தேடுதல்

தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர்   (ANSA)

எத்தியோப்பியாவின் வான்வழித் தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

தொடரும் வான்வெளி தாக்குதலால் எத்தியோப்பியாவின் வடக்கு திக்ரே பகுதியில் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

ஜனவரி 10, கடந்த திங்களன்று, எத்தியோப்பியாவின் வடக்கு Tigray பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமுற்றனர் எனவும்,  இறந்தவர்களில் பலர் மாவு மில்லில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பிய இராணுவத்தின் இந்த வான்வழித் தாக்குதல் நடந்த அதேநாளில்,  அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பிடன் அவர்கள், தனது எத்தியோப்பியப் பிரதிநிதியான அபி அஹ்மதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் வான்வழித் தாக்குதலால் ஏற்பட்டுள்ள துன்ப துயரங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை எழுப்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போதிய செய்தித்தொடர்புகள் இல்லாததால், இந்தத் தாக்குதலில் எத்தனைபேர் இறந்தார்கள் என்பதை சரியாக அறியமுடியவில்லை என்று ஐ.நா. அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது.

ஜனவரி 10, திங்களன்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கான அரசியல் தூதர்களுக்கு வழங்கிய  உரையில், எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவரும் உள்நாட்டு மோதல்கள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, "எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் தேவைகளை முன்வைக்கும் நேரடியான சந்திப்பின் மூலம் ஒப்புரவு, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பாதையை மீண்டும் ஒருமுறை கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்  

ஏறத்தாழ, ஓர் ஆண்டிற்கும் மேலாக நீடித்துவரும் இந்த உள்நாட்டுப் போரானது, பேரழிவு தரும் மனிதாபிமான நெருக்கடியையும் பரவலான பஞ்சத்தையும், வறுமையையும் உருவாக்கியுள்ளது என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2022, 15:39