தேடுதல்

பங்களாதேஷில் சிறார் தொழிலாளர் பங்களாதேஷில் சிறார் தொழிலாளர் 

பங்களாதேஷ் அரசின் சிறார் பாதுகாப்பு திட்டத்திற்கு வரவேற்பு

பங்களாதேஷில் 15 வயதுக்குட்பட்ட 4 கோடியே 50 இலட்சம் சிறார், வீடுகளில் உடல் அளவிலும் உளவியல் ரீதியிலும் வன்முறைக்கு உள்ளாகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

பங்களாதேஷில் சிறாரைப் பாதுகாப்பதற்கென்று அரசு மேற்கொண்டுவரும் திட்டங்களை வரவேற்று பாராட்டியுள்ளது, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை.

பங்களாதேஷ் பிரதமர் Sheikh Hasina அவர்கள், சமுதாயங்களில் சிறாரைப் பாதுகாப்பதற்கென்று ஆறாயிரம் சமூகநலப் பணியாளர்களைக் கூடுதலாகப் பணியில் அமர்த்தியிருப்பதால், அந்நாட்டில் இப்பணியாளரின் எண்ணிக்கை மூவாயிரத்திலிருந்து ஒன்பதாயிரமாக உயர்ந்துள்ளது என்று யூக்கா செய்தி கூறுகின்றது.

“பங்களாதேஷில் சிறார் பாதுகாப்பு” என்ற தலைப்பில் தலைநகர் டாக்காவில் ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்பாடு செய்த முதல் தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் ஹசினா அவர்கள், நாட்டில் சிறார் பாதுகாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சிறார் பாதுகாப்புச் சேவைகள், ஒவ்வொரு சமுதாயத்திலும் இடம்பெறும் என்று அறிவித்தார்.

அரசின் இத்திட்டம் குறித்து பாராட்டிப் பேசிய அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் செயலர் அருள்பணி Liton Hubert Gomes அவர்கள், அரசின் இத்திட்டத்திற்கு கத்தோலிக்கத் திருஅவை தனது முழு ஆதரவை வழங்கும் என்று அறிவித்துள்ளார்.

பங்களாதேஷில் 15 வயதுக்குட்பட்ட 4 கோடியே 50 இலட்சம் சிறார், வீடுகளில் உடல் அளவிலும் உளவியல் ரீதியிலும் வன்முறைக்கு உள்ளாகின்றனர். மேலும், ஏறத்தாழ 17 இலட்சம் சிறார், கடினமான தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மற்றும், பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட சிறார் தெருக்களில் வாழ்கின்றனர் என்று யுனிசெப் கணக்கிட்டுள்ளது.

இதற்கிடையே, அரசு, 14,884 தெருச்சிறாருக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது, 758 சிறார், அவர்களின் குடும்பங்களோடு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர், மற்றும். ஏறத்தாழ 5,229 சிறாருக்கு இரவில் தூங்குவதற்கு வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது என பெண்கள் மற்றும் சிறார் பாதுகாப்பு அமைச்சர் Fazilatun Nessa Indira அவர்கள் அறிவித்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2022, 12:39