தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

உரோமிலுள்ள இஸ்பானிய செய்தியாளருக்கு திருத்தந்தையின் கடிதம்

எத்தகைய சூழலிலும் செய்தியாளர்கள் தங்கள் கடமையை ஆற்றவேண்டும் : ஊக்கமளிக்கும் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தான் அர்ஜென்டினா நாட்டின் பேராயராக இருந்தபோது, தெருக்களில் நடக்கக் கிடைத்த சுதந்திரம், தற்போது தனக்கு இல்லை என்பது கவலை தருவதாக உள்ளது என கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி மாதம் 11ம் தேதி மாலையில் இசைத்தகடுகள் விற்பனை செய்யும் ஒரு கடைக்கு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியாகச் சென்ற திருத்தந்தையை செய்தியாளர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டதைத் தொடர்ந்து, அச்செய்தியாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தன் பயணம் இவ்வளவு இரகசியமாக இருந்தும், தன்னை செய்தியாளர் பின்தொடர்ந்தது ஆச்சரியமாக உள்ளது என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

உரோமிலிருந்து பணியாற்றும் இஸ்பானிய செய்தியாளர் Javier Martínez Brocal ன் புகைப்படம் குறித்து அவருக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, தான் கடையிலிருந்து வெளியேறும்போது தனக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்ட படத்தைத் தானும் கண்டதாகவும், எத்தகைய சூழலிலும் செய்தியாளர்கள் தங்கள் கடமையை ஆற்றவேண்டும் என ஊக்கம் அளிப்பதாகவும் அதில் கூறியுள்ளார்.

ஏற்கனவே 2015ம் ஆண்டில் மூக்குக் கண்ணாடி கடை ஒன்றிற்கும், 2016ம் ஆண்டு, எலும்பியல் தொடர்புடைய உபகரணங்களை விற்கும் கடை ஒன்றிற்கு செருப்பு வாங்கச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதால் சுதந்திரமாகத் தெருவில் நடந்து செல்வதில் கிட்டும் மகிழ்வை இழந்துள்ளதாக ஏற்கனவே சில நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2022, 16:10