தேடுதல்

அமைதியான கடலை இரசித்தல் அமைதியான கடலை இரசித்தல்   (ANSA)

இனியது இயற்கை: வியக்கவைக்கும் அமைதிப் (பசிபிக்) பெருங்கடல்

1521ம் ஆண்டில் போர்த்துகீசிய நாடுகாண் பயணி பெர்னாண்டோ மாகெல்லன் (Ferdinand Magellan) அவர்கள், பசிபிக் பெருங்கடலை அமைதிப் பெருங்கடல் என்று அழைத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

புவியியல் ஆய்வாளர்கள், இரண்டாயிரமாம் ஆண்டுவரை, உலகின் கடல்களில், நான்கு மட்டுமே பெருங்கடல்களாக இருப்பதாகவே பல ஆண்டுகளாக கருதிவந்தனர். ஆனால் இரண்டாயிரமாம் ஆண்டில் ஐந்தாவது பெருங்கடல் ஒன்று இருப்பதாக உலக கடல் நாளான ஜூன் 8ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே தற்போது உலகில், அட்லாண்டிக், ஆர்க்டிக், பசிபிக், இந்திய மற்றும் தெற்கு என ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. இந்த தென் பெருங்கடல், அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள நீர்ப் பகுதியாகும்.

உலகின் ஐந்து பெருங்கடல்களில் மிகவும் பெரியது பசிபிக். இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பைவிட மிகப் பெரியதாகும். இது, வடக்கில், தெற்கு, ஆர்டிக்ட் பெருங்கடலுக்கும், ஆசியா, மேற்கில் ஆஸ்திரேலியா மற்றும், கிழக்கில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இது, நம் பூமிக்கோளத்தின் தண்ணீர்ப் பகுதியில் ஏறத்தாழ மேற்பரப்பில் ஏறத்தாழ 32 விழுக்காட்டை ஆக்ரமித்துள்ளது. இதுவே உலகின் ஆழமான பெருங்கடலும் ஆகும். இது 35,853 அடி ஆழம் கொண்டதாகும். உலகின் மிக ஆழமான பகுதியான, 10,911 மீ ஆழமுடைய மரியானா அகழியை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும். இப்பெருங்கடலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அதை, பூமத்திய ரேகை, வடக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடலாக பிரிக்கிறது. 1521ம் ஆண்டில் போர்த்துகீசிய நாடுகாண் பயணி பெர்னாண்டோ மாகெல்லன் (Ferdinand Magellan) அவர்கள், இந்த பசிபிக் பெருங்கடலை அமைதிப் பெருங்கடல் என்று அழைத்தார். இப்பெருங்கடலின் மிக ஆழமான தன்மையால்,  இங்கு கனிம வளங்கள் நிறைந்துள்ளன. ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் பெட்ரோல், எரிவாயு ஆகியவற்றை எடுக்கின்றன. மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான், பப்புவா நியூகினியா, நிக்கராகுவா, பனாமா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் முத்து எடுக்கப்படுகின்றது. அமைதிப் பெருங்கடலின் மிகப்பெரிய சொத்து அதன் மீன்களாகும். இதன் கடற்கரையோரங்களில் பல அரிய வகை மீன்கள் கிடைக்கின்றன.1986ம் ஆண்டில் அணு சக்தி கழிவுகள் இப்பகுதியில் குவிவதை தடுக்க இப்பகுதியை தெற்கு அமைதிப் பெருங்கடல் மன்றத்தின் உறுப்பு நாடுகள் அணுசக்தி பயன்பாட்டுக்கற்ற பகுதியாக அறிவித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2022, 12:05