தேடுதல்

சீடர்களின் பாதங்களைக் கழுவும் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவும் இயேசு  

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு: அன்பே சீடத்துவத்தின் இலக்கணம்

உண்மையான அன்பு மட்டுமே எப்பொழுதும் நிலைத்து நிற்கிறது. கிறிஸ்துவின் அன்பும் இப்படிப்பட்டதே! இத்தகைய அன்பை உள்ளடக்கியிருக்கும் கிறிஸ்துவின் புதிய கட்டளையை நாமும் அணிந்துகொள்வோம்.
ஞாயிறு சிந்தனை 15052022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 14: 21b-27 II. திவெ 21: 1-5, III. யோவா 13:31-33a,34-35)

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இயேசுவின் உண்மையான சீடத்துவ அன்பை நாமும் பிரதிபலிக்க நம்மை அழைக்கின்றன. அதாவது, இயேசு நம்மை அன்பு செய்ததுபோல நாமும் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். இதனை வலியுறுத்திக் கூறும் நற்செய்தி வாசகத்திற்கு இப்போது செவிமடுப்போம்.

யூதாசு இறுதி இராவுணவு அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால், நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார். (யோவா 13:31-35).

உண்மையான துறவி யார் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்வோம். ஒரு குருவிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். தங்களுக்குள் யார் உண்மையான சீடர் என்பதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்சனை குருவிடம் சென்றது. அவர் அவர்களிடம், “சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதமாகும்போல் தெரிகிறது. ஆகவே, இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள்” என்றார். குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்தச் சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். ஆனால் மரத்தை நெருங்க முடியாத அளவிற்கு முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடர் சற்று பின்னோக்கி வந்தார். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினார். ஒரே தாண்டில் மரத்தைத் தொட்டார். பழங்களை முடிந்தளவுக்குப் பறித்தார். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா குருவே! நீங்கள் கேட்டதை கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன். ஆகவே, நானே உண்மைச் சீடன் என்றார் தற்பெருமையோடு.  

இரண்டாமவர் ஒர் அரிவாளை எடுத்து வந்தார். முள்செடிகளை வெட்டி அகற்றி ஒரு பாதை அமைத்தார். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் அந்தப் பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டு நிறைவடைந்தனர். மரத்தடியில் படுத்து சற்றுநேரம் இளைப்பாறிவிட்டுச் சென்றனர். அச்சீடரும் தேவையான அளவுக்குப் பழங்களைப் பறித்து வந்து தன் குருவிடம் கொடுத்தார். இப்போது குரு முதல் சீடரிடம், “இரண்டாவது சீடர்தான் உண்மையான துறவிக்குரிய செயல்களைச் செய்திருக்கிறார்” என்றார். முதலாமவர் மிகவும்  கோபப்பட்டு, “குருவே, இன்னும் நீங்கள் போட்டியைத் தொடங்கவே இல்லையே, அதற்குள் அவரை எப்படி சிறந்தவர் என்று கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குரு அவரிடம், “சீடரே, நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டிதானே! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே உண்ணக் கொடுத்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன். ஆனால் இரண்டாம் சீடரோ, முள்ளான பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும், வழிப்போக்கருக்கும் பழங்கள் கிடைக்கும்படிச் செய்தார். தனது பரந்துபட்ட அன்பால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவரே உண்மையான துறவியாக இருக்க முடியும்” என்றார் குரு.

இங்கே செயல் ஒன்று தான். ஆனால், அதனைச் செய்த விதத்தில்தான் நாம் வித்தியாசத்தைக் காண்கிறோம். துறவு வாழ்வுக்கு வந்துவிட்ட எல்லாருமே உண்மையான துறவிகளாக வாழ்வதில்லை என்பதுதான் நிதர்சனம். உண்மையான சீடத்துவ வாழ்வை, அதனை ஏற்றுக்கொண்டுள்ள சீடரின் அன்பு நிறைந்த நடவடிக்கைகளைக் கொண்டே தீர்மானிக்க முடிகிறது. கடவுளையும், பிறரையும்,  தன்னையும் எப்படி அன்பு செய்யவேண்டும் என்று திருச்சட்ட அறிஞருக்கு மோசேயின் சட்டத்திலிருந்து பழைய கட்டளைகளை எடுத்துக்காட்டுகிறார் இயேசு. அப்பகுதியை இப்போது வாசித்து நினைவுபடுத்திக்கொள்வோம்.

அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார் (மாற் 12: 28-31).

இவ்வாறு கூறிய இயேசு, தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியபின்பு, ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்ற புதியக் கட்டளை ஒன்றை அவர்களுக்குக் கொடுக்கின்றார். ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்று கூறியதோடு நின்றுவிடாமல், ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியதிபோல’ என்று இயேசு கோடிட்டுக்காட்டுகின்றார். அப்படி என்றால், இயேசுவின் அன்பு எத்தகைய அன்பு என்பதைச் சற்று ஆழமாக நாம் சிந்திக்க வேண்டும். இயேசுவின் அன்பு, பாவிகளை ஏற்றுக்கொண்டது, பாதங்களைக் கழுவியது, ஏழையருக்கு ஏணியாய் அமைந்தது, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரை வீட்டிற்குள் கொண்டுவந்தது, ஆணாதிக்கத்தை வேரறுத்து பெண்மையைப் போற்றியது, தரணியில் தாய்மையை தலைநிமிரச் செய்தது, வேற்றுமை அழித்து ஒற்றுமை வளர்த்தது, மன்னிப்பு வழங்கி மனித மாண்பை நிலைநிறுத்தியது, பொய்மையை அகற்றி உண்மையை ஏற்றது, தன்னலம் அகற்றி பொதுநலம் போற்றியது, சிலுவைமட்டும் தன்னை தாழ்த்திக்கொண்டது, மானிடர் மீட்புக்காய் மரணத்தைத் தழுவியது, சாவினை வென்று உயிர்ப்பைக் கண்டது. ஆக, இத்தகைய உயர்ந்த விழுமியங்களை உள்ளடக்கியதுதான் உண்மையான அன்பை அடிப்படையாகக் கொண்ட இயேசுவின் புதிய கட்டளை. ஆனால் அதேவேளையில், இயேசுவின் இந்தப் புதிய கட்டளையை அவ்வளவு சுலபமாக நாம் பின்பற்றிவிட முடியாது. காரணம், இது மிகவும் சவால் நிறைந்தது. உயிர்த்த ஆண்டவரைக் கண்டுகொண்ட பிறகே, அவர் கூறிய இந்தப் புதிய கடடளையின் உண்மைப் பொருளை சீடர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், உயிர்த்த ஆண்டவருக்காக அவர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளவும், இழக்கவும் தயாராய் இருந்தனர். இயேசுவின் அன்பினால் ஈர்க்கப்பட்ட புனித பவுலடியார் அன்பின் சிறப்பைப் பற்றி ஒரு அழகிய கவிதையாகவே எடுத்துரைக்கின்றார்.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் (1 கொரி 13:4-7).

ஒருநாள் குருவும் அவரது சீடர் ஒருவரும் குளக்கரையில் அமர்திருந்தனர். அச்சீடர் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். குருவும் நிதானமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தார். "குருவே! சுயநலமான அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்" என்றார். குரு அவருக்கு எப்படி விளக்குவது என்று சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது ஒரு இளைஞர் குளக்கரையில் தூண்டிலைக் கொண்டு மீன் பிடித்துக்கொண்டிருந்திருந்தார். அவரருகில் கூடையில் அவர் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தன. குரு அந்த இளைஞரிடம் பேச்சு கொடுத்தார். "தம்பி! மீன் என்றால் உனக்கு ரொம்ப பிடிக்குமோ?" என்றார். அவரும் "ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன என்றார்.

குருவோ, "எனக்கு வேண்டாம் தம்பி!" என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்துவிட்டார். நடப்பதையெல்லாம் அச்சீடர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இளைஞரும் சிறிது நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிப்போய்விட்டார். சற்றுநேரத்தில் ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்துவிட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப் பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். "என்ன பெரியவரே! மீன் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ?" என்று சற்றுமுன் அந்த இளைஞரிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடமும் கேட்டார். பெரியவரும், "ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து மீன்களுக்கு உணவளிப்பதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்" என்றார்.

அவரிடம் பேசிமுடித்துவிட்டு குரு சீடரின் பக்கம் திரும்பினார். "பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் 'மீனென்றால் உயிர்' என்று கூறியபோதே உனக்குத் தெரிந்திருக்கும். அந்த இளைஞர், மீன்களை 'ருசி' என்னும் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார். அவர் தன்னுடைய மகிழ்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் அந்தப் பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால் இருவரின் நோக்கமும் வேறு வேறு. மொத்தத்தில், அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை. சுயநலமில்லாத அன்புதான் உண்மையானது, நிரந்தரமானது, உலகுக்குத் தேவையானது" என்று குரு சீடருக்குப் புரிய வைத்தார்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72) என்ற குறளில், அன்பு இல்லாத நெஞ்சத்தை உடையவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழ்வர். ஆனால் அன்புள்ளம் கொண்டவரோ தன் உடம்பையும் பிறருக்கு உரிமையாக்கி மகிழ்ந்து வாழ்வர் என்கிறார் வள்ளுவர். வன்முறை, நீதி, அன்பு ஆகிய மூன்றும் இவ்வுலகை இன்றும் ஆட்சி செய்கின்றன. ‘என்னிடம் இருப்பவை மட்டுமல்ல உன்னிடம் இருப்பதும் எனக்கே சொந்தம். நீ அதைக் கொடுக்கவில்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்கிறது வன்முறை. ‘என்னிடம் இருப்பதெல்லாம் எனக்குச் சொந்தம், உன்னிடம் இருப்பதெல்லாம் உனக்குச் சொந்தம். உன்னுடைய பொருளுக்கு நான் ஆசைப்படமாட்டேன், என்னுடைய பொருளுக்கு நீ ஆசைப்படக் கூடாது’ என்கிறது நீதி. ஆனால், ‘உன்னுடையதெல்லாம் உனக்கே சொந்தம், என்னுடையதும் உனக்கே சொந்தம், நானும் உனக்குகே சொந்தம், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்’ என்கிறது அன்பு. ஆம், உண்மையான அன்பு மட்டுமே எப்பொழுதும் நிலைத்து நிற்கிறது. கிறிஸ்துவின் அன்பும் இப்படிப்பட்டதுதான். ஆகவே, இத்தகைய உண்மை அன்பை உள்ளடக்கியிருக்கும் கிறிஸ்துவின் புதிய கட்டளையை நாமும் அணிந்துகொள்வோம். அதனை அனுதினமும் வாழ்ந்து காட்டுவோம். அதற்கான அருளை ஆண்டவரிடம் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2022, 13:50