தேடுதல்

கோவிட்-19  தடுப்பூசி கோவிட்-19 தடுப்பூசி  

எதிர்காலத்திற்குரிய நிலையான, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல்

நாடுகள், சமுதாயங்கள் மற்றும் தனிநபர்களிடையே அதிகரித்து வரும் அநீதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு தற்போதைய அமைப்புதான் பொறுப்பாக அமைகிறது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“எதிர்காலத்திற்கான ஒரு நிலையான, வளர்ச்சியை உள்ளடக்கிய, மற்றும் மீளுருவாக்கம் செய்யும் பொருளாதாரத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வத்திக்கான் கோவிட்-19 ஆணையம், மற்றும் டெலாய்ட் நெட்வொர்க் அமைப்பும் கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறது.

ஜனவரி 12, புதன்கிழமையன்று, இலாத்தரன் ஒப்புரவு மண்டபத்தில் உள்ளூர் நேரம் மாலை 4 மணி முதல் 6.15 மணி வரை, அதாவது இந்திய நேரம் இரவு 8.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும் இக்கருத்தரங்கில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தொற்றுநோய் நமது பொருளாதார, மற்றும் சமூக அமைப்புகளின் இயலாமையை எடுத்துக்காட்டும் அதேவேளையில், நாடுகள், சமூகங்கள் மற்றும் தனிநபர்களிடையே அதிகரித்து வரும் அநீதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு தற்போதைய அமைப்புமுறை பொறுப்பாக அமைகிறது  என்பதையும் இக்கருத்தரங்கு எடுத்துரைக்கும். 

மேலும், தொற்றுநோயின் உலகளாவிய சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவிட் 19 திருப்பீட ஆணையத்துடன் பார்வையாளர்களைச் சந்தித்தபோது,  “எதிர்காலத்தை தயார்படுத்துங்கள்”, மற்றும் “நம்முன் உள்ள சவாலை அறிவியல் மற்றும் கற்பனையின் கருவிகள் மூலம் சமாளியுங்கள்” என்ற திருத்தந்தையின் அழைப்புக்கு பதிலிறுப்பு செய்வதாகவும் இந்நிகழ்வு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தின் சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார சவால்களைப் பிரதிபலிக்கவும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களில் ஒத்துழைக்கவும், Deloitte Globalன் முதன்மைப் பணியாளர் Punit Renjen,  Taihe  நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் Jiang Bo Kui, இலண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் இயக்குநர் Minouche Shafik, Deloitte அமைப்பின் வடக்கு-தெற்கு ஐரோப்பாவின் முதன்மைப் பணியாளர் Richard Houston,  மற்றும், சமூக அறிவியலுக்கான பாப்பிறை கல்விக்குழுமத்தின் தலைவர் Stefano Zamagni, ஆகிய கருத்துரையாளர்களோடு, திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உயர்மட்ட அதிகாரி, கர்தினால் Michael Czerny SJ, அதன் இடைக்காலச் செயலர் அருள்சகோதரி Alessandra Smerilli FMA, மற்றும் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பிரிவின் துணைச் செயலர் அருள்பணியாளர் Fabio Baggio CS,  ஆகியோரும் இணைந்து  உரையாற்ற உள்ளனர்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2022, 16:42