தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை - புனித யோசேப்பு எனும் தொழிலாளி

தொழில் என்பது, நம் வாழ்வுக்கு ஓர் அர்த்தத்தையும், மதிப்பையும் கொடுத்து, வாழ்வை வடிவமைக்கவும், மற்றவர்களுக்கு நம்மை தாராளமானதுடன் வழங்க நமக்கு கற்பிக்கவும் செய்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நாளுக்கு நாள் ஐரோப்பாவில் அதிகரித்துவரும் குளிராலும், கொரோனா பெருந்தொற்றாலும், இத்தாலியும், தலைநகர் உரோமும் கூட பாதிக்கப்பட்டிருக்க, ஜனவரி 12ம் தேதி புதன்கிழமை, வத்திக்கான் புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் கூடிய திருப்பயணிகளுக்கு, புனித யோசேப்பு குறித்த தன் மறைக்கல்வித் தொடரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் மத்தேயு நற்செய்தி 13ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

'தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? 55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? .......இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்' (மத் 13:54-55a, 57a).

இப்பகுதி அரபு மொழி உட்பட 8 மொழிகளில் வாசிக்கப்பட, 'தச்சுத் தொழிலாளி புனித யோசேப்பு' என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர்களே, சகோதரிகளே, புனித யோசேப்பு குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று, ஒரு தொழிலாளியாக புனித யோசேப்பு மேற்கொண்ட வாழ்வு குறித்து காண்போம். சாதாரண ஒரு தச்சுத் தொழிலாளியாக, அதேவேளை, உடல் உழைப்பை அதிகம் எதிர்பார்க்கும் ஒரு தொழிலில் ஈடுபாடு கொண்டவராக புனித யோசேப்பு இருந்ததை நற்செய்திகளில் காண்கிறோம். தொழிலின் மாண்பு குறித்து இயேசுவும், புனித யோசேப்பிடமிருந்து நிறையக் கற்றிருப்பார். மனிதகுல வளர்ச்சிக்கும், நாம் புனிதத்துவத்தில் வளர்வதற்கும், தொழில் புரிதல் என்பது இன்றியமையாதது. தொழில் என்பது, பொருள் ஈட்டுவதற்கோ, இலாப நோக்கத்திற்கோ அல்ல, மாறாக, நம் வாழ்வுக்கு ஓர் அர்த்தத்தையும், மதிப்பையும் கொடுத்து, வாழ்வை வடிவமைக்கவும், மற்றவர்களுக்கு நம்மை தாராளமானதுடன் வழங்க நமக்கு கற்பிக்கவும் செய்கிறது.

தங்கள் வாழ்விலும், குடும்பங்களை வளர்த்தெடுப்பதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் தொழிலாளர்களையும், அநீதிகளையும், சுரண்டல்களையும், வேலைவாய்ப்பின்மை என்ற அச்சுறுத்தலையும் எதிர்நோக்கும் தொழிலாளர்களையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்ப்போம். அனைத்து மக்களின் வளம் நிறைந்த வாழ்வையும் மாண்பையும் ஊக்குவிக்கும் ஒரு பொருளாதார ஒழுங்குமுறை உருவாக்கப்படவும், தொழிலாளரின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கவும், அனைத்துத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவும், தொழிலாளராம் புனித யோசேப்பின் பரிந்துரையை வேண்டி செபிப்போம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கியபின், 1969ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி, தொழிலாளர் தினத்தன்று, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், புனித யோசேப்பை நோக்கி செபித்த செபத்தை, மீண்டும் ஒருமுறை, அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளோடு இணைந்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2022, 15:30

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >