தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜான் கராங்" என்றழைக்கப்படும் இடம், சூடான் மக்கள் விடுதலை இராணுவத்தை வழி நடத்தியவரான ஜான் கராங் டி மாபியோரின் கல்லறை உள்ள இடமாகும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தென்சூடான் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை  சுதந்திர மண்டபத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஜான் கராங்க் என்னும் இடத்திற்கு காரில் பயணமானார்.

ஜான் கராங்" என்றழைக்கப்படும் இடம், சூடான் மக்கள் விடுதலை இராணுவத்தை வழிநடத்தியவரான ஜான் கராங் டி மாபியோரின் கல்லறை உள்ள இடமாகும். 1983ஆம் ஆண்டு  முதல் 2005ஆம் ஆண்டு வரை சூடானின் மக்கள் விடுதலை இயக்கத்தை வழிநடத்தி, CPA என்னும் விரிவான அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடக் காரணமானவர். இவ்வொப்பந்தமே 2011ஆம் ஆண்டு தென்சூடானின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. சூடானின் முதல் துணைத்தலைவராகவும் தென்சூடான் அரசுத்தலைவராகவும் பதவியேற்ற உடனேயே 2011ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதியன்று, வானூர்தி (helicopter) விபத்தில் இறந்ததால் அவ்விடம் அவரின் பெயரால் ஜான் கராங் என்றழைக்கப்படுகின்றது. தென்சூடானின் தற்போதைய அரசுத்தலைவர் Salva Kiir Mayardit, நாட்டின் சுதந்திரத்தை ஜான் கராங்கின் கல்லறையில் இருந்து அறிவித்தார். கல்லறையைச் சுற்றியுள்ள பரந்த நிலமானது வேலி அமைக்கப்பட்டு, தொடர்ந்து காவல்படையினரால் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களின் பார்வைக்காக எப்போதும் திறந்திருக்கும் இக்கல்லறையின் முன்புறம் ஜான் கராங்க் அவர்களின் பெரிய உருவச்சிலை உள்ளது. சுதந்திர மண்டபம் உட்பட பரந்த மைதானத்திற்கு அருகில் பொது நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வகையான இசை நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு இவ்விடம் பயன்படுத்தப்படுகின்றது.

John Garang உருவச்சிலை
John Garang உருவச்சிலை

பிப்ரவரி 4ஆம் தேதி உள்ளூர் நேரம் மாலை 6.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு ஜான் கராங்க் கல்லறைத் தோட்டப்பகுதியில் நடைபெற்ற  கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் திருத்தந்தை பங்கேற்றார். வழிபாட்டுப்பாடல்கள், வாசகங்கள் மற்றும்  நற்செய்தி வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து Canterbury ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby, ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் Dr Greenshields, ஆகியோர் வரவேற்பையும் அறிமுக உரையையும் ஆற்றினர். அதன்பின் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையாளர் அறிக்கை செபத்தை செபித்தனர். அதனைத்தொடர்ந்து  நாட்டிற்கான இறைஇரக்க மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன. ஒவ்வொரு மன்றாட்டின் போதும் அருகில் உள்ள நடப்பட்டுள்ள மரத்திற்கு நீரூற்றி ஒன்றிப்பின் அடையாளமாக அதனை அர்ப்பணித்தனர். அதனைத்தொடர்ந்து திருத்தந்தை கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான தனது உரையைத் துவக்கினார். திருத்தந்தையின் உரையைத்தொடர்ந்து இறுதி செபமும் மூன்று சமூகத்தலைவர்களின் ஆசீருடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

ஏறக்குறைய 50000 பேர் கலந்து கொண்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டின் நிறைவில் திருத்தந்தை அவர்கள்  2 கிமீட்டர் தூரம் காரில் பயணித்து ஜூபாவில் உள்ள திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். உள்ளூர் நேரம் மாஅலை 7 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 10.30 மணிக்கு திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவு உணவினை உண்டு நித்திரைக்குச் சென்றார். பிப்ரவரி 4ஆம் தேதி சனிக்கிழமை காலையில் ஜூபா புனித தெரேசா பேராலயத்தில் ஆயர்கள் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் திருத்தொண்டர்கள், மற்றும் அருள்பணித்துவ மாணவர்களுடனான வழிபாட்டு நிகழ்வு, முற்பகலில் தென்சூடான் இயேசுசபை அருள்பணியாளர்கள் சந்திப்பு, மாலையில் ஜூபா சுதந்திர மண்டபத்தில் உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் சந்திப்பு, ஜான் கராங்க் கல்லறைத்தோட்டப் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு தனது தென்சூடான் இரண்டாம் நாள் பயண நிகழ்வுகளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2023, 14:26