தேடுதல்

UISG  அமைப்பின் 22வது ஆண்டு நிறையமர்வு மாநாடு UISG அமைப்பின் 22வது ஆண்டு நிறையமர்வு மாநாடு 

துறவு சபைகள் தனிவரத்தின்படி வாழ்வதற்கு அழைப்பு

UISG அமைப்பின் 22வது மாநாடு, திருஅவையின் ஒருங்கிணைந்த பயணப் பாதையில், நலிந்தோரை அரவணைத்தல் என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் நெருக்கடி நிறைந்த காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் துறவியருக்கு விடுத்துள்ள அழைப்பின்படி வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

துறவு சபைகளை ஆரம்பித்த நிறுவனர்களின் தனிவரத்தின் தனித்துவத்தை துறவியர் அனைவரும் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், துறவியர் பேராயத்தின் தலைவர் கர்தினால் João Bráz de Aviz அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் 22வது ஆண்டு நிறையமர்வு மாநாட்டை, மே 2, இத்திங்களன்று திருப்பலியோடு ஆரம்பித்து வைத்த கர்தினால் João Bráz de Aviz அவர்கள், அம்மாநாட்டின் முதல் அமர்வில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

இக்காலத்தில் துறவியர் எதிர்கொள்கின்ற வலுவற்றநிலை பற்றிய சில அம்சங்களை எடுத்துரைத்த கர்தினால் de Aviz அவர்கள், இக்காலச் சமுதாயம் எதிர்கொள்கின்ற வலுவிழந்தநிலையே துறவியர் வாழ்விலும் உள்ளது என்றும் கூறியுள்ளார்..

உரோம் பெருநகரத்தில், மே 6, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இம்மாநாட்டில் நேரிடையாக 520 பேரும், இணையதளம் வழியாக UISG அமைப்பைச் சார்ந்த குறைந்தது 65 ஆயிரம் பேரும் பங்குபெறுகின்றனர் என்று, UISG அமைப்பின் செயல்திட்டக் குழு கூறியுள்ளது.

2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையுள்ள UISG அமைப்பின் அறிக்கையை சமர்ப்பித்த அவ்வமைப்பின் தலைமைக்குழு, கோவிட்-19 பெருந்தொற்றால் வருவாயை இழந்திருந்தாலும், ஏறத்தாழ இருபது இலட்சம் டாலரை உதவி தேவைப்படும் துறவு சபைகளுக்கு உதவியிருப்பதாகத் தெரிவித்தது.

இந்த அமைப்பின் பொதுப் பேரவை நடைபெற்ற 2019ம் ஆண்டிலிருந்து, ஆற்றி வருகின்ற பல்வேறு பயனுள்ள திட்டங்கள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், UISG அமைப்பு,  வத்திக்கானின் Laudato Si’ செயல்திட்ட அமைப்பில் இணைந்திருப்பது, மனித வர்த்தகத்திற்கு எதிராகச் செயல்படும் Talitha Kum அமைப்பு, பத்தாம் ஆண்டை நிறைவு செய்வது உட்பட பல்வேறு செயல்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

திருஅவையின் ஒருங்கிணைந்த பயணப் பாதையில், நலிந்தோரை அரவணைத்தல் என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெற்று வருகிறது.

UISG அமைப்பு

UISG அமைப்பில், 97 நாடுகளிலிருந்து, 1,900த்திற்கும் மேற்பட்ட பெண் துறவு சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 25 ஐரோப்பிய நாடுகளிலிருந்து 1046 பேரும், 16 ஆசிய நாடுகளிலிருந்து 184 பேரும், 30 அமெரிக்க நாடுகளிலிருந்து 479 பேரும், 22 ஆப்ரிக்க நாடுகளிலிருந்து 166 பேரும், 4 ஓசியானியா நாடுகளிலிருந்து 28 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இம்மாநாடு 1965ம் ஆண்டிலிருந்து, ஈராண்டிற்கொருமுறை நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2022, 15:11