தேடுதல்

சென்னையில் வெள்ளப்பெருக்கின்போது சென்னையில் வெள்ளப்பெருக்கின்போது   (ANSA)

இனியது இயற்கை - வேண்டும் நீர் மேலாண்மைத் திட்டங்கள்

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதை மறந்து மழைக்காலத்தில் இயற்கையன்னை வாரி வழங்கும் அதிகப்படியான தண்ணீரை நாம் சேமிக்கத் தவறிவிடுகிறோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“அண்ணே, குளுகுளு குற்றால சீசன் தொடங்கிடிச்சு. காரை எடுத்துக்கிட்டு ஒரு ரவுண்டு போயி அப்படியே ஒரு குளியல் போட்டுட்டு வருவோமா” என கிளம்பும் மக்கள் கூட்டத்தைப் பார்த்திக்கிறோம். அடிக்கடி குற்றாலம் நிரம்பி வழிகிறது.... பாபநாச அணை நிரம்பி இரண்டு கரைகளையும் தொட்டபடி பாய்கிறது… தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது என்று ஆண்டுதோறும் செய்திகள் ஆயிரக்கணக்கில் வருவதைப் பார்க்கிறோம். ஆனால், மற்றொருபுறம் இதே பகுதிகளில் குடிக்கத் தண்ணீர் இல்லை என மக்கள் போராடுவதையும் காண முடிகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி, “எட்டிப் பார்த்தால் தாமிரபரணி ஆறு.. ஆனா குடிக்கத் தண்ணீர் இல்லை! கொதித்தெழுந்த நெல்லை மக்கள்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்திருந்தது.  

திருநெல்வேலி நகரில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில், முறையாகக் குடிதண்ணீர் வரவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் 2 இடங்களில் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் முத்தமிழ் நகர் மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 5 நாட்களாகக் குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தங்களுக்குக் கூட முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையே! என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள், மேலப்பாளையத்திலிருந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பிரதான சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால், உணவுகளை சமைப்பதற்கும் குடி தண்ணீருக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, முறையான குடிநீர் விநியோகம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.     

இதற்கு எது காரணமாக இருக்க முடியும் என்பதை அரசுத் தலைவர்களும் அதிகாரிகளும் சிந்திப்பதே இல்லை. ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பார்கள். மழைக்காலத்தில் இயற்கையன்னை வாரி வழங்கும் அதிகப்படியான தண்ணீரை நாம் சேமிக்கத் தவறிவிடுகிறோம். தமிழகம் முழுவதுமே இதேநிலைதான் என்பதை எண்ணும்போது மனது வலிக்கிறது. நமது அரசுத் தலைவர்களும் அதிகாரிகளும் எப்போதுதான் பாடம் கற்றுக்கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமான மழை பெய்தது, ஆனால், எல்லாமே வீணாகக் கடலில் கலந்தது. நாம் சரியான முறையில் நீர்மேலாண்மைத் திட்டங்களை வகுத்திருந்தால் இந்தத் துயரங்களுக்கு ஆளாகி இருந்திருக்கமாட்டோம். எவ்வித வசதி வாய்ப்புகளும் இல்லாத பழங்காலத்திலேயே பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்கள் வகுத்து  செயல்படுத்தப்பட்டன. ஆனால், எல்லாவித வசதி வாய்ப்புகளும் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் கூட, இன்னும் அப்படியே இருப்பது மேலும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வோம். வரும் காலங்களில் நீர்மேலாண்மைத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவோம்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2022, 16:00