தேடுதல்

ஐ.நா.வில் கர்தினால் பரோலின் ஐ.நா.வில் கர்தினால் பரோலின்   (AFP or licensors)

ஐ.நா.வில் கர்தினால் பரோலின், இரஷ்யாவின் Lavrov சந்திப்பு

உரையாடல் வழியாக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு எப்போதும் வாய்ப்பு இருப்பதால், எப்போதும் நாம் உரையாடலில் ஈடுபடவேண்டும் - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான்

இவ்வாரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் 77வது பொது அமர்வு நடைபெற்றுவரும்வேளை, அவ்விடத்தில் நடைபெறும் மற்றொரு நிகழ்வில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

செப்டம்பர் 22, இவ்வியாழனன்று Lavrov அவர்களை சந்தித்துப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், உரையாடல் வழியாக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு எப்போதும் வாய்ப்பு இருப்பதால், எப்போதும் நாம் உரையாடலில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி இரஷ்யா உக்ரைனை ஆக்ரமித்ததிலிருந்து அந்நாட்டில் தொடர்ந்து கடுமையாகப் போர் இடம்பெற்று வருகிறது. திருத்தந்தையும், திருஅவைத் தலைவர்களும், ஐ.நா.வும், இப்போர் நிறுத்தப்பட தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் போர் முடிவுற..

மேலும், செப்டம்பர் 22, இவ்வியாழனன்று, ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குகொண்ட வெளியுறவு அமைச்சர்களுக்கு உரையாற்றிய ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், உக்ரைனில் இடம்பெற்றுவரும் அறிவற்றதனமான போரை முடிவுக்குக்கொணர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இரட்டிப்பாக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உக்ரைனில் போர் தொடங்கி, இப்போது ஏழாவது மாதத்தில் நாம் இருக்கின்றோம், அப்போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும், இந்தப் போர் மேலும் வலுவடையாதிருக்கவும், அதனை முடிவுக்குக் கொணரவும் நாடுகள் தங்களின் முயற்சிகளை அதிகரிக்கவேண்டும் என்றும் கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்

பசி, எரிசக்தி, நிதி ஆகியவற்றில் உலக அளவில் இப்போர் நெருக்கடியை உருவாக்கி, வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது மற்றும், சக்திமிக்க அணுப் பேரிடர் ஏற்படும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் வளர்ந்து வருகின்றது என்றும் கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2022, 12:31