மணிப்பூரில் இறந்தவர்களுக்காக இறைவேண்டல் மணிப்பூரில் இறந்தவர்களுக்காக இறைவேண்டல்   (AFP or licensors)

மணிப்பூர் மோதலில் இறந்தவர்களை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மணிப்பூரின் 32 இலட்ச மக்களில் 53 விழுக்காட்டினர் இந்துக்கள், இவர்களில் பெரும்பாலோர் மெய்தி இனமக்கள். கிறிஸ்தவர்கள், பெரும்பாலும் பழங்குடியினர். இவர்கள் 41 விழுக்காடு உள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின கிறிஸ்தவர்களுக்கும் பெரும்பான்மை இந்துக்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்து ஆறு மாதங்களுக்கும் மேலான நிலையில், நாட்டின் உச்ச நீதிமன்றம் அங்குப் பிணவறைகளில் பாதுகாக்கப்பட்ட 175 உடல்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அம்மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள தலத்திருஅவையின் தலைவர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், எங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இறுதியாக வழிவகுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இணங்கி, எங்கள் இறந்தவர்களை அமைதியான முறையில் அடக்கம் செய்ய அனுமதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நவம்பர் 28, இச்செவ்வாயன்று, மதவெறி வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் தாக்கல் செய்த பல மனுக்கள் மீது விசாரணை நடைபெற்ற வேளை, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அதன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நிகழ்ந்த இந்த வன்முறையின்போது, குக்கியினத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். போரிடும் பிரிவினரிடையே புதைக்கப்பட வேண்டிய இடங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் பல மாதங்களாகப் பிணவறைகளில் வைக்கப்பட்டன

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அல்லது தகனம் செய்வதற்கு ஒன்பது இடங்களை அடையாளம் கண்டுள்ளது. அதேவேளையில், சில குடிமைச் சமூக குழுக்களின் எதிர்ப்பின் காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனைக் கருத்தில்கொண்டு, தலைமை நீதிபதி D. Y. Chandrachud, நீதிபதிகள் J B Pardiwala, Manoj Misra, ஆகியோர் அடங்கிய அமர்வு, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இறந்தவர்களை அமைதியான முறையில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 நவம்பர் 2023, 15:18