தேடுதல்

பொதுக் காலம் 21-ஆம் ஞாயிறு பொதுக் காலம் 21-ஆம் ஞாயிறு   (©patma145 - stock.adobe.com)

பொதுக் காலம் 21ம் ஞாயிறு: ‘இடுக்கண் வழியே இறையாட்சிக்கான வழி!'

அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், பொதுநலம் பேணல் ஆகியவற்றைக் கொண்டவரே இடுக்கண் வழியில் பயணிப்பவர்.
ஞாயிறு சிந்தனை 20082022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.  எசா 66: 18-21    II.   எபி 12:5-7,11-13   III.   லூக் 13: 22-30)

இன்று நாம் பொதுக் காலத்தின் 21-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். யாரெல்லாம் மீட்படைய முடியும் என்ற கேள்விக்கு விடை பகர்கின்றன இன்றைய வாசகங்கள்.  அதிலும் குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடுக்கண் வழியாக அதாவது, சிலுவை வழியாக மட்டுமே இறையாட்சிக்குள் நுழையமுடியும் என்பதை வெட்டவெளிச்சமாக்குகின்றார் இயேசு. இப்போது நற்செய்தி வாசகத்திற்கு நம் செவிகளைத் திறப்போம். இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில், பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

Robert Frost என்ற கவிஞர், The Road Not Taken என்ற கவிதையில் இரண்டு வழிகள், அதாவது, Two roads குறித்து விளக்குகிறார். இதற்கு ‘மஞ்சள் காட்டில் இரண்டு வழிகள்’ என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பயணம் மேற்கொள்ளும் இக்கவிஞர் ஒரு காட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கின்றார். அந்தக் காட்டிற்குள் செல்வதற்கு அங்கே இரண்டு வழிகள் காணப்படுகிறன்றன. ஒருவழி, பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக இருக்கின்றது. அந்த வழியில் சென்றால் பேராபத்துக்களைத் தவிர்த்து சுலபமாக அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடலாம். மேலும், இதற்கு முன்பாக பலர் இப்பாதையில் பயணித்துச் சென்றதற்கான காலடித்தடங்களும் காணப்படுகின்றன. ஆனால், மாற்றொரு வழி பார்ப்பதற்கு மிகவும் குறுகியதாகக் காட்சியளிக்கிறது. கற்களும் முற்களும் அவ்வழியில் நிறைந்திருக்கின்றன. அவ்வழியில் சென்றால் இலக்கை அடையமுடியுமா என்பது சந்தேகம்தான். மேலும், இவ்வழியில் அதிகம் பேர் பயணித்ததற்கான காலடித்தடங்கள் காணப்படவில்லை. இந்நிலையில், எந்த வழியைத் தேர்வு செய்து பயணிப்பது என அவர் சிந்திக்கிறார். இறுதியாக, சவால்கள் நிறைந்த இரண்டாவது வழியை அவர் தேர்ந்துகொள்கிறார். Robert Frost இந்தக் கவிதையை முடிக்கும்போது Two roads diverged in a wood, and I— I took the one less traveled by, And that has made all the difference. அதவாது, யாரும் அதிகம் பயணிக்காத அந்த இரண்டாவது வழியைத் தான் தேர்ந்துகொண்டதாகவும், அதுவே அவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

"சுமையில்லாமல் பயணமில்லை சுவையில்லாமல் வாழ்வுமில்லை. சுமைகளை விரும்பி ஏற்றிடும் தோள்களில், சுமையும் சுவையாகும் இறைவனின் வழியாகும். வேதனையில்லாமல் பயணமில்லை. வெற்றியில்லாமல் வாழ்வுமில்லை. துன்பமாம் சிலுவை வெற்றியின் சின்னம். வேதனை உரமாகும் தேவனின் வழியாகும்" என்று தவக்காலத்தில் நாம் பாடும் ஒரு பாடலின் வரிகள் இடுக்கண் வழியான நமது பயணமே வாழ்வில் வெற்றியைக் கொணரும் என்பதை நமக்கு நன்கு உணர்த்துகின்றன. இடுக்கண் வழியில் பயணித்து, சமுதாய முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து, தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் பலரை வரலாறு பதிவு செய்துள்ளது. அவர்களில் முக்கியமான ஒருவராக நான் கருதுவது மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். ஒரு கிறிஸ்தவராக இயேசுவைப் போன்று இடுக்கமான வழியில் பயணித்து, சிலுவைப் பாடுகளை ஏற்று அனுபவித்து, கறுப்பர் இனமக்களின் விடுதலைக்கு வித்திட்டவர் இவர். “இருட்டில் மட்டுமே நட்சத்திரங்களைப் பார்க்கமுடியும்” என்ற அவரின் வார்த்தைகள், இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும், “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். என்ற இறைவார்த்தையோடு ஒன்றித்துப் போவதைப் பார்க்க முடிகிறது.

ஆப்பிரிக்கர்களின் குடி உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், 1963-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28-ஆம் தேதி, வாஷிங்டனில் பெரும் திரளாகக் கூடியிருந்த ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் முன்னால் ‘I have a dream’ அதாவது, ‘எனக்கொரு கனவு உண்டு’ என்ற உலகப் புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். ``100 ஆண்டுகள் ஆன பிறாகும் நாம் இங்கு அடிமைகளாகவே இருக்கிறோம். நியாயம் என்னும் கருவூலம் இங்குக் காலியாக இருக்கின்றது. நமக்கு இங்குச் சமத்துவம் கிடைக்காமல் ஓயப்போவதுமில்லை; அமைதியடையப் போவதுமில்லை. இந்தப் போராட்டம் வெறும் தொடக்கம்தான். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான  வன்முறைகள் அடங்கும் வரை, போராடிச் சளைத்த நமது தேகம் ஓய்வெடுக்க நகரத்தின் உணவகங்களில் இடம் கிடைக்கும் வரை, மிசிசிப்பியின் (mississippi) மூலையில் இருக்கும் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கருக்கு ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும் வரை நாம் திருப்தி அடையப்போவதில்லை” என்றார். அவருடைய உரையின் ஒவ்வொரு வரிக்கும் இடையே எழுந்த கரவொலிகளும் ஆரவாரமும் அந்த வார்த்தைகளின் பலத்தை எடுத்துக்காட்டின. அவரின் இந்த உரை, ஆப்பிரிக்க அமெரிக்கர்களை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வெள்ளையர்களையும் கவர்ந்திழுத்தது. ``இன்றும், இந்த அமெரிக்க மண்ணில் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் அடிமைச் சங்கிலியில் சிக்கி, தொடர்ந்து பிரிவினைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகிவருகிறார்கள். என் நண்பர்களே, இன்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்றும் நாளையும் நாம் துன்பங்களை எதிர்கொண்டாலும், ஒருநாள் இந்தத் தேசம் உயர்ந்து எழும். மக்கள் உயிரோட்டத்துடன் வெளியே வருவார்கள். எல்லா மனிதர்களும் சமமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் ஜார்ஜியாவின் செம்மலையில், அடிமைகளின் வாரிசுகளும், அடிமை முதலாளிகளின் வாரிசுகளும் சகோதரத்துவ மேடையில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ஒருநாள் மிசிசிப்பியின் நிலை, அநீதியின் வெம்மையும், அடக்குமுறையின் வெம்மையும் இல்லாத சுதந்திரமும் நீதியும் நிறைந்த பாலைவனச் சோலையாக உருமாறும். நான் ஒரு கனவு காண்கிறேன்... அது என் நான்கு குழந்தைகளும் வாழும் தேசத்தில், அவர்கள் தோலின் நிறத்தால் வேறுபடுத்தப்பட மாட்டார்கள். பதிலாக, அவர்களின் குணத்தால் மதிப்பிடப்படுவார்கள். இன்று அலபாமாவில் நிற பேதத்தால் வஞ்சிக்கப்படுபவர்கள், ஒருநாள் அதே அலபாமாவில் வெள்ளை இனக் குழந்தைகளுடன் சகோதரர் சகோதரிகளாக ஒன்றாகக் கரம்கோர்த்து செல்வார்கள். இன்று நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் இந்தச் சமவெளி உயர்த்தப்படும்; மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும்; கரடுமுரடான இடங்கள் அனைத்தும் சமத்தளமாக்கப்படும், குறுகலான பாதைகள் நேராக்கப்படும்; கடவுளின் செல்வாக்கு வெளிப்படுத்தப்படும்; எல்லா மனித உடல்களும் ஒன்றாகவும் சமமாகவும் பார்க்கப்படும். இது என் நம்பிக்கை!" என்று கர்ஜித்தார். இந்த உரை நிகழ்த்திய ஐந்தே ஆண்டுகளில், அதாவது, 1968-ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள், அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் சிந்திய இரத்தம் இன்று அமெரிக்காவில் வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையே சமத்துவ வாழ்வு நிலவ காரணமாயிருக்கிறது. இடுக்கண் வழியில் பயணித்தால் எப்படி விடுதலை என்னும் மீட்புக் கிடைக்கும் என்பதற்கு மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் ஒரு மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.

ஜார்கண்ட் மாநிலப் பழங்குடியின மக்களின் விடுதலைக்காக 35 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர் அருள்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள். இதற்காகவே இவர் சிறையில் வதைக்கப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் நோயுற்று இறந்தார். இதுவும் ஒருவிதத்தில் படுகொலைதான் என்று பல்வேறு பத்திரிகைகளும், சமூக ஆர்வலர்களும் குரலெழுப்பியதைப் பார்த்தோம். இவர் தெரிந்துகொண்ட வழி இடுக்கமான வழி. அதனாலதான், "இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே (மத் 7:13,14) என்று மத்தேயு நற்செய்தியில் அறிவுறுத்துகின்றார் இயேசு.  

பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம், ஆணவம், இறுமாப்பு, சுயநலம், பிரித்தாளும் சக்தி ஆகிய அனைத்தையும் கொண்டோர் அழிவுக்குச் செல்லும் அகன்ற வழியில் பயணிக்கும் மனிதரைக் குறிக்கின்றன. அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், பொதுநலம் பேணல் ஆகியவற்றைக் கொண்டோர் இடுக்கண் வழியில் செல்லும் சிலரை மட்டுமே குறிக்கின்றன. மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன், காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜர், கக்கன், நல்லக்கண்ணு, ஸ்டேன் சுவாமி போன்ற சமூகநலவாதிகள் தெரிந்துகொண்ட வழிதான் இடுக்கண் வழி.

நமதாண்டவர் இயேசு, இடுக்கண் வழியைக் குறித்துக் காட்டியது மட்டுமன்றி, அதில் பயணித்து எப்படி வெற்றிகாணவேண்டும் என்பதையும் நமக்கு வாழ்ந்துகாட்டி உள்ளார். அவருடைய பாலைவன சோதனையில் பதவி, அதிகாரம், புகழ், வீண்பெருமை, செருக்கு ஆகியவற்றைக் கொண்ட அகன்ற  வழிப் பாதையைக் காட்டியது அலகை. ஆனால் இயேசு அதற்கு நேரெதிரான தாழ்ச்சி, ஏழ்மை, நிந்தை அவமானம், உண்மை, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய இடுக்கண் வழியை எடுத்துக் காட்டி அதனை தெரிந்துகொண்டார். இன்றைய நம் சமுதாயத்தில் இடுக்கண் வழியைத் தேர்வு செய்ய மக்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. காரணம், இது அதிக சவால்கள் நிறைந்த வழி என்பதுதான். ஆனால், கடவுள் எனக்களித்த இந்த வாழ்வு என்னும் கொடை எனக்கானது மட்டுமல்ல, மாறாக, இது எல்லாருக்குமானது. அதாவது, பிறரை வாழ்விக்க எனது வாழ்வையே முற்றிலுமாக அர்ப்பணிப்பதில்தான் இந்த வாழ்வின் மகத்துவம் அடங்கி இருக்கிறது என்று நினைப்பவர்கள் மட்டுமே, இறந்தும் வாழ்கிறார்கள். இறையாட்சியின் விதையாகிப் போகிறார்கள்.

நமது தமிழத்தில் மறைசாட்சியாய் மரணமடைந்த புனித அருளானந்தர் தெரிவுசெய்த பாதை ஒரு இடுக்கண் வழிப் பாதை. இறையாட்சி இம்மண்ணில் வேரூன்ற வேண்டுமானால் இந்தப் பாதைத்தான் சரியானது என்பதைத் தேர்வுசெய்து அதில் பயணித்து வெற்றிகண்டார். இவரின் வீரத்துவமிக்க வாழ்வின் பாதையில், இன்று எத்தனையோ அருள்பணியாளர்களும், இருபால் துறவியரும் பயணித்து வருகின்றனர். ஆகவே, இடுக்கண் வழிதான் இறையாட்சிக்கான வழி என்பதை உணர்ந்து வாழ்வோம். இத்தகைய வழியில் துணிந்து பயணிப்பற்கான அருளை வழங்கிட ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2022, 14:04