தேடுதல்

காசாவில் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுகின்றன காசாவில் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுகின்றன   (AFP or licensors)

காசாவுக்கு உதவும் விதமாக அனைத்துலக மாநாட்டை நடத்துகிறது ஜோர்டான்!

காசாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள், குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தடுத்து வருவதாகக் கூறுகிறது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசா பகுதியில் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்குப் பதிலளிப்பது குறித்த அவசர அனைத்துல மாநாட்டை ஜோர்டான் அரசு நடத்துகிறது.

இந்த மாநாடு ஜூன் 11, செவ்வாயன்று, சாக்கடல் அருகே நடைபெறும் என்றும், இது ஐக்கிய நாடுகள் அவை மற்றும் எகிப்துடன் இணைந்து நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை அனைத்துலக அளவில் மேம்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண்பது மற்றும் கூட்டு ஒருங்கிணைவுடன் அதன் தற்போதைய நிலையைக் களைவதில் கண்டறியப்பட வேண்டிய அர்ப்பணிப்பு யாவற்றையும் இந்த மாநாடு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், எகிப்திய விமானப்படை காசா பகுதியின் வடக்கில் பல வான்வழி உதவிகளை மேற்கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு இரஃபா எல்லை வழியாக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்வது தடைபட்டுள்ள வேளை, அது திறப்பது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

காசாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள், குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தடுத்து வருவதாக ஜூன் 7, இவ்வெள்ளியன்று யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள ஒவ்வொரு பத்து குழந்தைகளில் ஒன்பது பேர் கடுமையான உணவுப் பற்றாக்குறையை அனுபவித்து வருகின்றனர் என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த 8 மாதங்களாகப்  பயங்கர மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் திடீர் தாக்குதலை நடத்தி 1,200 பேரைக் கொன்று 250 பேரைப்  பிணையக்கைதிகளாக கொண்டு சென்றதைத் தொடர்ந்து காசாவில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2024, 16:13