தேடுதல்

லாட்சியோ மாநிலத்தின் 13 பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் லாட்சியோ மாநிலத்தின் 13 பல்கலைக்கழகங்களின் தலைவர்கள்  (Vatican Media)

பல்கலைக்கழகங்கள், வளர்ச்சித் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு..

போர் மற்றும், அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தொடர்ந்து வரவேற்குமாறு, இத்தாலியின் லாட்சியோ பல்கலைக்கழகங்களின் தலைவர்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

மனிதரை மையமாகக் கொண்டிருக்கும் பொருளாதார, கலாச்சார, மற்றும், சமுதாயத் திட்டங்கள் குறித்து மீண்டும் சிந்தித்துப் பார்ப்பதற்கு அர்ப்பணிக்குமாறு, இத்தாலியின் லாட்சியோ மாநிலத்தின் 13, அரசு மற்றும், அரசு-சாரா பல்கலைக்கழகங்களின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். 

போர் மற்றும், அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தொடர்ந்து வரவேற்குமாறும், மே 16, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த இத்தலைவர்களிடம் திருத்தந்தை கூறியுள்ளார்.

இக்காலக்கட்டத்தில் இக்கல்வி நிறுவனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தலைவர்களிடம் மிகப்பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பெருந்தொற்று பாதிப்பு இடம்பெற்றுள்ள ஆண்டுகள், ஐரோப்பாவில் போர், உலகளாவிய சுற்றுச்சூழல் விவகாரம், வளர்ந்துவரும் சமத்துவமின்மைகள், ஆகிய இவையனைத்தும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சவாலை நமக்கு முன்வைத்துள்ளன என்றுரைத்த திருத்தந்தை, நாம் நெருக்கடியில் இருக்கிறோம் என்ற உண்மையை நமக்கு நாமே சொல்லிக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

ஆயினும், நெருக்கடியில் இருப்பது ஒருவகையில் நல்லது, ஏனெனில் அது நம்மை வளரச்செய்கிறது என்றும், அந்த நெருக்கடி போராக மாறும்போது ஆபத்தானது என்றும் உரைத்த திருத்தந்தை, நாம் இப்போது இருப்பதுபோலவே, நெருக்கடியில் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும், நம் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களும், பிரச்சனைக்கு மத்தியில் வாழவும், அவற்றை எதிர்கொள்ளும் முறையையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

கல்வியில் முதலீடு

இளையோர் நம் பொறுப்புகளுக்கு அழைப்புவிடுக்கின்றனர், அதனாலே இப்பொழுதே நாம் கல்வியில் பெருமளவில் முதலீடு போடவேண்டும், அதனாலேயே உலகளாவிய கல்வி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார். பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும், ஆசிரியர்களைத் தொடர்ந்து வரவேற்கும் இடங்களாக மாறவேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2022, 17:17