அம்மோனியர்களின் படைகள் அம்மோனியர்களின் படைகள் 

தடம் தந்த தகைமை – அம்மோனியரோடு போரிடத் தயாரான அரசர் தாவீது

ஆனூனும், அம்மோனியரும் மெசப்பொத்தாமியா, மாக்கா, சோபா என்ற சிரிய நாட்டுப் பகுதிகளினின்று தங்களுக்குத் தேர்ப்படையையும் குதிரைப்படையையும் கூலிக்கு அமர்த்துமாறு, ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பிவைத்தனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தபின் அவன் மகன் அரசனானான். அப்பொழுது தாவீது, “ஆனூனின் தந்தையாகிய நாகாசு எனக்கு அன்பு காட்டியதுபோல், நானும் அவன் மகனாகிய இவனுக்கு அன்பு காட்டுவேன்” என்று கூறி, அவர் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கும்படி தூதர்களை அனுப்பினார். அவர்கள் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை அடைந்தனர். அப்போது அம்மோனியரின் தலைவர்கள் ஆனூனை நோக்கி, “தாவீது ஆறுதல் கூறுபவர்களை உம்மிடம் அனுப்பியுள்ளது உம் தந்தையைச் சிறப்பிப்பதற்கென்று நினைக்கிறீரா? உமது நாட்டைத் துருவி ஆராயவும், அதை நிலை குலையச் செய்யவும் உளவு பார்க்கவுமே அவன் அலுவலர் வந்துள்ளனர் அன்றோ?” என்று கூறினர்.

எனவே, ஆனூன் தாவீதின் அலுவலரைக் கைது செய்து, அவர்கள் தாடியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்பிலிருந்து கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்குச் செய்யப்பட்டதைச் சிலர் வந்து தாவீதுக்குத் தெரிவித்தனர். அவர்கள் மிகவும் கேவலப்பட்டிருந்ததால், தாவீது அவர்களுக்கு ஆளனுப்பி, “எரிகோவில் தங்கியிருந்து உங்கள் தாடி வளர்ந்தபின் திரும்பி வாருங்கள்” என்று கூறினார். அம்மோனியர் தாங்கள் தாவீதின் பகைமையைத் தேடிக் கொண்டதை உணர்ந்தனர். உடனே ஆனூனும், அம்மோனியரும் மெசப்பொத்தாமியா, மாக்கா, சோபா என்ற சிரிய நாட்டுப் பகுதிகளினின்று தங்களுக்குத் தேர்ப்படையையும் குதிரைப்படையையும் கூலிக்கு அமர்த்துமாறு, ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பிவைத்தனர். அவ்வாறே, கூலிக்கு அமர்த்தப்பட்ட முப்பத்து இரண்டாயிரம் தேர்களும் மாக்கா மன்னனின் படைகளும் வந்து மேதபாவுக்கு முன்பாக பாளையம் இறங்கினர். அம்மோனியரும் அவர்களுடைய எல்லா நகர்களிலிருந்தும் திரண்டு வந்து போருக்குத் தயாராயினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜூன் 2025, 12:52