தேடுதல்

இயேசுவைக் குறித்துச் சான்று பகரும் திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்துச் சான்று பகரும் திருமுழுக்கு யோவான்  

பொதுக் காலம் 2-ஆம் ஞாயிறு : புனித வாழ்விற்குச் சான்றுகளாவோம்!

பிறர்மீது எப்போதும் உண்மையான அன்பையும், உயிரான நட்பையும் கொண்டு வாழ்வோம்.
ஞாயிறு சிந்தனை 14012023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.     எசா 49: 3. 5-6      II.   1 கொரி  1: 1-3    III.  யோவா 1: 29-34)

உண்மையான நட்புக்கு முன்னால் சாதி மத ஏற்றத்தாழ்வு ஒரு தடையாக இருக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர்கள் தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மு.அரங்கநாதனும் அவரது ஆருயிர் நண்பர் இராமசாமியும். குன்னூர் தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.-வான 82 வயது நிரம்பிய மு.அரங்கநாதன் 2014-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 10-ஆம் தேதியன்று, உடல்நலக்குறைவால் இறந்துபோனார். அவரது இறுதி ஊர்வலத்தில் தனது உயிர் நண்பனுக்காகத் தீச்சட்டியைப் பிடித்துக்கொண்டு நடந்தார் இராமசாமி. தலித் இனத்தைச் சேர்ந்தவரான அரங்கநாதனின் தோள்களில் எப்போதும் கறுப்பு சால்வைதான் இருக்கும். அந்தளவுக்குத் திராவிடக் கொள்கைகளைத் தீவிரமாகக் கடைபிடித்தவர் அவர். திருமணம் செய்துகொள்ளாமலேயே சமூதாயப் பணியாற்றியவர். அரங்கநாதனின் நண்பரான இராமசாமிக்கு அப்போது வயது 60. இவர் அய்யர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமணமான இவருக்கு நான்கு பிள்ளைகள். குன்னூர் கோவில் சாலையில்தான் இராமசாமியின் வீடு இருக்கிறது. அந்த வீட்டின் ஒரு அறையில்தான் அரங்கநாதன் தன் கடைசிகாலம் வரை வாழ்ந்து வந்தார். இருவரும் தொடக்க காலத்திலிருந்தே ஒரு கடையில் வேலை பார்த்துள்ளனர். அப்போதுதான்  இருவருக்கிடையே நட்பு வளர்ந்திருக்கிறது. இருவரின் முதல் எழுத்தை வைத்தே ‘R.R இரும்பு கடை’ என்ற பெயரில் கடை ஒன்றை வைத்திருந்தனர். இராமசாமியின் பிள்ளைகள் அனைவரும் அரங்கநாதனை தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதி அவரை 'அப்பா' என்று அழைத்ததுடன் மிகுந்த அக்கறையுடன் அவருக்குப் பணிவிடையும் செய்துள்ளனர்.

“நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். எங்கள் நட்புக்கு அன்பைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. கடுமையான உழைப்பு, முடிந்தவரை நேர்மை என்பதுதான் எங்களுடைய இலட்சியம். அந்த இலட்சியத்தைக் காப்பாற்றுவதில் நாங்கள் இருவருமே மிகவும் உறுதியாக இருந்தோம். எங்கள் வீட்டில் நிகழும் எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் அரங்கநாதன் கலந்துகொள்வார். அவர் இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் எங்கள் வீட்டில் நிகழ்ந்ததில்லை. இப்போது அவர் என்னைவிட்டுப் பிரிந்து போனதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனிமேல் என் நண்பர் வரமாட்டார் என்பதை என் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது” என்று இராமசாமி தனது ஆருயிர் நண்பரான அரங்கநாதனைக் குறித்துச் சான்று பகிர்ந்துள்ளார்.

திருவருகைக் காலம், மற்றும் கிறிஸ்து பிறப்புக் காலத்தைக் கடந்து இன்று நாம் பொதுக்காலத்தின் இரண்டாம் வாரத்திற்குள் நுழைகின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் ஒருவருக்கொருவர் நற்சான்று பகரக்கூடிய அளவிற்குத் தூயவாழ்வு வாழ்வதற்கு நமக்கு அழைப்பு விடுகின்றன. இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது மறையுரைச் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். ஆண்டவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்’ என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

முதல் வாசகத்தில், உலகம் முழுவதும் இறைவன் தரும் மீட்பைக் கொண்டு செல்வதற்கு ஒளியாக இறைவாக்கினரான எசாயாவை எடுத்துக்காட்டி, இப்பணியினை அவர் எளிதாகச் செய்யமுடியும் என்று ஆண்டவராம் கடவுள் அவரைக் குறித்துச் சான்றுபகர்கின்றார். அதேவேளையில், சிதறுண்ட மக்களை ஒன்று திரட்ட தாயின் கருப்பையிலிருந்தே தன்னை ஊழியனாகத் தேர்ந்துகொண்டதாகவும், ஆண்டவரின் பார்வையில் தான் மிகவும் மதிப்புப் பெற்றவன் என்றும் பேரன்பு கொண்ட கடவுளைப் பற்றி சான்று பகர்கின்றார் எசாயா. இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் நமதாண்டவர் இயேசுவைப் பற்றி நற்சான்று தருகின்றார். இப்போது அமைந்த மனதுடன் நற்செய்தி வாசகத்திற்குச் செவிமடுப்போம். இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார். தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.

இன்றைய உலகில், பொறுப்பில் இருக்கின்ற தலைவர்கள் தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டே தூங்கவேண்டும். இல்லையேல் அவர் இறந்துவிட்டார் என்று கூறி இன்னொருவர் அவர் பதவியைப் பறித்துக்கொள்வார் என்று நகைச்சுவையாகக் கூறுவதுண்டு. ஆனாலும், பல நேரங்களில் இதுவே உண்மையாகிப் போகின்றது. காரணம், நாற்காலி என்னும் பதவியை அடைவதற்காகவே இன்று எல்லாவிதமான அட்டூழியச்செயல்களும் அரங்கேற்றப்படுகின்றன. பொறுப்பு என்பது மக்களுக்குப் பணியாற்றுவதற்காகத்தான் என்பதை மறந்து, நாம் பெறும் பதவிகள் வழியாகப் பெயரும், புகழும், செல்வாக்கும் பெறவேண்டும் என்பதற்காக நிகழ்த்தப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் மக்களின் வாழ்வை நிர்மூலமாக்கி வருகின்றன. இது துறவு வாழ்விலும் தற்போது அதிகம் காணப்படுகின்றது என்பது மிகவும் வருந்தத்தக்கது.

எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் திருமுழுக்கு  யோவானிடம் அனுப்பி,  “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று கேட்டபோதும், அவர், “நானல்ல” என்றார். மூன்றாவது முறையாக “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறியதுடன், தான் ஆண்டவருடைய வழிகளை செம்மைப்படுத்த வந்தவன் என்பதை மிகவும் தாழ்ச்சியோடு அவர்களிடத்தில் பதிவு செய்கின்றார் (காண்க.யோவா 1:19-23). திருமுழுக்கு யோவான் நினைத்திருந்தால் தானே மெசியா என்று கூறியிருந்திருக்க முடியும். காரணம், அவரைச் சுற்றியும் எண்ணற்ற மக்களும் சீடர்களும் இருந்தனர். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் ஒரு உண்மையான கதாநாயகனின் வெற்றிக்குத் திரைக்குப் பின்னாலிருந்து உழைக்கும் ஒது உண்மைத் தொண்டனாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றார். மேலும், தன்னை ஒரு விதையின் வெளிப்புறத்திலுள்ள ஓடாகவும், மீட்பராகிய இயேசுவை அவ்வோட்டின் உள்ளிருக்கும் உயிர்தரும் விதையாகவும் வெளிப்படுத்துவதாகவும் நாம் ஒப்பிடலாம். விதை ஒன்றை நாம் மண்ணில் நடும்போது என்ன நிகழ்கிறது? அதிலுள்ள விதை விருட்சமாகி வெளியே வரும்போது, தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செய்துமுடித்துவிட்டதாகக் கருதி அந்த ஓடு விதையிலிருந்து விலகிக்கொள்கிறது. அவ்வாறுதான் திருமுழுக்கு யோவானும் செயல்படுகிறார். இவரது மனத்தாழ்மையின் காரணமாகவே, திருமுழுக்கு யோவான் இறைவாக்கினரைவிட மேலானவர் என்றும், மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை (மத் 11:9,11) என்றும் கூறி பெருமிதம் கொள்கின்றார் இயேசு.

உண்மையான அன்பிற்கும் நட்பிற்கும் சான்று பகரும் விதமாகப் பழைய ஏற்பாட்டில் அருமையான நிகழ்வொன்று வருகிறது. அதுதான் தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே நிகழும் புனிதமான நட்பு. கோலியாத்தைக் கொன்றொழித்த தாவீதின்மீது மன்னர் சவுல் தொடக்கத்தில் அளவில்லா அன்பும் மதிப்பும் கொள்கின்றார். இதைக் கண்ட சவுலின் மகனான யோனத்தான் மிகவும் பூரித்துப்போய் தாவீதைத் தனது உயிரெனப் போற்றுகின்றார். அப்பகுதியை இப்போது நம் நினைவுக்குக் கொணர்வோம். பின்பு, யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில், அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார். தாவீது சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொணர்ந்தார்; அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார் (1சாமு 18:3-5). ஆனால், தாவீது கொணர்ந்த எண்ணற்ற வெற்றிகளால் அவர்மீது பொறாமைக் கொள்ளும் மன்னர் சவுல், அவரைக் கொன்றுவிடத் தீர்மானிக்கின்றார். அப்போது தன் தந்தையின் கொடும் செயலை அறிந்த யோனத்தான் அவரிடம் சென்று தாவீதைக் குறித்து நற்சான்று பகர்கின்றார்.

யோனத்தான் தாவீதைப் பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்லவிதமாகப் பேசி, “அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டு பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில், அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும். அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையவாய் இருந்தன. அவன் தன் உயிரைப் ஒரு பொருட்டாய் எண்ணாது அப்பெலிஸ்தியனைக் கொன்றான்; ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலர் எல்லோருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றீர். அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்?” (1சாமு 19:4-5). யோனத்தான் தன்மீது கொண்டிருந்த புனிதமான நட்பின் காரணமாகவே, சவுலும் யோனத்தானும் போரில் கொல்லப்பட்டபோது, தாவீது மிகவும் துயருற்று அழுது புலம்பி நோன்பிருக்கின்றார் (காண்க  (2சாமு 1:1-16).

யோனத்தான் நினைத்திருந்தால் தன் தந்தை சவுலுடன் சேர்ந்துகொண்டு தாவீதைக் கொன்றிருக்கலாம் என்பதோடு, சவுலுக்குப் பிறகு ஆட்சி அரியணையிலும் அமர்ந்திருக்கலாம். காரணம், அதற்கான அத்தனை வாய்ப்புகளும் சூழல்களும் அவருக்குக் கிடைத்திருந்தன. ஆனால், யோனத்தான் தாவீதின் மீது கொண்டிருந்த உயிரான அன்பாலும் நட்பாலும் அந்தத் தீமையான செயலைச் செய்யாததன் வழியாக, இருவருக்குமிடையே நிலவிய புனிதமான நட்பிற்கு இறுதிவரை சான்று பகர்கின்றார். அவரது மரணத்திற்குப் பிறகு அரியணையேறும் தாவீது, இஸ்ரயேல் மக்களின் இதயமாக, மீட்பராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்கின்றார். யோனத்தானின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத தாவீதைப் போலவே, திருமுழுக்கு யோவானின் கொடிய மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தார் நமதாண்டவர் இயேசு.  திருமுழுக்கு யோவானின் மரணத்திற்குப் பிறகு உண்மைக்குச் சான்று பகர்ந்த அவரின் பாதையிலே இயேசுவும் தனது இறையாட்சிப் பணியைத் தொடங்குகின்றார்.  

எனது கிறிஸ்தவ வாழ்வில் பிறருடன் நான் கொண்டிருக்கும் அன்பும் நட்பும் எப்படி இருக்கின்றது? உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலியான உறவைக் கொண்டிருக்கின்றேனா அல்லது தாவீதுக்கும் யோனத்தானுக்கும் மற்றும், திருமுழுக்கு யோவானுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவிய அந்தப் புனிதமான நட்பைக் கொண்டிருக்கின்றேனா என்பதை ஆன்ம ஆய்வு செய்வோம். பொதுவாக, இருவருக்கிடையே உண்மையான அன்பும் நட்பும் இழையோடும்போது அங்கே பொறாமை, சீற்றம், கட்சிமனப்பான்மை, பதவிவெறி, பணவெறி, ஆதிக்கவெறி, பழிவாங்கும் வெறி ஆகிய தீயவை யாவும் மறைந்து, இறையன்பு, பிறரன்பு, எளிமை, மனத்தாழ்மை, விட்டுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல், சுயநலமின்மை, மனித மாண்பு, உயர்ந்த நோக்கிற்காக ஒன்றிணைந்து உழைத்தல் ஆகிய இறையாட்சி விழுமியங்கள் விளைந்து நற்பயன் தரும் என்பதை உணர்வோம். ஆகவே, பிறர்மீது எப்போதும் உண்மையான அன்பையும், உயிரான நட்பையும் கொண்டு வாழ்வோம். அதற்கான இறையருளை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2023, 13:17