தேடுதல்

ஏமன் சிறார் ஏமன் சிறார்  (AFP or licensors)

ஏமன் சிறார், இளையோர் பாதுகாப்புக்கான நிதிஉதவி அதிகரிக்கப்பட...

அடிப்படை வளங்கள் கிடைத்தால் சிறார் மற்றும் இளம்தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏமனில் சிறார் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான நிதியுதவியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும், 1 கோடியே 10 இலட்சம் பெண்கள் மற்றும் சிறார் உட்பட மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை என்றும் தெரிவித்துள்ளது சேவ் த சில்ரன் என்னும் பன்னாட்டு குழந்தைகள் நல அமைப்பு.

செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏமனுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் 62 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள குழந்தைகள் நல அமைப்பு, இந்நிலைமை நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குறிப்பாக சிறாரின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, ஏமனின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 1கோடியே 10 இலட்சம் பெண்கள் மற்றும் சிறார் உட்பட 2கோடியே 16 இலட்சம் மக்கள் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் 3 கோடியே 64 இலட்சம் டாலர் பணமதிப்பாக இருந்த தொகை தற்போது 1 கோடியே 38 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றும், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் நன்கொடையாளர்கள் அளித்த உறுதிமொழிகள் நிதித் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கைக்கூட எட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து 2019 ஆம் ஆண்டு முதல் தனது நிதியை 86 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் குறைத்துள்ளது என்றும், டென்மார்க் 80 விழுக்காடு குறைந்த நிலையில் நான்காவது பெரிய நன்கொடையாளராக இருக்கும் ஜெர்மனியும் நிதிஉதவிகளில் பின்தங்கியுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

அடிப்படை வளங்கள் கிடைத்தால் சிறார் மற்றும் இளம் தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்றும், அவ்வாறு அவர்கள் அனைத்து நலன்களையும் பெறச்செய்வது உலகத் தலைவர்களின் கைகளில் உள்ளது என்று கூறியுள்ளார் குண்டுவீச்சினால் தனது கால்களை இழந்த 16 வயது Eyad என்ற இளைஞர்.

26 September 2023, 13:42