தேடுதல்

வத்திக்கானின் தூய பேதுரு வளாகம் வத்திக்கானின் தூய பேதுரு வளாகம்  (AFP or licensors)

புனித தேவசகாயம் ஆசியத் திருஅவைக்கு மிகப்பெரும் கொடை

புனிதத்துவம் என்பது, துறவறத்தாருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியது என்பதை, இல்லற விசுவாசியாகிய தேவசகாயம் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார் - கர்தினால் கிரேசியஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

முதல் இந்திய இல்லறப் புனிதரான தேவசகாயம் அவர்கள், ஆசியத் திருஅவைக்கு மிகப்பெரும் கொடை என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகளின் பத்து புதிய புனிதர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கும் மறைசாட்சி புனித தேவசகாயம் அவர்கள், தமிழ்நாட்டில் உயர்குல இந்துக் குடும்பத்தில் பிறந்து இராணுவத்துறையில் பணியாற்றி, திருவிதாங்கூர் அரண்மனையில் முக்கிய பதவி வகித்தவர் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

நீலகண்டன் என்ற இயற்பெயரைக்கொண்ட இவர், நற்செய்தியை தழுவிக்கொண்டபின் லாசர் என்ற பெயரை ஏற்றார், அதற்குப்பின் அனைத்து மக்கள் மத்தியிலும் இயேசுவின் பெயரால் சமத்துவத்தைப் போதித்தார், இதுவே அவர் கைதுசெய்யப்பட்டு மறைசாட்சி மரணத்தை ஏற்பதற்குக் காரணமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இன்றைய இந்தியாவுக்கு இப்புனிதரும் அவர் வழங்கும் செய்தியும் காலத்திற்கேற்றவையாக உள்ளன என்று கூறியுள்ளார்.

இவரது கிறிஸ்தவ நம்பிக்கை ஒப்பிடப்படமுடியாதது, மற்றும், கிறிஸ்து மீது அவர் கொண்டிருந்த அன்பு மாறாதது என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

புனிதத்துவம் என்பது, துறவறத்தாருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியது என்பதை, இல்லற விசுவாசியாகிய தேவசகாயம் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார், இன்று திருஅவையில் பொதுநிலையினரின் அழைப்பு பற்றி அதிகமதிகமாகப் பேசுகிறோம், இந்த இந்தியப் பொதுநிலையினர் மற்றும் குடும்ப மனிதராகிய தேவசகாயம், நற்செய்தியின் விழுமியங்களுக்கு உண்மையான சாட்சியாக இருக்கிறார் என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2022, 17:32