தேடுதல்

கமிலியன் துறவு சபையினர் கமிலியன் துறவு சபையினர்   (ANSA)

துன்புறுவோர், நோயாளிகளை இயேசுவின் கண்களோடு நோக்குங்கள்

நம் பாதையில் காயமுற்றவர்களுக்கு அருகிருந்து செயலாற்றுவதில், நல்ல சமாரியர்களாக இருப்பதற்கு, புனித கமிலஸ் தெ லெல்லிஸ் அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

துன்புறுவோர், நோயாளிகள் மற்றும், இறப்புகள் ஆகியவற்றின் எதார்த்தநிலைகளை, இயேசுவின் கண்களோடு நோக்குமாறு, புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் துறவு சபையின் 59வது பொதுப்பேரவையில் பங்குபெறும் அறுபது பிரதிநிதிகளிடம் மே 16, இத்திங்கள் காலையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயுற்றோருக்குப் பணியாற்றும், புனித கமிலஸ் தெ லெல்லிஸ் அவர்கள் ஆரம்பித்த துறவு சபைக்கு புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருள்பணி Pedro Tramontin அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி தெரிவித்ததோடு, தன் நல்வாழ்த்தையும் திருத்தந்தை தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள், கிறிஸ்துவைச் சந்திப்பதற்கும், அவரது அருகாமை மற்றும், கனிவை உணர்வதற்கும், நல்லதொரு கள மருத்துமனையாகப் பணியாற்ற விரும்பும் ஒரு திருஅவை, புனித கமிலஸ்ஸின் இரக்கம் என்ற தனிவரத்தைச் செயல்படுத்தாமல் அப்பணியை ஆற்ற முடியாது என்று திருத்தந்தை கூறினார்.

கமிலியன் என அழைக்கப்படும் இத்துறவு சபைக்கு இன்று தெரிவிக்கப்படும் இறைவாக்கு என்ன, இதற்கு கிறிஸ்தவமுறைப்படி நம் கூறும் பதில் என்ன, கிறிஸ்தவ வாழ்வின் இரு கூறுகள் என்ன போன்ற தலைப்புக்களில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இக்காலத்தில் நோயாளிகளுக்குப் பணியாற்றுவதில் தங்களின் தனிவரத்துக்குப் பிரமாணிக்கமாய் இருக்கும்வண்ணம், இச்சபையினர் நற்செய்தி அறிவிப்புப் பணியில் புதிய வழிகளை ஆராய்ந்து வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார்.     

தனிமை மற்றும் ஒதுக்கப்படுதலைக் கொணர்கின்ற தனிமனிதக்கோட்பாடு மற்றும், புறக்கணிப்பு ஆகியவை, இந்த நம் காலத்தில் நிலவுகிறது, இச்சூழலில் நல்ல சமாரியர்களாக, நற்செய்திக்கு எவ்வாறு சான்றுபகர வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.   

நம் பாதையில் காயமுற்றவர்களுக்கு அருகிருந்து செயலாற்றுவதில், நல்ல சமாரியர்களாக இருப்பதற்கு, புனித கமிலஸ் தெ லெல்லிஸ் அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு என்றுரைத்த திருத்தந்தை, மிகவும் வலுவிழந்த நம் சகோதரர், சகோதரிகளின் காயங்கள், சுமைகள் மற்றும், கவலைகளை நம் சுமையாக ஏற்பதற்கு கமிலியின் இறைவாக்கு வலியுறுத்துகிறது என்று எடுத்துரைத்தார்.

வெளிப்படையான செயல்கள் வழியாக மற்றவருக்குச் சான்றுபகர்தல், சிறியோரிடம் நற்செய்தி விழுமியத்தைப் பயன்படுத்துபோது தன்னையே புரிந்துகொள்தல் ஆகிய இரு அம்சங்களை கமிலியின் துறவு சபையினருக்கு எடுத்துரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் கடவுளின் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2022, 17:15