ஆசிய கலாச்சாரத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஒன்றிணைந்து நடைபோடும் திருஅவையில் தகவல் தொடர்புகள் என்ற தலைப்பில் கடந்தவாரம் தாய்லாந்தின் பாங்காக்கில் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும், சமூகத் தொடர்பு அலுவலகங்களும் இணைந்து நடத்தியக் கூட்டத்தில் சமூகத் தொடர்புகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் முனைவர் பவுலோ ரூஃபினி கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஐந்து நாட்கள் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய முனைவர் ரூஃபினி அவர்கள், தலைமைத் திருஅவைக்கும் தலத்திருஅவைகளுக்கும் இடையே ஒருவருக்கொருவர் ஆதரவை வரவேற்கும் திருப்பீடம், தகவலை வழங்குவதில் அல்ல, உறவுகளை வளர்ப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.
மனிதர்கள் ஒருவரையொருவர் நேரடியாகச் சந்தித்து தங்களிடையே எண்ணங்களையும், அக்கறைகளையும், கனவுகளையும் பகிர்ந்துகொள்வது எப்போதும் அழகானது என உரைத்த முனைவர் ரூஃபினி அவர்கள், அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்துள்ளது என்பதையும், தோற்றத்தையும் தாண்டி ஒன்றை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதையும் ஆசிய கலாச்சாரத்திலிருந்து பிறர் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
சமூகத் தொடர்புகளுக்கான திருப்பீடத் துறையால் சமூகத் தொடர்புகளின் மேய்ப்புப் பணி சிந்தனைகள் குறித்து வெளியிடப்பட்ட 34 பக்க ஏடும் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
டிஜிட்டல் உலகில் விசுவாச புலப்படுத்தல் என்ற தலைப்பில் திருப்பீட சமூகத் தொடர்புத்துறையால் நடத்தப்பட்டுவரும் திட்டத்தில் இந்த ஆயர் பேரவைகளின் கூட்டத்தின்போது ஆசியாவைச் சேர்ந்த சமூகத்தொடர்பாளர்கள் இணையதளம் வழியாகப் பங்குபெற்றனர்.
பிலிப்பீன்ஸ், மலேசியா, மியான்மார், சிங்கப்பூர், வியட்நாம், இந்தியா, கிழக்கு திமோர், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த இளையோர் இதில் கலந்துகொண்டனர்.
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரும் யாங்கூன் பேராயருமான கர்தினால் Charles Bo, பாங்காக் கர்தினால் Francis Xavier Kriengsak, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் சமூகத் தொடர்புகளுக்கான அலுவலகத் தலைவர், கர்தினால் Sebastian Francis உட்பட ஏறக்குறைய 30 பேர் இந்த பாங்காக் கூட்டத்தில் நேரடியாகப் பங்குபெற்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்