தேடுதல்

நைஜீரியாவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள் நைஜீரியாவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள்  

கிறிஸ்தவர்களே, உலகில் அதிகமாகத் துன்புறுத்தப்படுகின்றனர்

உரையாடல், மற்றும் ஒத்துழைப்புக் கலாச்சாரம், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட உதவும் சிறந்த வழிகளாகும் – ஐ.நா.வில் கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான்

தனித்துவிடப்பட்டநிலை மற்றும், தாழ்வுமனப்பான்மை உணர்வுகளை ஏற்படுத்தும்  சிறுபான்மையினர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நா.வின் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டார்.

நாடு, இனம், மதம், மொழி என்ற வகையில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களின் உரிமைகள் குறித்த அறிக்கை, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முப்பதாம் ஆண்டை நினைவுகூர்ந்த ஐ.நா.வின் உயர்மட்ட கூட்டத்தில், செப்டம்பர் 21, இப்புதனன்று உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், பாகுபாட்டிற்காக, சிறுபான்மையினர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

பெரும்பான்மை, சிறுபான்மை என்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப்படும்போது, அனைத்து மனிதரும் சம மாண்பு மற்றும், சம உரிமையோடு வாழ்வதற்கு உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தும் அடிப்படை மனித உரிமைகள் மற்றும், சுதந்திரத்தின் கொள்கையை படிப்படியாக அழித்துவிடும் என்பதை நாம் மனதில் இருத்தவேண்டும் என்று கூறியுள்ளார், கர்தினால் பரோலின்.

மத சிறுபான்மையினர் என்று கூறும்போது, உலகில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக  இருக்கின்ற நாடுகளில் மட்டுமல்ல, மற்ற பகுதிகளிலும் அவர்கள் மிக அதிகமாகத் துன்புறுத்தலுக்கு தொடர்ந்து உள்ளாகி வருவது குறித்து, திருப்பீடம் மிகுந்த கவலைகொண்டுள்ளது என இக்கூட்டத்தில் பதிவுசெய்ய விரும்புகிறேன் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

76 நாடுகளில், ஏறத்தாழ 36 கோடி கிறிஸ்தவர்கள் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக, பாகுபாடு, வன்முறை, மற்றும், சித்ரவதைகளையும், இவர்கள் மட்டுமன்றி மற்ற சிறுபான்மை மதத்தவரும் இதேமாதிரியான துயரங்களை எதிர்கொள்கின்றனர் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இது, கருத்து, மனச்சான்று, மதம் ஆகியவற்றிற்குள்ள அடிப்படை உரிமையை மீறுவதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

தனிநபரும், குழுவும் மதத்தை, பொதுவாகவும் தனியாகவும் கடைப்பிடிப்பது, சமயக் குழுக்கள் கட்டடங்களையும் சொத்துக்களையும் வைத்துக் காப்பது, ஆலயங்களைக் கொண்டிருப்பது, தங்களின் நிறுவனங்களில் சமய நடவடிக்கைகளை நடத்துவது ஆகியவற்றிற்குள்ள போன்ற எல்லா உரிமைகளுக்கும் இது, அச்சுறுத்தலாக உள்ளது கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு, இனம், மதம் மற்றும் மொழியின் அடிப்படையிலுள்ள சிறுபான்மை மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், ஊக்குவிக்கப்படுவதும், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொண்டு, உரையாடல் கலாச்சாரத்தை ஏற்பதில் அடிப்படையைக் கொண்டிருக்கின்றன எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் ஐ.நா.வில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2022, 15:43