போபாலில் நச்சு வாயு கசிந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலை போபாலில் நச்சு வாயு கசிந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலை   (AFP or licensors)

போபால் கழிவுகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவிக்கும் கிறிஸ்தவ ஆர்வலர்கள்!

2006-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட தகவல்படி, 5,58,125 பேர் நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர் என்றும், அவர்களுள் 3,900 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர் என்றும் கூறப்பட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த போபால் பேரழிவின் நச்சுக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான பொதுமக்களின் அச்சத்தை நிவர்த்தி செய்யுமாறு இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர் என்று யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

337 டன் நச்சுக் கழிவுகள் போபாலில் இருந்து பிதாம்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து இந்த எதிர்ப்பு வலுத்தது என்றும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு நபர்கள் தீக்குளிக்க முயன்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

கழிவுகளை எரிக்கும் செயல்முறை கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றும் என்று அரசு உறுதியளித்த போதிலும், புற்றுநோய் மற்றும் பிறப்பு குறைபாடுகளுடன் தொடர்புடைய நிலத்தடி நீரின் கடந்தகால மாசுபாட்டை மேற்கோள் காட்டி உள்ளூர் மக்கள் உடல்நலத்திற்கு எதிரான ஆபத்துக்கள் குறித்துப் பெரிதும் கவலை கொண்டுள்ளனர் என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

ஆர்வலர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் வெளிப்படையான தொடர்பு மற்றும் பாதுகாப்பான அகற்றல் முறைகளைக் கோருகின்றனர் என்று எடுத்துக்காட்டியுள்ள அச்செய்திக் குறிப்பு, பதட்டத்தை அதிகரிப்பதற்கு ஊடகங்களின் தவறான தகவல்களே காரணம் என்று மாநில அரசு குற்றம் சாட்டியது என்றும், இச்செயல்முறையைத் தொடர்வதற்கு முன் பொதுமக்களின் கவலைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

1984-ஆம் ஆண்டு, டிசம்பர் 3-ஆம் தேதி இந்தியாவின் போபாலில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் உடனடியாக 2259 பேர் இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் அந்நச்சு வாயுவின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போபால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜனவரி 2025, 12:02