கொர்னபூசா அன்னை மரியா திருத்தலம் கொர்னபூசா அன்னை மரியா திருத்தலம்  

அன்னை ஓர் அதிசயம் – கொர்னபூசா திருத்தலம், இத்தாலி

ஒரு நாள் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத ஓர் இளம் கிராமப் பெண், விசித்திரமான அந்தக் குகையைப் பார்த்து அதில் என்ன இருக்கின்றது என்று அறியும் ஆவலில் உள்ளே சென்று. துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிறிய அன்னைமரியா திருவுருவத்தைப் பார்த்தவுடன் அந்த இளம்பெண்ணுக்கு பேசும் திறனும் காது கேட்கும் திறனும் உடனடியாகக் கிட்டியது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

“கொர்னபூசா அன்னை மரியா திருத்தலம் மிக அழகான திருத்தலம். இத்திருத்தலம் மனிதரின் கையால் கட்டப்பட்டது அல்ல, இறைவனே இதனை அமைத்தார்”. இவ்வாறு சொன்னவர் இந்த கொர்னபூசா அன்னை மரியா மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த புனித திருத்தந்தை 23-ஆம் அருளப்பர். அத்திருத்தலத்தின் ஒரு பகுதியில் இத்திருத்தந்தை தங்கியிருந்த படுக்கையறை, அவரது கட்டில், ஆடைகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கி.பி.1500-ஆம்  ஆண்டில் கட்டப்பட்ட இத்திருத்தலத்தின் வரலாறு அக்காலத்திலிருந்து தொடங்குகிறது. 700 மீட்டர் உயரமுடைய மலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பெர்கமோ மறைமாவட்டத்தைச் சேர்ந்த இந்த Cornabusa திருத்தலத்தின் பெயர் அப்பகுதியில் வழக்கு மொழியாகப் பேசப்படும் பெர்கமாஸ் கோவிலிருந்து வந்துள்ளது. Corna என்றால் பாறை என்றும், busa என்றால் துவாரம் என்றும் அர்த்தம். எனவே Cornabusa என்றால் பாறையில் துவாரம் என்று பொருள். இந்தத் திருத்தலமும் அந்த மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகைதான். ஒரு பெரிய இயற்கையான குகை, உட்புறம் நன்கு செதுக்கப்பட்டு ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த வேலைப்பாடுகளும் இல்லாமல் எளிமையாக, அதேசமயம் அழகாகத் தோற்றமளிக்கும் இந்தக் குகைத் திருத்தலத்தின் நுழைவாயில் ஒரு பெரிய இரும்பக் கம்பித் கதவால் ஆனது. மலையிலிருந்து விழும் நீரூற்றுகளின் தண்ணீர், இங்குப் பீடத்துக்கருகில் ஓர் ஓரத்தில் வடிந்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. இவ்விடம் சுற்றிலும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்குச் செல்லும் பாதை மலைப்பாதை என்பதால் குளிர்காலத்தில் பனி பெய்யும்போது மக்கள் செல்வது கடினம். எனவே நவம்பர் முதல் வாரம் முதல் உயிர்ப்பு ஞாயிறுவரை இத்திருத்தலம் திருப்பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.

இத்தாலியின் கொர்னபூசா அன்னை மரியா திருத்தல வரலாறுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. 1350-ஆம் ஆண்டுக்கும் 1440-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மலைகள் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் Guelfi, Ghibellini ஆகிய இரு இனங்களுக்கிடையே சண்டை நடைபெற்றது. இச்சண்டையின் வன்முறைகள் மற்றும் பிற சேதங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அப்பள்ளத்தாக்கின் Cepino di Sant’Omobono Imagna என்ற குக்கிராம மக்கள் அந்த மலையிலிருந்த பெரிய பாறைக் குகையில் அதாவது கொர்னபூசாவில் அடைக்கலம் தேடினர். அவ்விடம் இருட்டாகவும், ஈரப்பசையாகவும் இருந்தது. மழை பெய்தால் அந்தக் குகையின் உட்புறத்திலும் பாதிப்பு இருக்கும். அதை இன்றும் காண முடிகின்றது. அங்கு அடைக்கலம் தேடிய அக்கிராம மக்கள் தங்களோடு சில அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்து வந்தனர். ஒரு வயதான மூதாட்டி ஒரு சிறிய மரத்தாலான வியாகுல அன்னை மரியா திருவுருவத்தையும் தன்னோடு எடுத்து வந்தார். அது, அன்னை மரியா இறந்த இயேசுவை தனது மடியில் வைத்திருக்கும் பியத்தா திருவுருவமாகும். கெரில்லாக்களுக்குப் பயந்து Cornabusa பாறைக் குகையில் தங்கியிருந்த அம்மக்கள் அப்பகுதியில் அமைதி திரும்பிய பின்னர் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் தாங்கள் காப்பாற்றப்பட்டதற்கு நன்றியாக அந்த Cornabusaவிலே அந்தச் சிறிய பியத்தா திருவுருவத்தை விட்டுச் சென்றனர்.

பின்னர் பல காலம் கடந்து அக்குகைக்குச் சென்ற ஒரு வயதான விவசாயப் பெண், துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த இந்தச் சிறிய அன்னை மரியா திருவுருவத்தைப் பார்த்தார். அங்கேயே அதை விட்டு வைத்தார். அதேசமயம் அப்பெண், சில காலத்துக்கு அடிக்கடி தனியாக அங்குச் சென்று செபித்து வந்தார். அத்திருவுருவம் பற்றி யாருக்கும் அவர் சொல்லவில்லை. ஒரு நாள் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத ஓர் இளம் கிராமப் பெண் தனது ஆடுகளை அக்குகைப் பக்கம் மேய்த்துக் கொண்டிருந்தார். விசித்திரமான அந்தக் குகையைப் பார்த்து அதில் என்ன இருக்கின்றது என்று அறியும் ஆவலில் உள்ளே சென்றார். அங்குத் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த இந்தச் சிறிய அன்னை மரியா திருவுருவத்தைப் பார்த்தார். அந்த இளம்பெண் பேசும் திறனையும் உடனடியாகப் பெற்றார். காதும் அவருக்குக் கேட்டது. உடனடியாக அந்தப் பெண் கிராமத்துக்குச் சென்று  அந்த அன்னை மரியா திருவுருவம் பற்றிச் சொன்னார். பிறவியிலேயே வாய் பேசாத மற்றும் காது கேளாத அந்த இளம்பெண் பேசும் திறனையும் கேட்கும் திறனையும் பெற்றதைப் பார்த்து கிராமத்தினர் அதிசயித்தனர். அனைவரும் அங்குச் சென்று பார்த்தனர். அன்னை மரியாவுக்கென அவ்விடத்தில் ஒரு திருத்தலம் கட்டவும் விரும்பினர். இந்த இளம்பெண் குணமான புதுமைச் செய்தியும், அந்தச் சிறிய திருவுருவம் பற்றிய செய்தியும் அப்பகுதி முழுவதும் பரவியது. குணமான அந்த இளம்பெண்ணின் ஊரான Bedulita ஆலயத்துக்கும், பின்னர் Cepinoவுக்கும் அந்த பியத்தா அன்னை மரியா திருவுருவத்தைக் கொண்டு வருவதற்கு முதலில் எண்ணி அங்கு வைத்தனர்.

கொர்னபூசா அன்னை மரியா
கொர்னபூசா அன்னை மரியா

ஆனால் அந்த பியத்தா அன்னை மரியா திருவுருவம் அன்றிரவே முன்பு இருந்த கொர்னபூசாவில் இருந்ததை மக்கள் கண்டனர். பின்னர் ஆயர்கள், குருக்கள் தலைமையில் மேளம் கொட்டி ஆரவாரமாக அவ்வூர் ஆலயத்துக்குக் கொண்டுவரத் தொடங்கினர். ஆனால் மலையிலிருந்து இறங்கத் தொடங்கியவுடன் அன்னை மரியா திருவுருவத்தின் தலை திரும்பி இருந்ததை அனைவரும் கண்டனர். எனவே அன்னை மரியா தான் முன்பிருந்த இடத்துக்கே செல்ல விரும்புகிறார் என்று உணர்ந்தனர். 1510-ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாளன்று அந்தக் குகையில் திருப்பலி நிகழ்த்த பெர்கமோ ஆயர் அனுமதியளித்தார். இவ்வாறு கொர்னபூசா அன்னை மரியா திருத்தலம் வரலாறானது. இத்திருத்தலம், மற்ற திருத்தலங்கள் போன்று மனிதரால் கட்டப்பட்டதல்ல. இது மலையில் இயற்கையாக அமைந்த குகைத் திருத்தலமாகும். கோடை காலத்தில் திரளான மக்கள் அங்குச் செல்கின்றனர். திருவழிபாடுகளில் கலந்து கொண்டு தங்களது விசுவாசத்தை ஆழப்படுத்தி வருகின்றனர். கொர்னபூசா அன்னை மரியா திருத்தலம் பெர்கமோ மறைமாவட்டத்துக்கு முக்கியமான மரியா திருத்தலமாகும்.

கரவாஜ்ஜோ அன்னைமரி  Our Lady of Caravaggio

கரவாஜ்ஜோ அன்னைமரி திருத்தல வரலாறு 15-ஆம் நூற்றாண்டின் முதல் பாதி பகுதியிலிருந்து ஆரம்பமாகின்றது. கரவாஜ்ஜோ நகரம், வட இத்தாலியின் லொம்பார்தியா மாநிலத்தில், பெர்கமோ மாவட்டத்திலுள்ளது. இது மிலானுக்கு கிழக்கே, 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது. இந்தக் கரவாஜ்ஜோவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜோவனெத்தா வரோலி. இந்தப் பக்தியுள்ள இளம்பெண் ஓர் அருள்சகோதரியாக துறவு வாழ்வைத் தெரிந்தெடுக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை பியத்ரோ வாக்கி என்பவர், தனது மகளுக்குத் திருமணம் செய்து அழகு பார்க்க விரும்பினார். ஜோவனெத்தாவும் தனது தந்தையை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி பிரான்செஸ்கோ வரோலி என்ற விவசாயியை மணந்தார். ஆனால் ஜோவனெத்தாவின் தந்தை நினைத்ததுபோல் அவரது திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமையவில்லை. பிரான்செஸ்கோ நல்ல மனிதராக வாழவில்லை. தனது மனைவியின் வாழ்வைத் துன்பமயமாக்கினார்.

1432-ஆம் ஆண்டு மே 26-ஆம்   தேதி அன்று ஜோவனெத்தாவுக்கு உடல்நிலை  நன்றாக இல்லை. அப்படியிருந்தும், மாடுகளுக்குப் புல்வெட்டி வருமாறு அவரை வயற்காட்டுக்கு அனுப்பினார் அவரது கணவர் பிரான்செஸ்கோ. அன்று நிறைய புல்களை வெட்டி பெரிய கட்டாக கட்டிய பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஜோவனெத்தா. ஒருவேளை ஜோவனெத்தா களைப்பினால் கண் அயர்ந்து தூங்கியிருக்க வேண்டும்.

திடீரென ஜோவனெத்தா நிமிர்ந்து பார்த்தபோது, புனித கன்னிமரியா அவர்முன் நிற்பதைக் கண்டார். அப்போது அன்னை மரியா ஜோவனெத்தாவிடம், நல்ல இதயம் கொண்டிரு. உனது கஷ்டங்கள் விரைவில் மறைந்து போகும். இயேசு, மக்களின் பாவங்களால் வருத்தமடைந்துள்ளார். மக்கள் மனம்வருந்தி தங்களது வழிகளைத் திருத்திக் கொண்டால், ஜோவனெத்தா அவர்களுக்காக கிறிஸ்துவின் இரக்கத்தைப் பெற்றுக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் கிறிஸ்து அவர்களைத் தண்டிப்பார். இவ்வாறு எச்சரித்த அன்னைமரியா ஜோவனெத்தாவிடம், இந்த இடத்தில் தனது பெயரில் ஓர் ஆலயம் கட்டுமாறும் கேட்டுக்கொண்டார். தனது விருப்பங்களை மக்களுக்குச் சொல்லுமாறும் கூறினார். மக்கள் தனது விருப்பத்தின்படி நடந்து கொண்டால் அவர்களைப் பல வரங்களால் ஆசீர்வதித்து புதுமைகளையும் செய்வேன் என்று சொல்லி மறைந்தார் அன்னை மரியா. ஆயினும் அன்னை மரியா அந்த இடத்தில் காட்சி கொடுத்ததன் அடையாளமாக, அவர் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த பாறையின்மீது, தனது  பாதங்களின் அடையாளங்களை விட்டுச் சென்றார். ஆம். அந்தக் கல்லின்மீது அன்னை மரியாவின் பாதப் பதிவுகள் இருந்தன. அதோடு, அந்தப் பாறைக்கடியிலிருந்து சுத்தமான தண்ணீரும் பீறிட்டு அடித்தது.

ஜோவனெத்தா கரவாஜ்ஜோவுக்கு விரைந்து சென்று தான் கண்ட காட்சி பற்றி ஊர் மக்களிடம் விவரித்தார். அன்னை மரியா தனக்குச் சொன்னவைகளையும் எடுத்துச் சொன்னார். ஆனால் ஜோவனெத்தாவின் சொற்களைச் சிலரே நம்பினர். ஜோவனெத்தா கதை கட்டுகிறார் என்று கேலி செய்து அவரைக் கிண்டலடித்தனர். சிறிது நேரம் கழித்து, சிலர் அந்த இடத்துக்குச் சென்று, அந்தப் பாறைக்கடியிலிருந்து ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்த சுத்தமான தண்ணீரில் குளித்தனர். அவர்களுக்கிருந்த உடல் வலியும் மற்ற நோய்களும் மாயமாய் மறைந்து போயின. இவர்களைப் பின்தொடர்ந்து மற்ற மக்களும் அவ்வாறே செய்தனர். அவர்களும் அந்த நீரில் அற்புதம் நடப்பதை அனுபவித்தனர்.  அதன் பின்னர் ஜோவனெத்தாவின் காட்சியையும், அக்காட்சியில் அவர் கேட்ட அன்னை மரியாவின் வார்த்தைகளையும் நம்பத் தொடங்கினர். அந்தச் செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவத் தொடங்கியது. மிலான் நகரக் கோமகன் Filberto Marie Viscontiயின் உதவியுடன் மக்கள் அவ்விடத்தில் திருத்தலம் ஒன்றைக் கட்டினார்கள். மக்கள் கூட்டம் அவ்விடத்துக்கு அதிகமாக வருவதைக் கண்ட அப்போதைய மிலான் பேராயராக இருந்த புனித சார்லஸ் பொரோமியோ, 1575-ஆம் ஆண்டில் பெல்லெகிரினியோ பெல்லெகிரினி(Pellegrino Pellegrini) என்ற கட்டிடக் கலைஞரின் உதவியால் அந்தத் திருத்தலத்தைப் பெரிதாகக் கட்டினார். இதற்குப் பின்னர் சில சீர்திருத்தங்களும் இதில் செய்யப்பட்டன. இதுவே தற்போது வெகு அழகாக புகழுடன் விளங்கும் கரவாஜ்ஜோ அன்னை மரியா திருத்தலம் ஆகும்.

இன்றும் ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகள் அங்குச் சென்று அன்னை மரியாவின் அருள்வரங்களைப் பெற்று மகிழ்கின்றனர். கரவாஜ்ஜோ அன்னைமரி விழா, அன்னை மரியா காட்சி கொடுத்த மே 26-ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. அந்த நவநாள் காலங்களில் மக்கள், சிறப்பாக, வட இத்தாலியிலுள்ள மக்கள் திருப்பயணமாகச் சென்று வருகின்றனர். அன்னை மரியா, ஜோவனெத்தாவை ஆசீர்வதிப்பதுபோல் உள்ள திருவுருவம் விரிவுபடுத்தப்பட்ட இத்திருத்தலத்தில், அதுவும், அன்னை மரியா காட்சி கொடுத்த அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னை மரியாவின் பாதத்துக்குக் கீழேயிருந்து சிறிய தண்ணீர் ஓடை இன்றும் ஓடுகிறது.

துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஜோவனெத்தா குடும்பத்தில் அமைதி நிலவும் என்றும், அச்சமயத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த அண்டை மாநிலங்களின் மக்கள் மத்தியில் ஒப்புரவு ஏற்படும் என்றும், 1436-ஆம் ஆண்டு முதல் 1445-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற பிளாரன்ஸ் பொதுச்சங்கம் மூலம் கிழக்கு மற்றும் மேலைத் திருஅவைகளுக்கு இடையே ஒப்புரவு ஏற்படும் என்றும் அன்னை மரியா ஜோவனெத்தாவுக்குக் காட்சி கொடுத்தபோது கூறினார்.

இன்று அதிகம் தேவைப்படுவது ஒப்புரவு. தனிமனிதர் வாழ்விலும் சரி, குடும்பங்களிலும், சமூகங்களிலும், நாடுகளிலும், நாடுகளுக்கு இடையேயும் சரி, இன்று ஒப்புரவு அதிகம் தேவைப்படுகிறது. புனித பவுல் மனந்திரும்பிய விழாவான வருகிற வெள்ளிக்கிழமையன்று கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரம் நிறைவடைகின்றது. நூற்றாண்டுகளாகப் பிளவுபட்டு இருக்கும் கிறிஸ்தவ சபைகள் தங்களுக்குள் ஒப்புரவாகி, ஒன்றிணைந்து கிறிஸ்துவுக்குச் சாட்சி சொல்ல வேண்டுமென்பதே அனைவரின் ஆவல். திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை 14-ஆம் லியோ ஆகியோரும் இந்த ஒன்றிப்பை வலியுறுத்தி வந்துள்ளனர். தனிமனிதர்கள் தங்களுக்குள்ளே ஒப்புரவாகி ஓர் இணக்கமான வாழ்வு வாழ வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் தன்னை மன்னித்து தனக்குள் சமாதானமாக வாழ வேண்டும். அப்போதுதான் அவர் மற்றவர்களோடு சமாதானமாய் வாழ்வார். அப்போதுதான் அவர் வாழும் குடும்பமும், சமுதாயமும் சமாதானமாய், ஒப்புரவுடன் வாழும். அத்தகைய இடத்தில் அன்பும் மகிழ்ச்சியும் இருக்கும். இவ்வேளையில் அமைதிக்காவும், ஒப்புரவுக்காகவும் ஏங்கும் மத்திய கிழக்கு நாடுகளை, குறிப்பாக சிரியா நாட்டை, பாலஸ்தீனத்தை, போரிடும் நாடுகளை, எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவும் இந்தியா, பாகிஸ்தானை நினைத்து கரவாஜ்ஜோ அன்னைமரியிடம் செபிப்போம். தாயே, அம்மா, எங்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அருளும். சபைகளுக்குள், குடும்பங்களுக்குள் ஒற்றுமையைத் தாரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜூலை 2025, 14:37