தேடுதல்

வழிபாட்டில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

பாகிஸ்தானில் தெய்வநிந்தனையின் பெயரில் தாக்கப்பட்ட கிறிஸ்தவர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை செய்பவர்களுக்குத் தூக்குத் தண்டனை உண்டு. ஆனால், அரசால் யாரும் இதுவரை தூக்கிலிடப்படவில்லை : யூகான் செய்தி நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மே 26, இஞ்ஞாயிறன்று, பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தின் Sargodha மாவட்டத்தில் தெய்வநிந்தனையின் பெயரில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு 1000 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட கிறிஸ்தவர் நசீர் மசிஹ் அவர்கள் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார் என்று யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

74 வயதான Nazir Masih அவர்கள், ஜூன் 3-ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்று பஞ்சாப் மாநிலத்தின் விசாரணை காவல் அதிகாரி Khizar Hayat கூறியதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு. 

இது தொடர்பாக 29 பேர்  கைதுசெய்யப்பட்டு  விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 35 பேருக்கான அடையாள அணிவகுப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் காவல் அதிகாரி Hayat அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பு கூறுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கத்தோலிக்க ஆயர்கள்  உட்பட கிறிஸ்தவத் தலைவர்கள் பலர், 200 குடும்பங்கள் வசிக்கும் மஷியின் கிறிஸ்தவ காலனிக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தனர் என்றும், அக்காலனியில் வாழும் பாதிபேர் கத்தோலிக்கர்கள் என்றும் குறிப்பிடுகிறது அச்செய்தி.

கிறிஸ்தவக் காலணித் தொழிற்சாலை உரிமையாளரான நசீர் மசிஹ் அவர்கள், முஜாஹித் காலனியில் உள்ள அவரது குடியிருப்பு பகுதியில் திருக்குரானின் பக்கங்களை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரமாகத் தாக்கப்பட்டதுடன் அவரது தொழிற்சாலையும் வீடும் அக்கும்பலால் எரித்து நாசமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

24 கோடியே 10 இலட்சம் மக்கள் வாழும் தெற்காசிய நாடான பாகிஸ்தானில் 1.59 விழுக்காட்டிற்கும் குறைவான கிறிஸ்தவர்களே உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2024, 14:29