தேடுதல்

அபிட்ஜானில் நடைபெறும் COP 15 உச்சிமாநாடு அபிட்ஜானில் நடைபெறும் COP 15 உச்சிமாநாடு   (AFP or licensors)

காடழிப்புக்கு எதிரான ஐ.நா.வின் COP 15 உச்சி மாநாடு

நமது நாடுகளின் நிலம் மற்றும் வன மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் ஐ.நா.வின் COP 15 உச்சி மாநாடு அமையவேண்டும்: ஐவோரியன் அரசுத் தலைவர் Alassane Ouattara

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நிலத்தின் சீரழிவுக்கு எதிரான நடவடிக்கையை ஊக்குவிக்கவும், பல்லுயிர் மற்றும் மக்கள் தொகைக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளை அழித்தொழிக்கவும் அபிட்ஜானில் நடைபெறும் காடழிப்பு தொடர்பான COP 15 உச்சிமாநாடு அழைப்புவிடுத்துள்ளது.  

உலகை பாலைவனமாக்குவதை எதிர்த்துப் போராடுவதற்கான ஐநாவின் COP 15 எனப்படும் உச்சிமாநாட்டின் அமர்வு மே 9, இத்திங்களன்று Ivory Coastலிலுள்ள அபிட்ஜானில் தொடங்கியுள்ளது.

மே 9 முதல் 20 வரை நடைபெறும் இவ்வுச்சிமாநாட்டில் நிலம், வாழ்க்கை, மரபு: பற்றாக்குறையிலிருந்து வளர்ச்சி வரை, என்ற தலைப்பில் இப்பூமியின் அடித்தளமான நிலம், தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து பயனளிக்கும் என்பதை உறுதி செய்யும் நடவடிக்கைக்கான அழைப்பாக இது அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 9 திங்களன்று, அபிட்ஜானில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் பலர், வறட்சி மற்றும் பாலைவனமாதல் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளனர்.

இம்மாநாட்டில் உரையாற்றிய ஐநா பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித் அவர்கள், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் பயன்படும் உற்பத்தி நிலத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.  

தேவைப்படும் நாடுகளுக்கு நிதி கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் அந்த நிதியானது தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் பகுதிகளில் முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் அமினா முகமது அவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அபிட்ஜானில் 10 நாள்கள் நடைபெற்றுவரும் இந்த உச்சிமாநாட்டில் மாநிலத் தலைவர்கள், அரசுத் தலைவர்கள், தனியார் துறை மற்றும் நாடுகளின் பிரதிநிதிகள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2022, 13:51