தேடுதல்

ஒட்டு இயந்திரங்களைத் தயார் செய்யும் தேர்தல் பணியாளர்கள் ஒட்டு இயந்திரங்களைத் தயார் செய்யும் தேர்தல் பணியாளர்கள்  

மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களியுங்கள் : பேராயர் பீட்டர் மச்சாடோ

கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் மத சிறுபான்மையினருக்கு, நாட்டின் நிலைமை மிகவும் கடினமாக இருப்பதால் இத்தகையதொரு அழைப்பை விடுத்துள்ளார் பேராயர் மச்சாடோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்திய நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களிக்குமாறு கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் கத்தோலிக்கர்களை வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

மதச்சார்பற்ற, வகுப்புவாதமற்ற, அரசியல் சாசனத்தில் நம்பிக்கையுள்ள, ஊழல் குறைந்த ஒரு தலைவரைத் தேர்ந்தெடுங்கள் என்று இம்மாதம் 7-ஆம் தேதியன்று பேராயர் மச்சாடோ அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு அழைப்புவிடுத்ததாகவும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மதச்சார்பற்றவர் என்றால் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களையும் மதிக்கிறவர் என்றும், வகுப்புவாதமற்றவர் என்றால் அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்பவர் என்றும் பேராயர் மச்சாடோ அவர்கள் விளக்கினார் என்றும் உரைக்கின்றது அச்செய்திக் குறிப்பு.

பெங்களூருவில் உள்ள Logos தியான மையத்தில் மறையுரை வழங்கியபோது இவ்வாறு கேட்டுக்கொண்ட பேராயர் மச்சாடோ அவர்கள், ​​வரும் தேர்தல் மிகவும் முக்கியமானதாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் இருப்பதால் அனைத்து கத்தோலிக்கர்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார் என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.

நம் வாக்களிக்கவில்லை என்றால் அது ஒரு பாவம் என்றும், நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் துன்புறுத்தல் பற்றி பின்னர் உட்கார்ந்துகொண்டு புகார் செய்வது பயனற்றது என்றும் பேராயர் மச்சாடோ அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் வாக்களிக்கும் நாளில் மற்ற அனைத்து அலுவல்களையும் இரத்து செய்துவிட்டு வாக்களிக்க நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று பேராயர் மச்சாடோ அவர்கள் அனைத்துக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களையும் வலியுறுத்தியதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

நாட்டின் தேர்தல் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய இரண்டு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் வாழும் 6 கோடியே 80 இலட்ச மக்களில் 1.87 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2024, 14:59