தேடுதல்

தங்கள் குழந்தையுடன் ஒரு சிரியா நாட்டு தம்பதி தங்கள் குழந்தையுடன் ஒரு சிரியா நாட்டு தம்பதி 

சிரமங்களை சந்தித்து வரும் பெற்றோர் பாராட்டத்தக்க எடுத்துக்காட்டு

திருஅவையை ஒரு தாயாக நோக்கிவரும் நாம், அதன் தந்தைக்குரிய பண்பை கண்டுகொண்டு, குழந்தைகள் தங்கள் பொறுப்புகளை எதிர்கொள்ளவும், சுதந்திரமுடனும் அன்பாலும் செயல்படவும் உதவவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகம் எதிர்நோக்கி வரும் பெருந்தொற்று பரவல் காலத்தில், தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் பெற்றோருக்குத் தன் பாராட்டுகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் செய்தித்துறைக்கு நேர்முகம் ஒன்றை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய காலக் கட்டத்தில், புனித யோசேப்பு, தந்தையர்களுக்கு வழங்கிவரும் எடுத்துக்காட்டுக் குறித்தும், குழந்தைகளுக்காகத் துயர்களை அனுபவிக்கும் பெற்றோர், பாராட்டத்தக்க எடுத்துக்காட்டுகள் எனவும், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

புனித யோசேப்புக்கென ஓர் ஆண்டை அர்ப்பணித்து, கடந்த மாதம் அதை நிறைவுச் செய்த தனக்கு, துவக்காலத்திலிருந்தே அவர்மீது தனிப்பட்ட பாசம் இருந்தது என்பதையும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

 புதிய ஏற்பாட்டில் மீட்பு வரலாற்றின் துவக்கத்தில் ஒரு முக்கிய நபராகக் காட்டப்படும் புனித யோசேப்பு, எத்தனையோ தடைகள், பிரச்சனைகள், சித்ரவதைகளை எதிர்நோக்கும் நிலை வந்தபோதிலும், தன் மகனைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும், முக்கியக் கவனம் செலுத்தினார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனவுகளின் வழி இறைவனின் குரலை இதயத்தில் கேட்க இயன்றதற்கு அவரின் செப வாழ்வே காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நமக்குப் புனித யோசேப்பு, இருண்ட காலங்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு உதாரணமாக உள்ளார் என்பதையும், நாளைய தந்தையர்களாக மாறவுள்ள இன்றைய குழந்தைகள், தங்கள் தந்தையர் குறித்தும், தாங்கள் எத்தகைய தந்தையர்களாக மாறவிரும்புகிறோம் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார் திருத்தந்தை.

ஒரு தந்தை என்பதில் அன்பு மட்டுமல்ல சுதந்திரமும் அடங்கியுள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை, திருஅவையை ஒரு தாயாக நோக்கி வரும் நாம், அதன் தந்தைக்குரிய பண்பையும் கண்டுகொண்டு, குழந்தைகள் தங்கள் பொறுப்புகளை எதிர்கொள்ளவும், சுதந்திரமுடனும் அன்பாலும் செயல்படவும் உதவவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார் .

இன்றைய பெருந்தொற்றாலும், உள்நாட்டுச் சண்டைகளாலும், துன்பங்களையும் அநீதிகளையும் சந்தித்துவரும் குடும்பங்கள், புனித யோசேப்பை நோக்கி தங்கள் பார்வைகளைத் திருப்பட்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்குடும்பங்களோடு தன் அருகாமையைத் தொடர்வதாகவும் அவர்களுக்காகத் தொடர்ந்தது குரல் கொடுக்கவுள்ளதாகவும் இந்நேர்முகத்தில் உறுதி வழங்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2022, 15:02