தேடுதல்

பொதுக் காலம் 25ம் ஞாயிறு பொதுக் காலம் 25ம் ஞாயிறு 

பொதுக் காலம் 25ம் ஞாயிறு : ‘கடவுளா?... செல்வமா....?'

கடவுளா? செல்வமா? என்ற நிலை வரும்போது, செல்வத்தைவிடுத்து கடவுளை மட்டுமே தேர்வுசெய்வோம்.
ஞாயிறு சிந்தனை 18092022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. ஆமோ 8: 4-7 II. 1 திமோ 2: 1-8 III. லூக் 16: 1-13)

ஒரு கிராமத்தில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பெரும்செல்வம் பெற்று இந்த ஊரிலேயே பெரும் பணக்காரனாகத் திகழவேண்டும் என்று அவன் கனவு கண்டான். சிறுக உழைத்து பெறுக சம்பாதிக்க வேண்டும் என்பதும் அவனுடைய பேராசையாக இருந்தது. ஆகவே, பெரும்பொருள் ஈட்டவேண்டும் என்ற எண்ணமுடன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டிற்குச் சென்றான். புதிய நாட்டை அடைந்ததும், அந்த நாட்டின் மன்னனைச் சந்தித்து தன்னுடைய மனதிலுள்ள ஆசைகளை எல்லாம் அவரிடம் எடுத்துக் கூறினான். அவனுக்கு உதவ ஒத்துக்கொண்ட மன்னர், அப்பேராசைக்காரனை நோக்கி, “எங்கள் நாட்டில் எங்கும் செழிப்பான வயல் வெளிகள் உள்ளன. அந்த நிலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் நீ எடுத்து கொள்ளலாம். ஆனால், அதற்கு நீ ஒரு போட்டியில் பங்குபஆற வேண்ட்.. அந்தப் போட்டி என்னவென்றால், முதலில் 500 பொற்காசுகளை நீ எங்களிடத்தில் கொடுக்க வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உனக்கு எந்தெந்த நிலங்கள் வேண்டுமோ அதையெல்லாம் நீ சுற்றி வர வேண்டும். உன்னால் எவ்வளவு சுற்றி வர முடிகிறதோ அந்த நிலங்கள் எல்லாம் உனக்கே சொந்தம். ஆனால், மாலை 6 மணிக்குள் போட்டித் தொடங்கிய அதே இடத்திற்கு நீ திரும்பி வந்துவிடவேண்டும். அப்படி உன்னால் திரும்பி வரமுடியவில்லை என்றால் உனக்கு எதுவும் கிடைக்காது ”என்றார். அதைக் கேட்ட அப்பேராசைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அப்போட்டிக்கு ஒத்துக் கொண்டான். காலை 6 மணிக்குப் போட்டி தொடங்கியது. மன்னரும் போட்டியைக் காண வந்தார். அவன் ஓடத் தொடங்கினான். தொடங்கிய இடத்தில் ஒரு அழகான மாளிகையும், அதனைச் சுற்றி ஒரு நதியும். அந்த மாளிகையின் அழகில் மயங்கிய அவன், அதைச் சுற்றி ஓட. பல மணி நேரத்தை அதற்கென்றே செலவிட்டான். அந்த மாளிகையைச் சுற்றி முடித்து சற்றுஇளைப்பனளைப்பனளைப்பன. பிறகு மீண்டும் உற்சாகத்துடன் ஓடத் தொடங்கினான்கினான்.. சற்று தொலைவில் பல பூக்கள் நிறைந்த தோட்டத்தைக் கண்டான். அந்தத் தோட்டத்தின் அழகில் மயங்கி அதனையும் சுற்றி வந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். ஆனாலும், அவனுடைய பேராசைத் தீரவில்லை. திராட்சைத் தோட்டம், அழகிய குளம், பலவகை கனிதரும் மரங்கள், எனக் கண்ணில் பட்டதையெல்லாம் சுற்றிச் சுற்றி ஓடினான். நேரம் போய்க்கொண்டிருப்பதைக் கூட உணராமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தான். இறுதியாக மாலை 5 மணிக்குத் தன்னுடைய ஓட்டத்தை நிறுத்தினான். இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்து, போட்டித் தொடங்கிய இடத்தை நோக்கித் திரும்பி ஓடிவரத் தொடங்கினான். ஆனால், பசியினாலும், தொடர் ஓட்டத்தினாலும் அவனுடைய உடல் சோர்ந்து போய்விட்டது உடலில் வெப்பம் அதிகமானதும் மூக்கிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது. அவனால் நடக்கக் கூட முடியாத நிலையிலும் தொடர்ந்து ஓடினான். இறுதியாக மன்னனிடத்தில் வந்து சேர்ந்ததும் “நான் சுற்றி வந்த இடமெல்லாம் எனக்கே சொந்தமாகிவிட்டது. இனி நான்தான் என் ஊரிலேயே மிகப்பெரும் பணக்கார.னயர. என்னை மிஞ்சுவதற்கு இனி யாருமே இல்லை ”என்று என்று மமதையுடன், மயங்கி விழுந்து மடிந்தான் அவன். அப்போது, ​​மன்னன் தன் பணியாளர்களை நோக்கி, “இவன் சுற்றி நிலத்தில் 6 அடிக் குழித் தோண்டி இவனைப் புதைத்துவிடுங்கள் புதைத்துவிடுங்கள்” என்று கட்டளை இட்டார்.

பொதுக்காலத்தின் 25-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் செல்வத்தைக் கையாள்வதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. செல்வத்தின்மீது மிதமிஞ்சிய பற்றுக்கொண்டு தவறான வழிகளில் பணத்தை வாரிக் குவித்து, வறியோரையும் ஒடுக்கப்பட்டோரையும் அழித்தொழித்த அநியாயக்காரர்களைக் கண்டிக்கிறார் ஆமோஸ். இதுகுறித்து விளக்கும் முதல் வாசகத்தை வாசித்து நமது மறையுரைச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம். வறியோரை நசுக்கி , நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்; 'நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம் 'என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா ? ' ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

இறைவாக்கினர் ஆமோஸ் வழியில், இன்றைய உலகில் நிகழும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அதற்குக் காரணமான பண முதலைகளையும் கண்டித்து எத்தனையோ சமூகப் புரட்சியாளர்கள் அறச்சினம்கொண்டு எழுவதைப் பார்க்கிறோம். அண்மையில் விடுமுறைக்குச் சென்ற இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர் இந்தியாவில் நிகழ்ந்து வரும் வருத்தத்திற்குரிய ஒரு காரியத்தை என்னோடுப் பகிர்ந்துகொண்டார். அதாவது, இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், பூர்விக இனமக்கள் வாழும் மலைப்பகுதிகளில் அவர்கள் வாழும் இடங்கள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் வேறு இடங்களுக்கு விரட்டியடிக்கப்படுவதாகவும், ஒரு சிலருக்கு மட்டுமே மிகக் குறைந்த அளவில் பணம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். மேலும், இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவே மாபியா கும்பல்கள் இப்படிப்பட்ட அநியாயச் செயல்களை அங்கே அரங்கேற்றி வருவதாகவும் வருத்தமடைந்தார். இப்பூர்வீக இனமக்களின் நிலமீட்பு நடவடிக்கைகளில் மக்களை ஒருங்கிணைத்துப் போராடிய அருள்சகோதரி வல்சா ஜான் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மதம் 15-ஆம் தேதி 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, தந்தை ஸ்டேன் ஸ்வாமியும் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் மனிதத்தன்மையற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் இருவரும், பூர்வீக இனமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்துப் போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் இந்திய நாட்டுப் பங்குச்சந்தையில் அதிக முதலீட்டு மதிப்பில் தொடர்ந்து முகேஷ் அம்பானி குழுமத்தைப் பின்னுக்குத் தள்ளி, அதானி குழுமம் 2-வது இடத்திலும், TATA குழுமம் முதலிடத்திலும் இருந்து வருகிறது. பங்குச்சந்தையில் TATA குழுமத்தின் முதலீட்டு மதிப்பு 21.73 இலட்சம் கோடியாகும். 2-வது இடத்தில் இருக்கும் அதானி குழுமத்தின் மதிப்பு ரூ.19.44 இலட்சம் கோடியாகும். 3-வது இடத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ரூ.17.89 இலட்சம் கோடியாக இருக்கிறது. அதானி துறைமுக மற்றும் பொருளாதார மண்டல மதிப்பு 19 விழுக்காடு உயர்ந்து, ரூ.1.77  இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த AFR எனப்படும் ஆசிய வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், `உலகின் ஆறாவதுப் பணக்கார நாடாக இந்தியா திகழ்கிறது' என்று தெரிவித்துள்ளது. மேலும், உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் கொண்ட பட்டியலில் பிரிட்டன், ஜெர்மனி, இந்தியா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன என்று கூறியுள்ளது. உலக அளவில் செல்வந்தர்கள் வைத்துள்ள மொத்தச் சொத்தின் மதிப்பு 215 இலட்சம் கோடி ரூபாய் என்றும், பல கோடி ரூபாய் (Multi millionairies) மதிப்புடைய செல்வத்தைக்கொண்டுள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை உலக அளவில் 5,84,000 பேர் என்றும் இவ்வறிக்கைத் தெரிவிக்கின்றது. இப்படி உலகச் செல்வங்கள் எல்லாம் சில நூறுபேரிடம் குவிந்து கிடக்க, உலகில் பல நூறுகோடிபேர் வறுமை, பஞ்சம், பட்டினி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு கொடுமையாக மரணித்து வருகின்றனர் என்பது மிகவும் வேதனையானது!

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நாம் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது என்று நம்மை எச்சரிக்கின்றார் ஆண்டவர். இதற்கு  முன்மதியோடு செயல்படும் வீட்டுப் பொறுப்பாளர் பற்றிய உவமை ஒன்றைக் கூறிவிட்டு, அதனைத் தொடர்ந்து செல்வத்தின் மட்டில் நாம் எவ்வாறு கவனமாக இருக்கவேண்டும் என்பதையும் நமக்கு அறிவுறுத்துகின்றார். இப்போது அப்பகுதியை தியானச் சிந்தனையுடன் கேட்போம். ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.”

இங்கே, ‘நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகள் நம் கவனத்தில் கொள்ளத் தக்கவையாக அமைகின்றன. கோடி கோடியாய் சேமித்து வைத்த எத்தனையோ பெரும் பணக்காரர்கள் கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்களாலும், இயற்கைப் பேரிடர்களாலும், மாரடைப்பாலும் மரணித்துப் போனார்கள் என்பது நமக்குக் காலம் சொல்லும் பாடம். இவ்வுலகில் யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை, நாம் சேர்த்துவைத்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒருநாள் நாம் போய்விடுவோம் என்பதை மனிதர்கள் உணர்ந்துகொள்ளும்போதுதான், இங்கே எல்லாமே பொதுவுடைமை ஆக்கப்படும். இந்நிலை உணர்ந்த ஒருசிலர் மட்டுமே தாங்கள் வைத்திருக்கும் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம், சென்னையை சேர்ந்த Ideas2 என்ற ஐ.டி. நிறுவனம், தனது ஊழியர்கள் 100 பேருக்குப் புத்தம் புதிய மாருதி சுசுகி கார் ஒன்றைப் பரிசாக வழங்கி அசத்தி இருக்கிறது என்ற செய்தி ஒன்று வெளியானது. அதன் பணியாளர்களின் கடின உழைப்புக்கான பரிசாக இக்காரியத்தை அந்நிறுவனம் செய்திருக்கிறது. மேலும், பரிசாக வழங்கப்பட்டுள்ள கார்களால் இந்நிறுவனத்திற்கு ரூ. 15 கோடி வரை செலவாகி இருக்கிறது. இதுபற்றிக் கூறிய இந்நிறுவனத்தின் தலைவர், முரளி விவேகானந்தன், “100 சிறந்த ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்கிய முதல் இந்திய ஐ.டி. நிறுவனமாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இவர்கள் அனைவரும் நிறுவனத்தை வளர்ச்சி மற்றும் வெற்றிப்பாதையில் பயணிக்கச் செய்ததில் பெரும்பங்காற்றி உள்ளனர். பணியாளர்கள் ஒவ்வொருவரும் இதனைத் தங்களின் சொந்த நிறுவனமாகக் கருதி நீண்ட காலம் இங்கேயே பணியாற்றி உள்ளனர். ஆகவே, எங்கள் சொத்தை எங்களின் பணியாளர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களை நாங்கள் நண்பர்களைப் போன்று நடத்துகிறோம்," என்றார்.

‘அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள’ (குறள் 241) என்ற திருக்குறளில், கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது என்கிறார் வள்ளுவர். எனவே, நாம் குவித்து வைத்திருக்கும் செல்வத்தால் எப்பயனும் ஏற்படப்போவதில்லை, மாறாக, அவற்றைப் பிறரோடுப் பகிர்ந்துகொள்ளும்போதுதான் அவற்றின் உண்மைப் பயன் வெளிப்படும். ஆகவே, செல்வத்தின்மீது நாம் கொள்ளும் மிதமிஞ்சிய பற்று கடவுளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடும். மேலும் செல்வப்பற்று கடவுள்பற்றை அகற்றிவிடும், ஆனால், கடவுள்பற்று செல்வப்பற்றைத் தகர்த்துவிடும். எனவே, கடவுளா... செல்வமா... என்ற நிலை வரும்போது, செல்வத்தைவிடுத்து கடவுளை மட்டுமே தேர்வுசெய்வோம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2022, 13:28