தேடுதல்

மியான்மாரின் யாங்கூனில் வங்கிக்கு வெளியே பணம் எடுக்கக் காத்திருக்கும் கூட்டம் மியான்மாரின் யாங்கூனில் வங்கிக்கு வெளியே பணம் எடுக்கக் காத்திருக்கும் கூட்டம் 

அதிக வன்முறை நிறைந்த இடமாக மாறியுள்ள மியான்மார்

இராணுவ ஆட்சியால் உதவிகள் தடுக்கப்படுவதால், உணவின்றி இறக்கும் அவல நிலையில் மியான்மார் மக்கள்.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

உலகில் உள்ள அனைத்து நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் நடைபெறும் மோதல்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும் ACLED என்ற அமைப்பு, உலகிலேயே வன்முறை மிகுந்த நாடு மியான்மார் என்று தெரிவித்துள்ளது.

மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை 2021ல் அந்நாட்டு இராணுவம் தூக்கி எறிந்தபோது துவங்கிய உள்நாட்டு மோதல்களில், குறைந்தது 8,000 பொதுமக்கள் உட்பட 50,000 பேர் கொல்லப்பட்டுளளதாகவும், ஏறக்குறைய 23 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவ்வமைப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில் "மியான்மாரையும், போரில் ஈடுபட்டுள்ள பல நாடுகளையும் நாம் மறந்துவிடக் கூடாது" என்று, ஜூன் 12ஆம் தேதி அமைதிக்கான தன் வேண்டுதலை மக்கள் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல எல்லை நகரங்களை மக்கள் பாதுகாப்புப் படைகள் கைப்பற்றியிருந்தாலும், மியான்மாரின் முக்கிய நகரங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்று கூறும் ACLED அமைப்பு, ஏழு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற  'ஆபரேஷன் 1027' மூலம் கிளர்ச்சியாளர்கள் மற்றும் இராணுவத்துக்கிடையேயான மோதல் தொடந்து பல நகரங்களுக்கு பரவியிருக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

மியான்மாரின் அமைதி கண்காணிப்பு அமைப்பின் ஆய்வின்படி, இராணுவ ஆட்சியை எதிர்க்கும் மக்கள் பாதுகாப்புப் படைகள்,  எதிர்க்கட்சி முன்னணி மற்றும் பொது நலனுடன் போராடும் பல்வேறு இன அமைப்புகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த கட்டமைப்போ அல்லது உறுதியான அரசியல் உடன்பாடோ இல்லை என்று தெரிய வருகிறது.

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நாட்டின் மைய நகரங்களில் வாழ்க்கை இயல்பானதாக இருந்தாலும், குறைவான அளவு மின்சாரம், மற்றும் அச்சம் சூழ்ந்த வாழ்க்கையே தொடர்ந்து நிலவுவதாக விளக்கிய இந்த ஆய்வு  நிறுவனம், தற்போதைய மோதல்கள் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அதனால் 2025 நிதியாண்டில் மியான்மார் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானம் வெறும் 1 விழுக்காடு மட்டுமே உயரும் என்றும் உலக வங்கி கணித்துள்ளதாக விளக்குகிறது.

மியான்மாரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை இராணுவ ஆட்சிக் குழு கைப்பற்றியதிலிருந்து, சீனா, பங்களாதேஷ் மற்றும் இந்திய நாடுகளின் தரை வழி வர்த்தகங்கள் தடைப்பட்டிருப்பதால், கடந்த ஆண்டில் பொருளாதார நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.

மேலும், இராணுவ ஆட்சியின் தவறான நிர்வாகம் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது என்றும், மார்ச் 2020 உடன் ஒப்பிடும்போது, ​​வறுமை விகிதம் இரட்டிப்பாகியிருக்கிறது என்றும் குறிப்பிட்ட  ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர், ஏறக்குறைய சரி பாதி மக்கள் வறுமையிலும் கிராமப்புறங்களிலும் வாழ்வதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் இடம்பெயர்தல், வேலையின்மை, மற்றும் பொருளாதார இழப்பு, முன்னேற்றத்தின் பெரும்பகுதியை சீர்குலைத்துள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, கடந்த பிப்ரவரி மாதத்தில் இராணுவ ஆட்சிக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட, இராணுவப் படைகளுக்கு ஆள்சேர்க்கும் முறையினால், மக்கள் வெளிநாடுகளுக்கு மற்றும் கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்வது அதிகரித்துள்ளதாகவும், இது பொருளாதாரத்தின் சில துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறது.

வன்முறைகள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இராணுவத்தின் பல்வேறு தடைகளால் உணவின்றி இறக்கும் அவல நிலையில் உள்ளதாகவும், மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரணங்களைக் கொண்டு செல்லும் அனைத்து வழிகளும் இராணுவத்தால் தொடர்ந்து தடை செய்யப்படுவதால், 17 இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் fides செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2024, 15:14