தேடுதல்

அருள்சகோதரி Rosemary Nyirumbe அருள்சகோதரி Rosemary Nyirumbe  

நம்மால் முடிந்ததைச் செய்ய அழைக்கும் கடவுள்

1954 ஆம் ஆண்டு தென்சூடானில் நிறுவப்பட்ட இயேசுவின் திருஇருதய சபையானது 10 ஆண்டுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் இல்லமாக மாறியது

மெரினா ராஜ் - வத்திக்கான்

நம்மால் செய்ய முடிந்ததைச் செய்ய, கடவுள் நம்மை அழைக்கிறார் என்றும், அப்பணியினை எப்படிச் செய்ய வைக்க வேண்டும் என்று நன்கறிந்தவர் கடவுள் என்றும் கூறினார் உகாண்டாவில் மறைப்பணி ஆற்றிவரும் அருள்சகோதரி Rosemary Nyirumbe

உகாண்டாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்படும் அருள்சகோதரி Rosemary Nyirumbe அவர்கள்,  டைம் பத்திரிக்கையினால் உலகின் தலை சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்னும் பெருமைக்குரியவர். மேலும் கடவுள் மேல் வைத்திருக்கும் உறுதி, பற்று, ஆற்றல், செபம், உடன் சகோதரிகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட உகாண்டா பெண்களுக்கு உதவி வருபவர்.

14 வயதில் கடவுள் பணிக்காக தன்னை அர்ப்பணித்ததாக எடுத்துரைத்த அருள்சகோதரி ரோஸ்மேரி அவர்கள், தொடக்கத்தில் சிறுகுழந்தைகளைப் பராமரிக்கும் பணி தனக்குக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அதனை மகிழ்வுடன் ஆற்றியதாகவும் வத்திக்கான் செய்திகளுக்கு எடுத்துரைத்தார்.

வடக்கு உகாண்டாவின் குலு நகரில் போரினால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் பெண்கள் தங்களது வாழ்வை சீர்படுத்த தையல் இயந்திரங்கள் வழங்கி உதவி வருகின்றனர்  இயேசுவின் திருஇருதய சபை அருள்சகோதரிகள்.   

1954 ஆம் ஆண்டு தென்சூடானில் நிறுவப்பட்ட இயேசுவின் திருஇருதய சபையானது 10 ஆண்டுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் இல்லமாக மாறியது என்றும், நாட்டில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக, தாங்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று பராமரித்ததால் புலம்பெயர்ந்தோர்க்கான இல்லமாக மாறியது என்றும் கூறினார் அருள்சகோதரி ரோஸ்மேரி.

பாலியல் முறைகேடுகளால்  பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், கொலைசெய்யப் பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் ஆகியோரைப் பராமரிக்கும் பணியினை முழுமனதுடன் நிறைவாக ஆற்றிவரும் அருள்சகோதரி ரோஸ்மேரி அவர்கள்,  உளவியல் ரீதியாக மட்டுமல்லாமல் மருத்துவ உதவி தேவைப்படும் பெண்களைப் பாதுகாத்து உதவும் பணியினைத் துணிந்து ஆற்றுவதாகவும் தெரிவித்தார்.

பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிவரும் அருள்சகோதரி ரோஸ்மேரி அவர்கள், கிளர்ச்சியாளர்கள் தன்னை நன்கு அறிவார்கள், அவர்கள் என்றாவது ஒருநாள் என்னைக் காண நேரிடும்போது, என்னில் கடவுளைக் காணவேண்டும், அவர்களில் நான் கடவுளைக் காண வேண்டும் என்று தொடர்ந்து செபித்ததாக எடுத்துரைத்தார்.

ஒருநாள் அவர்களது இல்லத்தின் வாயிலில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர் ஒருவர் இருந்ததாகவும், அவரை நேருக்கு  சந்தித்ததாகவும், வந்தவர் உணவும் மருந்தும் கேட்டவருக்கு அதனை அளித்ததாகவும் கூறினார். வந்தவர் மீண்டும் திரும்புகையில் “நீ என் மேல் மிக அதிக அன்பினை வைத்திருக்கிறாய், உனக்கு தீங்கு செய்ய என் மனம் வரவில்லை” என்று கூறி அவர்களது இல்லத்தில் அவர்களுக்குத் தெரியாமல் வைத்திருந்த வெடிபொருள்களை எடுத்துச்சென்று விட்டதாகவும் பகிர்ந்து கொண்டார்.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 பிப்ரவரி 2025, 12:12