தேடுதல்

  பேராயர் Peña Parra, கிழக்குத் திமோர் அரசுத்தலைவர் Ramos-Horta பேராயர் Peña Parra, கிழக்குத் திமோர் அரசுத்தலைவர் Ramos-Horta   (ANSA)

பேராயர் Peña Parraன் கிழக்குத் திமோர் சுற்றுப்பயணத்தின் நிறைவு

கிழக்குத் திமோர் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துள்ள பேராயர் Peña Parra அவர்கள், தென்கிழக்கு ஆசியாவின் ஒளியாகத் தொடர்ந்து விளங்குங்கள் என்று அந்நாட்டுக் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிழக்குத் திமோரில் புதிய திருப்பீடத் தூதரகத்தைத் திறந்து வைத்து, அந்நாட்டு அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், கத்தோலிக்கர் என எல்லாரையும் சந்தித்து அந்நாட்டில் மேற்கொண்ட ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துள்ளார், திருப்பீட அதிகாரி பேராயர் Edgar Peña Parra.

திருப்பீடச் செயலரின் பதிலாளராகிய பேராயர் Peña Parra அவர்கள், செப்டம்பர் 23, இவ்வெள்ளி காலையில் உரோம் நகருக்குப் புறப்படுவதற்குமுன், கிழக்குத் திமோர் நாடாளுமன்றத் தலைவர் Aniceto Guterres அவர்களையும், அந்நாட்டின் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தபோது, அந்நாட்டில் மறைபோதகர்கள் நுழைவதற்கு ஆதரவாக அண்மையில் சில சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு நன்றியைத் தெரிவித்தார்.

அந்நேரத்தில் அப்பிரதிநிதிகளும், கிழக்குத் திமோர் வரலாற்றில், திருஅவையின் முக்கியத்துவத்தை பேராயரிடம் வலியுறுத்திக் கூறினர்.

தலைநகர் திலியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள திருப்பீடத் தூதரகம், அந்நாடு மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையின் அடையாளமாக உள்ளது என்றுரைத்த பேராயர் Peña Parra அவர்கள், தென்கிழக்கு ஆசியாவின் ஒளியாகத் தொடர்ந்து விளங்குங்கள் என்று அந்நாட்டுக் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார்.

செப்டம்பர் 19 இத்திங்களன்று கிழக்குத் திமோர் சென்ற பேராயர் Peña Parra அவர்களை, 1996ஆம் ஆண்டில் நொபெல் அமைதி விருதுபெற்ற அந்நாட்டு அரசுத்தலைவர் José Ramos-Horta அவர்கள் வரவேற்றார். அதேநாளில், 2019ஆம் ஆண்டில் அபு தாபியில் கையெழுத்திடப்பட்ட மனித உடன்பிறந்த உணர்வுநிலை ஏட்டினால் தூண்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள, உலக அமைதிக்காக மனித உடன்பிறந்த உணர்வுநிலை என்ற மையத்தையும் திறந்து வைத்தார்.

செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று, அந்நாட்டு கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில்  மனித உடன்பிறந்த உணர்வுநிலை ஏடு குறித்த கருத்தரங்கிலும் பேராயர் Peña Parra அவர்கள் கலந்துகொண்டார்.

ஆசியாவில் பிலிப்பீன்ஸ்க்கு அடுத்தபடியாக கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடு கிழக்குத் திமோர் ஆகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2022, 11:30