தேடுதல்

‘சிலுவையே சீடத்துவத்தின் அடையாளம்!' ‘சிலுவையே சீடத்துவத்தின் அடையாளம்!'  (© Vatican News)

பொதுக் காலம் 23ம் ஞாயிறு : ‘சிலுவையே சீடத்துவத்தின் அடையாளம்!'

உண்மையான துறவு வாழ்வுக்குரிய இலக்கணங்களைத் தெளிந்து தேர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் உலகில் ஒளிர்ந்திடுவோம்.
ஞாயிறு சிந்தனை 004092022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I. சாஞா 9: 13-18   II. பில  9b-10,12-17    III. லூக் 14: 25-33)

பொதுக் காலத்தின் 23-ஆம் ஞாயிற்றுக்கிழமைக்குள் இன்று நாம் நுழைகின்றோம். சிலுவைதான் சீடத்துவத்தின் அடையாளம் என்பதே இன்றைய நற்செய்தி வாசகத்தின் மையக்கருத்தாக அமைந்துள்ளது. இடுக்கமான வழிதான் சிலுவை வழி, அதாவது இறையாட்சிக்கான வழி என்பதை இதற்கு முன்பு மக்களிடம் எடுத்துரைத்த இயேசு ஆண்டவர், ‘சிலுவையே சீடத்துவத்தின் அடையாளம்!’ என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார். இப்போது நற்செய்தி வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. “உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால், முடிக்க இயலவில்லை’ என்பார்களே! “வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியப் பண்புகளை சீடத்துவ வாழ்வின் இலக்கணங்களாக முன்வைக்கின்றார் இயேசு. முதலாவது, உறவுகளையும் உயிரையும் மேலாகக் கருதுபவரும் இரண்டாவதாக, தம் சிலுவையைச் சுமக்கத் தயங்குபவரும் மூன்றாவதாக, தம் உடமையையெல்லாம் விட்டுவிடாதவரும் சீடத்துவ வாழ்விற்குத் தகுதியற்றவர்களாக எடுத்துக்காட்டுகின்றார். இந்த மூன்று தலைப்பின் கீழ் நமது தியானச் சிந்தனைகளை இப்போது விரிவாக்குவோம்.

முதலாவதாக, என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது என்கின்றார் இயேசு. புனித பிரான்சிஸ் சவேரியார், புனிதர் அருளானந்தர், இராபர்ட் தெ நொபிலி, வீரமா முனிவர் போன்ற இயேசு சபை மறைப்பணியாளர்கள் நம் தமிழகத்திற்கு வந்து பணியாற்றியவர்கள் என்பதை நாம் அறிவோம். புனித சவேரியார் இந்தியாவிற்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அருள்பணியாள் ஒருவர், “இந்தியாவிற்குச் செல்லும் நீங்கள், உங்கள் தாய் தந்தையரின் இறப்புக்குக் கூட உங்களால் வரமுடியாதே” என்று கூறியபோது, “அவர்களை நான் விண்ணகத்தில் பார்த்துக்கொள்வேன்” என்று கூறினாராம். அவ்வாறே, தமிழகத்தில் மறைப்பணியாற்றிக் கொண்டிருந்த புனித அருளானந்தர், தனது பணிகளுக்கு இடையே போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பனுக்கு வந்து தனது தாயைச் சந்திக்கின்றார். அப்போது, அவரது இளைத்த உடலையும், கைகளிலுள்ள காயங்களையும் பார்த்துவிட்டு கதறி அழும் அவரது தாய், “இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளைத் தொடர்ந்தாற்றுவதற்கு மீண்டும் நீ இந்தியாவிற்குச் செல்லத்தான் வேண்டுமா.... அங்கு நீ போகவேண்டாம் மகனே. என்னோடு தங்கிவிடு” என்று கெஞ்சிக் கேட்கிறார். அப்போது அருளானந்தர், “துன்பங்களே இல்லாத வாழ்க்கை இருக்க முடியாது அம்மா... என்னைத் தடுக்காதீர்கள். எனது உயிரும் உடலும் மறவ நாட்டிற்கே சொந்தம்” என்று கூறுகிறார். மறுபுறம், அவருக்கு மிக உயர்ந்த பதவியைக் கொடுத்து எப்படியாவது தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு இளவரசரும் விரும்பினார். ஆனால், இயேசுவின் வழியில் தானும் இலட்சிய மரணத்தை ஏற்கவேண்டும் என்ற அவரின் தணியாத தாகத்தால், அந்தத் தடைகளை எல்லாம் மீறி மீண்டும் தமிழகம் வந்து மறைசாட்சியாக உயிர்துறந்தார் புனித அருளானந்தர். இயேசு கூறும் முதல் சீடத்துவ வாழ்வின் இலக்கணத்திற்கு இவ்விருவரின் வாழ்வும் மிகப்பெரும் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. அண்மையில் மருத்துவமனை ஒன்றில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பழங்குடி இன மக்களின் பாதுகாவலர் இயேசு சபைப் பணியாளர் ஸ்டேன் சுவாமியும் இத்தகையோர்தான்.

இரண்டாவதாக, "தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது" என்கின்றார் இயேசு. சுமக்க மறுப்பவர் கடக்க முடியாது. ஏற்க மறுப்பவர் ஏற்றம் காண முடியாது. இலட்சியச் சிலுவைகளைச் சுமக்க மனமில்லாதவர்களுக்குத் துறவு வாழ்வு தூரம்தான். இக்கதை நாம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், இயேசு கூறும் இரண்டாவது சிந்தனைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால், இதனை மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டுவருவோம். மூன்று இளைஞர்கள் ஆளுக்கொரு சிலுவையைத் தூக்கிக்கொண்டு பயணம் மேற்கொண்டனர். அவைகள் மிகவும் கனமான சிலுவைகளாக இருந்தபோதிலும் முதல் இரண்டுபேரும் முக்காமல் முனகாமல் மகிழ்ச்சியுடன் அதனைத் தூக்கிச் சென்றனர். ஆனால் மூன்றாமவர் முணுமுணுத்துக்கொண்டே தனது சிலுவையைத் தூக்கிச்சென்றார். ஒரு கட்டத்தில் இயேசுவை அழைத்த அவர், "இந்தச் சிலுவையைச் சுமக்க என்னால் முடியவில்லை. இதன் பாரத்தை சற்று குறைக்க முடியுமா" என்று கேட்டார். இயேசு மறுப்பேதும் சொல்லாமல், ஒரு கோடரி கொண்டு அந்தச் சிலுவையின் அடிப்பாகத்தை சிறிது வெட்டி எடுத்துவிட்டு, "இப்போது தூக்கிப் பார்" என்றார். சிலுவையைத் தூக்கித் தோளில் வைத்த அவர், "பரவாயில்லை இயேசுவே, சிறிது தூரம் சுமந்து பார்க்கிறேன்" என்றார். சிறிது தூரம் சென்ற அவர், “இயேசுவே சிலுவையின் பாரத்தை இன்னும் சிறிது குறைந்துவிட்டால், சுமப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்” என்றார். எனவே, இயேசு மீண்டும் ஒருமுறை கோடரி கொண்டு, அதன் அடிப்பாகத்தை இன்னும் கொஞ்சம் வெட்டி எடுத்துவிட்டு, “இப்போது தூக்கிப்பார்’ என்றார். அவ்விளைஞரும் சிலுவையைத் தூக்கிக்கொண்டு சிறிதுதூரம் நடக்க, மீண்டும் அவர் இயேசுவை அழைத்து அதன் கனத்தை இன்னும் சிறிது குறைக்கச் சொன்னார். இயேசு மூன்றாம் முறையும் அவ்வாறே செய்தார். மூன்றுமுறை வெட்டி எடுத்ததால் அச்சிலுவையின் பாரம் குறைந்ததுடன், அதன் உயரமும் குறைந்து சிறியதாகிவிட்டது. அப்போது சிலுவையைத் தூக்கிய இளைஞன், “ஆகா, இப்போதுதான் சுமப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கிறது. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இனி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் என்னால் பயணிக்க முடியும்” என்று கூறி மகிழ்வுடன் சிலுவையைத் தூக்கிச்சென்றார். மூவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது தூரத்தில் பள்ளம் ஒன்று அவர்களின் பாதையில் குறுக்கிட்டது. பாரம் பற்றி கவலைப்படாமல் சிலுவையைத் தூக்கிச்சென்ற மற்ற இரு இளைஞர்களும் அந்தப் பள்ளத்திற்கு இடையே சிலுவையை வைத்து அதன்மீது நடந்து அடுத்தப்பக்கம் சென்றுவிட்டனர். மூன்றாமவர் வந்தார். பள்ளத்திற்கிடையே தான் தூக்கி வந்த சிலுவையை வைத்தார். அந்தச் சிலுவைச் சிறியதாக இருந்ததால் அது அந்தப் பள்ளத்திற்குள் விழுந்துவிட்டது. அப்போது அவர் இயேசுவை அழைத்தார். ஆனால் இயேசு, ”என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறிவிட்டார். சுமக்கத் தெரிந்தவர்கள் வாழ்கிறார்கள், மற்றவர்கள் வீழ்கிறார்கள் என்பது நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

மூன்றாவதாக, "உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது" என்கின்றார் இயேசு. ஜப்பானில் உணவகம் நடத்திக் கொண்டிருந்த அந்த ஜப்பானிய முதலாளிக்கு புத்தமதத் துறவிகளில் யாரையாவது ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. புத்தமதத் துறவிகளுக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனி உடைகளோ, அல்லது, அடையாளங்களோ இல்லாதக் காரணத்தால் அது அவ்வளவு எளிதான காரியமாகப் படவில்லை அவருக்கு. எனினும் அந்த ஆசை மட்டும் அவருக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றும் அதே ஆசையுடன் தன் உணவகத்திற்கு  வருவோரையும் போவோரையும் கவனித்துக் கொண்டிருந்தார் அவர். அப்பொழுது அங்கே தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஒருவர் மட்டும் அவருக்கு வித்தியாசமாகத் தெரிந்தார். அதனால் அவரைக் கூர்ந்து கவனித்தார் அந்த முதலாளி.  பரபரப்பாய் வந்து அவசர அவசரமாய் காரியம் முடித்து விருட்டென ஓடுவோர் பலரின் மத்தியில், மிகவும் பொறுமையாக எவ்வித பரபரப்பும் இன்றி, அமைதியாக ஒவ்வொரு மொரடாகத் தேநீரை உறிஞ்சி சுவைத்து அருந்திக் கொண்டிருந்தார் அத்துறவி. தான் செய்யும் வேலையிலே  தன்னையே முழுமையாய்க் கையளித்து முழுமனதுடன் அதனில் ஒன்றித்திருந்த அத்துறவியின் செயலும் எளிமை நிறைந்த துறவு வாழ்வும் அந்த முதலாளிக்கு வித்தியாசமாய்ப்பட்டது. மெதுவாகச் சென்று அவரிடம் உரையாடினார். அப்போது, அவர் ஒரு புத்தமதத் துறவி என்பதை கண்டு கொண்டார் அம்முதலாளி. அவர்களின் உரையாடலும் நட்பும் பல மாதங்கள் தொடர்ந்தன. ஒருநாள் அந்த உணவகத்தின் முதலாளி, தன் உடமைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒரு புத்தமதத் துறவியாய் மாறினார். துறவு வாழ்வின் பயணம் என்பது அவசரகதியில் அமைவதல்ல, மாறாக, ஆழ்ந்துச் சிந்தித்துத் தொடங்குவதில் அமைந்துள்ளது.

இயேசு குறித்துக்காட்டும் இந்த மூன்று நிலைகளிலும் நாம் வெற்றிபெற வேண்டுமானால், நமக்குத் ‘தேர்ந்து தெளிதல்’ (discerment) என்ற பண்பு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாகத்தான், கோபுரம் கட்டவிரும்பிய ஒரு மனிதர் பற்றியும், போருக்குச் செல்லும் ஒரு அரசர் பற்றியும் எடுத்துரைத்து துறவு வாழ்வில் நூழைவதற்கு முன்பு, நாம் சரியானவற்றைத் தெளிந்து தேர்வுசெய்ய வேண்டும் என்கின்றார். இயேசு சபையின் நிறுவுநரான புனித இஞ்ஞாசியார், துறவு வாழ்வில் ‘தெளிந்து தேர்தல்’(discerment) என்ற பண்பு மிகவும் முக்கியமானது என்கின்றார். நான் யார், எந்த நோக்கத்திற்காக நான் இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கின்றேன், எனது கடமைகளும், பொறுப்புகளும் எவை என்பதை ஆய்ந்துணர்ந்து, கடவுளுக்கு உகந்தவை எவையோ அவற்றை மட்டும் தேர்வு செய்து அதன்படி வாழ்வதுதான் ‘தெளிந்து தேர்தல்’ என்கின்றார். மேலும், இப்பண்பு நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் வெளிப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதேவேளையில், கடவுளுக்கு உகந்தவற்றை நாம் தெளிந்து தேர்ந்து வாழும்போது, சிலுவை என்னும் சுமைகளை நாம் சுமக்கத்தான் வேண்டும். அதில்தான் மீட்பிற்கான வெற்றியும் அடங்கியிருக்கிறது. இதனால்தான், “தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது” என்கின்றார் இயேசு.

இன்றையத் துறவு வாழ்வில், பலரின் நிலைக் கவலைக்கிடமாகவே இருக்கின்றது என்பதை பலரின் வாழ்வைப் பார்க்கும்போது நமக்குத் தெரிகின்றது. பெரும்பாலான துறவியர் சாதி, பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு ஆகிய பெரும்போதைகளில் மூழ்கிப் போயிருக்கின்றனர். இது கிடைக்காதபோது அவர்கள் விரக்தியின் விளிம்பு நிலைக்குச் செல்கின்றனர். ஏன், இவைகளைப் பெறமுடியாத ஒரு சிலர் இறந்தும் போயிருக்கின்றனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம். நமது துறவு வாழ்வின் பயணத்தில் இலட்சியங்கள், விழுமியங்கள், வாழ்வியல் நெறிகள், அறநெறிக் கொள்கைகள், துறவற வார்த்தைப்பாடுகள், ஆகிய இறையாட்சிக்கான சிலுவைகளைத் தூக்கிச்செல்லாமல், சாதி, இனம், பணம், பதவி, அதிகாரம், அகங்காரம், புகழ், மமதை, வீண் பெருமை ஆகிய சாத்தானுக்கே உரிய மதிப்பீடுகளைச் சுமந்தலைகின்றோம். நிலையற்ற இவ்வுலகில் இவைகள்தாம் நிலையானவைகள் என்று அவைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். அழிந்துபோகும் பொருள்களை அடைவதற்காக அழியாத ஆன்மாவை இழக்கத் தயாராகின்றோம். இதன் காரணமாகவே, நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது என்று, வாழ்வின் இயலாமைப் பற்றி எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகம், கடவுள் அருளும் தூய ஆவி என்னும் ஞானத்தால் மட்டுமே நாம் கடவுளின் திட்டங்களை அறிந்து அவற்றுக்கேற்ப வாழ்ந்திட முடியும் என்ற நம்பிக்கையையும் நமக்கு வழங்குகின்றது. ஆகவே, உண்மையான துறவு வாழ்வுக்குரிய இலக்கணங்களைத் தெளிந்து தேர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் உலகில் ஒளிர்ந்திடுவோம். அதற்கான அருள்வரங்களை ஆண்டவரிடம் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2022, 12:44