தேடுதல்

கடவுளின் பராமரிப்பு கடவுளின் பராமரிப்பு  

விவிலியத் தேடல்:திருப்பாடல் 66-2, கடவுளின் கொடைகளை மறவாதிருப்போம்!

கடவுள் அருளிய கொடைகளை மறந்து அவருக்கு எதிராக செயல்படும் எந்தவொரு மனிதரும் எல்லா வழிகளிலும் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
விவிலியத் தேடல்:திருப்பாடல் 66-2, கடவுளின் கொடைகளை மறவாதிருப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நற்செயல்களே தீமையை வெல்லும்!’ என்ற தலைப்பில் 64-வது திருப்பாடலில் 1 முதல் 7 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து மகிழ்ந்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 8 முதல் 12 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அந்த வார்த்தைகளை பக்திமிகு மனதுடன் வாசிக்கக் கேட்போம். "மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை. கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்; கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர். மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்; நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர்" (வச. 8-12).  

கடந்த வார நமது விவிலியத் தேடலில், கடவுள் அஞ்சுதற்குரியவர் என்றும் அவர் வெளிப்படுத்தும் செயல்கள் அஞ்சுதற்குரியவை என்றும் தாவீது அரசர் எடுத்துகாட்டியதைக் குறித்துத் தியானித்தோம். அதனைத் தொடர்ந்து கூறும் தாவீதின் இந்த வார்த்தைகளில்  “நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை” என்றும், இந்தக் காரணத்திற்காக "மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்" என்றும் கூறுவதைப் பார்க்கின்றோம். குறிப்பாக, “நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை” என்ற வார்த்தைகளில் பல்வேறு வேதனைகள், சோதனைகள், இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை எல்லாம் தனது மூதாதையரான இஸ்ரயேல் மக்கள் சந்தித்த வேளைகளில், கடவுளின் பேரன்பும், கனிவுமிகு பரிவிரக்கமும் அவர்களைக் காப்பாற்றி வழிநடத்தியது என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் இவ்வாறு உரைக்கின்றார் தாவீது. இதனைத் தொடர்ந்து வரும் அவரின் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களின் கண்ணீர் நிறைந்த வரலாற்றை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. "கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்; கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர். மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்; நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர்" என்கிறார். பொதுவாக, ஒவ்வொரு யூதரும் தோரா என்று சொல்லக்கூடிய திருநூலின் முதல் ஐந்து நூல்களை நன்றாகக் கற்றறிந்திருக்க வேண்டும். அதனால்தான் தாவீது இந்த வார்த்தைகளையெல்லாம் சிறப்பாகக் கையாள்கின்றார் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம்.

இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை நாம் உற்றுநோக்கும்போது, அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் மாறி மாறிப் பயணிப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. குறிப்பாக, அவர்கள் எப்பொதெல்லாம் கடவுளின் இறைவாக்கினர்கள் வழியாக வந்த அவரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு நல்வழியில் வாழ்ந்தார்களோ அப்போதெல்லாம் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் நலமாகவே இருந்தது. ஆனால் அதேவேளையில், அவர்கள் கடவுளின் புனிதமிகு சொற்களுக்கு செவிமடுக்க மறுத்து பாவ வழியில் வாழ்ந்தபோதெல்லாம் அவரால் கைவிடப்பட்டு அழிவைச் சந்தித்தார்கள். இஸ்ரயேல் மக்களின் துயர வாழ்வை இரண்டு பகுதிகளாகப் பார்க்கின்றோம். முதல் பகுதி, இஸ்ரயேல் மக்கள் அரசர்கள் இன்றி, யோசுவா மற்றும் நீதித்தலைவர்களின் துணையுடன் வாழ்ந்தபோது அவர்கள் சந்தித்த துயரங்கள் மற்றும் கைவிடப்படல்களை எடுத்துக்காட்டுகின்றது. இரண்டாம் பகுதி, இஸ்ரயேல் மக்கள் சாலமோனுக்குப் பின்னர் அவரது வழித்தோன்றல்களால் ஆளப்பட்டபோது அவர்களின் வேதனைகள் நிறைந்த வாழ்வைப் பிரதிபலிகிறது. இதில் முக்கியமான ஒன்றை இங்கே நாம் கவனிக்க வேண்டும். அதாவது, முதல் பகுதியில் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்கள் யாவும் அவர்களைப் பிற இனத்து மக்களிடம் நாடு கடத்தும் அளவிற்குக் கொண்டு சென்றுவிடவில்லை. ஆனால் இரண்டாம் பகுதியில், சாலமோன் அரசருக்குப் பிறகு எரொபவாம் ரெகபெயாம் தலைமையில் இஸ்ரயேல் நாடு வடக்கு தெற்கு என இரண்டாகப் பிளவுண்டு போனநிலையில், அம்மக்களின் பாவங்களும், அவர்தம் ஆட்சியாளர்களின் பாவங்களும், மக்களை வேற்றின நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டுபோக வழிவகுத்தது.

எரொபவாம் அரசனின் வீழ்ச்சி

இதன் பின்னணியில், இப்போது எரொபவாம் அரசன் வீழ்ந்த வரலாற்றைப் பார்ப்போம். ‘சாலமோனின் சாதாரண பணியாளராக இருந்த தன்னை, கடவுள் அரசனாக்கி அழகுபார்த்தார் என்பதை அறிந்திருந்தும் கூட எரொபவாம் தனது பதவி மோகத்தால், இஸ்ரயேலின் வடக்கு குடிமக்கள் எருசலேம் அரசனின் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காகக் கற்பனையான ஒரு வழிபாட்டையும் அதற்கான மதத்தையும் சடங்குகளையும் உருவாக்கி மக்களை மதிமயங்கச் செய்தான். இதனால் கோபம் கொண்ட கடவுள், எரொபவாம் முதலில் உருவாக்கிய பெத்தேல் ஆராதனைப் பலி பீடத்துக்குத் தன் இறையடியார் ஒருவரை அனுப்பினார். அங்கு அரசர் எரொபவாம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இறையடியார் ஒருவர் “இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்; அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும்” என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதேநாளில் தந்தார். மேலும் “உன்னை அரசனாக்கிய கடவுளே இந்தச் செய்தியை என் வழியே சொல்லி அனுப்பினார் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றும் சொன்னார். உடனே கோபம் கொண்ட அரசன் எரொபவாம் பலி பீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்!” என்றான். நீட்டிய கை விறைத்து நின்று விட்டது; அதை அவனால் மடக்க முடியவில்லை. அப்போது அந்தப் பலிபீடம் வெடித்து அதிலிருந்த சாம்பல் சிதறியது. தன் ஊழியர் மூலம் கடவுள் அனுப்பிய எச்சரிக்கை அங்கே அப்படியே நிறைவேறியது.

அப்போது அரசன் இறையடியாரை நோக்கி, “எனக்காக நீர் உம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இறைஞ்சி மன்றாடும்; என் கை முன்போல் ஆகிவிடும்” என்றான். அவ்வாறே இறையடியார் ஆண்டவரை நோக்கி மன்றாட, அரசனது கை முன் போல் ஆயிற்று. இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.  

ஆகவே அரசர் எரொபவாமின் இந்த ஆணவம் காரணமாக அவரின் வம்சத்தை அழித்துவிடக் கடவுள் முடிவு செய்தார். இதனால் எரொபவாமின் மகன் அபியா, எந்த நோய் என்று கண்டறியமுடியாதபடி படுக்கையில் வீழ்ந்தான். அப்போது எரொபவாம் தன்னுடைய மனைவியிடம், “நீ எரொபவாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடி மாறுவேடம் பூண்டு சீலோவுக்குப் போ. நான் இம்மக்களுக்கு அரசனாவேன் என்று சொன்ன இறைவாக்கினர் அகியா அங்கேதான் குடியிருக்கிறார். பத்து அப்பங்களையும் தின்பண்டங்களையும் ஒரு கலயம் தேனையும் எடுத்துக் கொண்டு அவரிடம் போ. பிள்ளைகளுக்கு என்ன நேரும் என்று அவர் உனக்கு அறிவிப்பார்” என்று சொல்லி அனுப்பினார். எரொபவாமின் மனைவியும் அவ்வாறே செய்தாள். அவள் சீலோவுக்குப் புறப்பட்டுப் போய் அகியாவின் வீட்டை அடைந்தாள். அகியா முதியவராய் இருந்ததால், கண்கள் மங்கிப் பார்க்க முடியாதவராய் இருந்தார். ஆண்டவர் அகியாவிடம், “இதோ! எரொபவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப் பற்றி உன்னிடம் கேட்க வருகிறாள். நான் கூறும் வண்ணம் நீ அவளிடம் பேச வேண்டும். அவள் மாறுவேடத்தில் வருகிறாள்” என்றார். அவ்வாறே, அவள் வாயிலில் நுழைந்தவுடன், அவளது காலடி ஓசை கேட்ட அகியா கூறியது: “எரொபாவாமின் மனைவியே! உள்ளே வா! மாறுவேடத்தில் நீ வருவது ஏன்? துயரமான செய்தியையே உனக்குச் சொல்ல வேண்டும் என்பது எனக்கு வந்த கட்டளை. நீ எரொபவாமிடம் போய், ‘இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: மக்களிடையே நான் உன்னை உயர்த்தினேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கினேன். தாவீதின் வீட்டினின்று அரசைப் பிடுங்கி, அதை உன் கையில் ஒப்படைத்தேன். ஆயினும், என் ஊழியன் தாவீதைப் போல் நீ நடந்து கொள்ளவில்லை. அவன் என் விதிமுறைகளைக் கைக்கொண்டு, நான் காட்டிய வழியில் தன் முழு இதயத்தோடு நடந்து, என் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே செய்தான். நீயோ அவ்வாறு செய்யவில்லை. அது மட்டுமின்றி, உனக்கு முன் ஆட்சியில் இருந்த எல்லாரையும் விட நீ மிகுதியான தீமைகளைச் செய்துள்ளாய். நீ போய் வேற்றுத் தெய்வங்களை, வார்ப்புச் சிலைகளை உனக்கென உருவாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிக் தள்ளினாய்; எனக்குச் சின மூட்டினாய்; ஆகையால், எரொபவாம் வீட்டுக்கு அழிவு வரும். இஸ்ரயேலில் அடிமையாகவோ, குடிமகனாகவோ உள்ள எரொபவாமின் ஆண் மக்கள் அனைவரையும் அழித்து விடுவேன். குப்பையை எரித்து ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல், எரொபவாமின் வீட்டை அறவே அழித்தொழிப்பேன். எரொபவாமைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர்கள் நாய்களுக்கு இரையாவர்; வயல் வெளியில் மடிபவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர், இது ஆண்டவர் தரும் வாக்கு. நீ புறபப்பட்டு உன் வீட்டிற்குப் போ. நீ நகரினுள் கால் வைத்தவுடன் உன் பிள்ளை இறந்து போவான்” என்று உரைக்கின்றார். அவள் வீடு திரும்பியபோது அவர் கூறியவாறே எல்லாம் நிகழ்ந்தது. இறுதியில் எரொபவாம் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் நாதாபு அரசன் ஆனான் (காண்க. 1 அர 13:1-6; 33-34; 14:1-20). ஆக, கடவுள் அருளிய கொடைகளை மறந்து அவருக்கு எதிராக செயல்படும் எந்தவொரு மனிதரும் இப்படித்தான் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாழ்ந்திடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 பிப்ரவரி 2025, 12:32