தேடுதல்

கர்தினால் Joseph Zen Ze-kiun கர்தினால் Joseph Zen Ze-kiun 

கர்தினால் ஜென் அவர்களோடு கர்தினால் பரோலின் ஒருமைப்பாடு

கர்தினால் ஜென் அவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையலில் விடுதலைசெய்யப்பட்டிருந்தாலும், அவர் நீதியோடு நடத்தப்படவேண்டும் – ஹாங்காங் மறைமாவட்டம்

மேரி தெரேசா: வத்திக்கான்

மே 11, இப்புதனன்று ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு அதே நாளில் பிணையலில் விடுதலைசெய்யப்பட்டுள்ள 90 வயது நிரம்பிய கர்தினால் Joseph Zen Ze-kiun அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தன் தோழமையுணர்வைத் தெரிவித்துள்ளார்.

வணக்கத்துக்குரிய திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவது குறித்து, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் மே 13, இவெவள்ளியன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட கர்தினால் பரோலின் அவர்களிடம், கர்தினால் ஜென் அவர்களின் கைது உட்பட பத்திரிகையாளர்கள்  கேட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

கர்தினால் ஜென் அவர்கள் எதிர்கொண்டுள்ள இந்நடவடிக்கை, திருப்பீடத்திற்கும், சீனாவிலுள்ள திருஅவைக்கும் இடையே ஏற்கனவே இடம்பெறும், சிக்கலான, மற்றும், எளிதற்றதாக இருக்கின்ற உரையாடல் போன்ற முன்னெடுப்புகளைக் கூடுதலாக சிக்கலுக்கு உள்ளாக்காது என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், கர்தினால் பரோலின்.

இதற்கிடையே, மனித உரிமை ஆர்வலர்கள் Margaret Ng, Hui Po-keung, Denise Ho ஆகியோருடன் கர்தினால் ஜென் அவர்கள் கைதுசெய்யப்பட்டது குறித்து கவலை தெரிவித்துள்ள ஹாங்காங் மறைமாவட்டம், 90 வயது நிரம்பிய கர்தினால் ஜென் அவர்கள் பிணையலில் விடுதலைசெய்யப்பட்டிருந்தாலும், அவர் நீதியோடு நடத்தப்படவேண்டும் என்று அரசை கேட்டுக்கொண்டுள்ளது. (AsiaNews)

2006ம் ஆண்டில் ஹாங்காங்கின் 6வது ஆயராக நியமிக்கப்பட்ட கர்தினால் ஜென் அவர்கள், 2009ம் ஆண்டில் பணி ஓய்வுபெற்றார். மனித உரிமைகள், அரசியல் சுதந்திரம், மத சுதந்திரம் போன்றவற்றுக்காக வெளிப்படையாக குரல்கொடுத்துவரும் இவர், சனநாயக ஆதரவு அமைப்போடு தொடர்பு வைத்திருப்பவர் ஆவார்.

உக்ரைன் போர் குறித்து கர்தினால் பரோலின்

மேலும், உக்ரைனின் கீவ் நகரில், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் மேற்கொண்டுள்ள பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் பரோலின் அவர்கள், உக்ரைனில் அமைதியை உருவாக்கத் தேவையானவை அனைத்தையும் செய்வதற்குத் திருப்பீடம் தயாராக உள்ளது என்று கூறினார். 

ஏறத்தாழ எண்பது நாள்களாக இடம்பெற்றுவரும் கடும் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, இராணுவத்திற்கு உரிமை உள்ளது என்றும், உலகில் ஆயுதங்கள் களையப்படுவது மிகவும் முக்கியம் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2022, 16:53