கடவுளின் மெசியா" என்று கூறிய அதேபேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” (மத் 19:22) என்கிறார். இதனால் கோபமடைந்த இயேசு, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்கிறார்.     (மத் 19:23).

மேலும், லூக்கா நற்செய்தியில் பேதுருவின் அறிக்கைக்குப் பிறகு இயேசு தன் சாவைக் குறித்து அறிவிக்கும்போது, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். (லூக் 9:23-24) என்று இலட்சிய வாழ்விற்கான வழிகளையும் முன்வைக்கின்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பேதுரு கட்டாயம் அச்சம் கொண்டிருந்திருக்க வேண்டும். காரணம், இயேசுவோடு இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்றும் சவால்களற்ற ஒரு சுகமான வாழ்வாக இருக்கும் என்றும் அவர் எண்ணியிருக்க வாய்ப்புண்டு. இயேசு நிகழ்த்திய அருளடையாளங்கள், போதனைகள், அவரது அணுகுமுறைகள் யாவும் இவ்விதமான நம்பிக்கைகளைப் பேதுருவுக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், இயேசு தனது இலட்சிய மரணத்திற்கான வழிகள் குறித்து அறிவித்ததும் அவர் திகிலடைகின்றார். இயேசுவுடன் எருசலேமிற்குச் சென்றால், தானும் துன்ப துயரங்களையும் அவமானங்களையும் அனுபவிக்கவேண்டும், ஒருவேளை மரணத்தைக் கூடச் சந்திக்கவேண்டியிருக்கும் என்றெல்லாம் பேதுரு தன் உள்ளத்தில் எண்ணியிருந்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே அவர், “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது” என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்.

விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மிக உயரமாக வளரும் அரியவகை மரம் ஒன்று இருந்தது. அது ஆண்டுதோறும் பூத்துக் குலுங்கி அழகிய பூக்களையும் காய் கனிகளையும் கொடுத்து வந்தது. அம்மரத்தை அந்த விவசாயி சிறப்பாகப் பராமரித்து வந்தார். அம்மரத்தின் அடியில் விழுந்த அதன் விதைகள் செடிகளாக முளைத்து வளர்ந்து வந்தன. ஒருநாள் அத்தோட்டத்தின் விவசாயி அச்செடிகளைப் பிடுங்குவதற்காக வந்தார். அப்போது அச்செடிகளெல்லாம் ஒருமித்த குரலில், எங்களை எதற்குப் பிடுங்குகிறாய்? என்று கேட்டன. அதற்கு அந்த விவசாயி, “உங்களைப் பிடுங்கிக் கொண்டுபோய் வேறிடத்தில் நட்டு வளர்க்கப்போகிறேன்” என்றார். “ஏன், இங்கு நாங்கள் நான்றாகத்தானே வளர்ந்து வருகிறோம். எங்களின் தாய் மரத்தின் நிழலில் இருப்பது எங்களுக்குப் பாதுகாப்பாகவும் சுகமாகவும் இருக்கிறது. எங்களைப் பிடுங்கிக் கொண்டுபோய் வேறிடத்தில் நட்டு வைத்து எங்களை அழிக்கப் பார்க்கிறாயா  என்று முறையிட்டன.” “அப்படி இல்லை, நீங்கள் உங்கள் தாய் மரத்தின் அடியில் வளர்ந்தால், உங்களால் முழுமையாக வளர்ச்சி அடைய முடியாது. நிழலில் வாழும் உங்களுக்குப் போதுமான அளவிற்குச் சூரிய ஒளி கிடைக்காது. இதன் காரணமாக நீங்கள் விரைவில் அழிந்துவிடுவீர்கள். நீங்கள் யாருக்கும் பயனில்லாமல் போய்விடுவீர்கள்” என்று அந்த விவசாயி கூறினார். உண்மையைப் புரிந்துக்கொண்ட அச்செடிகள் அவருடைய விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தன. பின்னர் அந்தச் செடிகளையெல்லம் பிடுங்கி வேறிடங்களில் தனித்தனியாக நட்டு வளர்த்தார் அந்த விவசாயி. அவைகள் வளர்ந்து பிற்காலத்தில் பன்மடங்கு பலன் தந்தன.

கடவுளின் வார்த்தையை நம்பி நம் முதுபெரும் தந்தை ஆபிரகாம் அவர் காட்டிய வழியில் புறப்பட்டுச் சென்றார். அவருடைய பயணத்தில் பல்வேறு இன்னல்களையும், இடற்பாடுகளையும், சவால்களையும் அவர் சந்தித்தாலும் இறுதியில் கடவுள் அருளிய புதிய நாட்டை உரிமையாக்கிக்கொண்டார் என்பதை இன்றைய முதல் வாசகம் பதிவு செய்கிறது. சிலுவையை அரவணைக்காதவர்கள் சிம்மாசனம் என்ற விண்ணக வாழ்வில் அமர முடியாது என்பதை புனித பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கின்றார். ஆக, பாடுகளே வாழ்வின் பாதைகளாகின்றன.

“என் வெற்றிகளை வைத்து என்னை எடைபோடாதீர்கள், மாறாக, நான் எத்தனை முறை தோல்வியிலிருந்து மீண்டு வந்தேன்” என்பதை வைத்து என்னை எடைபோடுங்கள் என்கிறார் சமூகப் போராளி நெல்சன் மண்டேலா. வலி நிறைந்த வாழ்க்கையை மண்டேலா அனுபவித்ததால்தான் இன்று ஒட்டுமொத்த கறுப்பர் இன மக்களுக்கும் புது வாழ்வு கிடைத்திருக்கிறது.

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே, ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே. உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்” என்று எழுதுகிறார் கவிஞர் பா. விஜய். ஆகவே, இயேசுவின் சிலுவை வழியில் பயணிக்கவேண்டுமாயின் எப்போதும் உடைபடத் தயாராய் இருப்போம் அதற்கான அருளை இந்நாளில் கேட்டு மன்றாடுவோம்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2022, 13:04