தென் ஆப்ரிக்க ஆயர்கள் தென் ஆப்ரிக்க ஆயர்கள்  

ஆயர்கள் : ஆப்ரிக்காவுக்கு தேவை அனுதாபமல்ல, நீதி.

ஏழை நாடுகளுக்கு ஒருமைப்பாட்டுடன் உதவ வேண்டிய முக்கியத்துவம் மறைந்து தற்போது பொருளாதார இலாபங்களுக்கான கொள்கைகளுடன் ஐரோப்பா செயல்படுவதாக ஐரோப்பிய, ஆப்ரிக்க ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆப்ரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான உறவு, ஒருவருக்கொருவருக்கான மதிப்புடனும், சுற்றுச்சூழல் குறித்த ஒத்துழைப்புடனும், மனித மாண்பை மையமாக வைப்பதுடனும் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க ஆயர் பேரவைகளின் ஒன்றிணைந்த அறிக்கை.

ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் இம்மாதம் 21ஆம் தேதி இடம்பெறுவதற்கு முன்பாக ஐரோப்பிய ஆயர் பேரவையும் ஆப்ரிக்க ஆயர் பேரவையும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இன்று ஆப்ரிக்காவிற்கு தேவைப்படுவது பிறரன்பு உதவி நடவடிக்கை அல்ல, மாறாக நீதி என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய அவையின் வெளிநாட்டுக் கொள்கைகளில் முக்கியத்துவம் கொடுப்பவைகள் குறித்தவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்துள்ளதுக் குறித்து தங்கள் கவலையை வெளியிடும் ஆயர்கள், ஏழை நாடுகளுக்கு ஒருமைப்பாட்டுடன் உதவ வேண்டிய முக்கியத்துவம் மறைந்து, தற்போது பொருளாதார இலாபங்களுக்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு ஐரோப்பா செயல்படுவதாகக் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆப்ரிக்க மக்களின் தேவைகளை அக்கறையுடன் நிறைவேற்றி வந்த நிலையில், தற்போது அவர்கள் வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும் நிலம், நீர், பயிர் விதைகள், மற்றும் கனிமம் போன்ற பொருட்கள் வெளிநாட்டு இலாபத்திற்கான பொருட்களாக மாறியுள்ளன என இரு கண்டங்களின் ஆயர்களும் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

உலகின் குரல் மற்றும் ஏழைகளின் குரல் பற்றிப் பேசும் Laudato Si’ என்ற திருத்தந்தையின் சுற்றுமடல் குறித்தும் தங்கள் அறிக்கையில் விவாதிக்கும் ஆயர்கள், ஐரோப்பாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் இடையேயான உறவு சரிசம நிலையில் இல்லையென்பதால் ஆப்ரிக்க நாடுகள் அனுபவிக்கும் அநீதிகளையும் துயர்களையும் விவரித்துள்ளனர்.

மக்களைவிட இலாபங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் காலநிலை மாற்றம், மண் வளமிழப்பு, உணவின்மை அதிகரிப்பு போன்றவை இடம்பெற்று வருவதாக அவ்வறிக்கையில் ஆப்ரிக்க ஆயர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2025, 15:30