தடம் தந்த தகைமை - கோவில் தூய்மைப்பாடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய்த் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்” என்றார்கள். எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச்சென்றார்கள். திருஉறைவிடம் பாழடைந்திருந்ததையும், பலிபீடம் தீட்டுப்பட்டுக் கிடந்ததையும், கதவுகள் தீக்கிரையானதையும், காட்டிலும் மலையிலும் இருப்பதுபோல முற்றங்களில் முட்செடிகள் அடர்ந்திருந்ததையும், குருக்களுடைய அறைகள் இடிபட்டுக் கிடந்ததையும் அவர்கள் கண்டார்கள்; தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் அழுது புலம்பி, தங்கள்மீது சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள்; எக்காளத்தால் அடையாள ஒலி எழும்பியதும் விண்ணக இறைவனை நோக்கி மன்றாடினார்கள்.
தாம் தூய இடத்தைத் தூய்மைப்படுத்தும்வரை கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி யூதா சிலரை ஒதுக்கிவைத்தார்; திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த குற்றமற்ற குருக்களைத் தேடிக்கொண்டார். திருச்சட்டப்படி முழுக்கற்களைக்கொண்டு முன்பு இருந்த வண்ணம் புதிய பலிபீடத்தைக் கட்டினார்கள்; தூயகத்தையும் கோவிலின் உட்பகுதிகளையும் பழுதுபார்த்தார்கள்; முற்றங்களையும் தூய்மைப்படுத்தினார்கள்; தூய கலன்களைப் புதிதாகச் செய்தார்கள்; விளக்குத் தண்டையும் தூபபீடத்தையும் காணிக்கை அப்ப மேசையையும் கோவிலுக்குள் கொண்டுவந்தார்கள்; பீடத்தின் மீது சாம்பிராணியைப் புகைத்துத் தண்டின்மீது இருந்த விளக்குகளை ஏற்றியதும் கோவில் ஒளிர்ந்தது; மேசைமீது அப்பங்களை வைத்துத் திரைகளைத் தொங்கவிட்டார்கள்; இவ்வாறு தாங்கள் மேற்கொண்ட வேலைகளையெல்லாம் செய்து முடித்தார்கள்.
நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின. எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள். மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள்வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.
முன்புபோல வேற்றினத்தார் உள்ளே சென்று தீட்டுப்படுத்தாதவாறு அவர்கள் சீயோன் மலையைச் சுற்றிலும் உயர்ந்த மதில்களையும் உறுதியான காவல்மாடங்களையும் அப்போது எழுப்பினார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்